நகைச்சுவை என்பது சிரிக்க வைத்துவிட்டு கலைந்து போவதல்ல. கேட்கும்போது உள்ளத்தைக் கிள்ளி உதடுகளை விரித்து இழுந்து விழுந்து சிரிக்க வைத்தால் அதற்குப் பெயர் நகைச்சுவை என்கிறோம்.
தவறு. சரியான நகைச்சுவை என்பது சிரிக்க வைத்து சிரித்தவனை சிந்திக்கவும் வைக்கவேண்டும்.
பொதுவாக இலக்கியப் பேச்சாளர்கள் பலரும் இம்முறையைக் கையாள்வதைக் காண்கிறோம்.
சிரிப்பு தோன்றும்படி பேச நகைச்சுவை மட்டுமே வேண்டும் என்பதல்ல கிண்டலடித்தும், மக்களைச் சிரிக்கவைப்பதையே பெரிதும் காண்கிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக பேச்சாளரை தரக்குறைவாகப் பேசவைத்துவிட்டுத் தரை குலுங்கச் சிரிக்கும் கூட்டத்தையும் பார்க்கிறோம்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களிடம் காணாதவற்றையெல்லாம் இன்றைய அரசியல் கூட்டங்களில் பரவலாகப் பார்க்கமுடிகின்றது.
கூட்டத்தைச் சிரிக்க வைக்க காமராஜர் எப்போதும் முயன்றதில்லை. அதுவும் கீழ்த்தரமான கேலி, கிண்டல், நளி, வசை என எதிலும் ஈடுபடாததால்தான் இன்று ஈடு இணையற்ற தலைவராகத் திகழ்கிறார்.
அதற்காக நகைச்சுவை உணர்வே இல்லாதவர் என்று நம்பிவிட வேண்டாம். நாட்டு எண்ணமும் நாடு பற்றிய சிந்தனையுமாகவே இருந்ததால், கூட்டத்தை நகைச்சுவையால் ருசிப்படுத்த வேண்டும் என்ற நாட்டமே இல்லாமல் இருந்தார் எனலாம்.
ஆனாலும் அவரது பேச்சில் இழையோடும் நகைச்சுவை அவரைப் போலவே காலங்கடந்து வாழும் வயது பெற்றவை எனலாம். அவரது நகைச்சுவை சிந்தனை முடிச்சாக இருக்கும்.
சொல்லும்போது சிரிக்க வைத்துச்சொல்லி முடிந்ததும் சிந்திக்க வைக்கும் செய்திகள் அதற்குள் அடங்கியிருக்கும்.
ஒரு முறை காமராஜர் அவர்கள் ஒரு கிராமத்துக்குச் செ
ன்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத் தலைவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர்.வந்தவர்கள் பவைவரிதம் ‘ ஐயா எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்லப் பாதை அமைத்துத் தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள்
உடனே தலைவர் சிரித்துக் கொண்டே ” நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை தேடுகிறீர்களே?” என்றார். அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
சாதாரண நகைச்சுவை என்றால் சிரித்துவிடுவார்கள். இதை அவ்வாறு விட்டுவிட முடியுமா?
ஒரு அரசியல்வாதி என்றால், அவன் வாழ்பவனுக்கு வழி தேடுபவனாக இருக்க வேண்டும் என்பதை எவ்வளவு எளிமையாக உணர்த்திவிட்டார்.
உள்ளத்தில் இல்லாதது உதட்டில் உலா வராது. தலைவரின் உள்ளமெல்லாம் வாழும் மனிதனுக்கு வாழும் வழிதேடும் ‘சிந்தனை’ என்பதை, வாழும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அது ஒரு தேர்தல் காலம். நாடெல்லாம் அரசியல் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேடைதோறும் வாக்குறுதிகளை வாரிவாரி வழங்கிக் கொண்டிருந்தனர்.
காங்கிரஸ் மேடைகளிலும் சின்னச் சின்ன பிரச்சார வெடிகள் சில நேரம் வாக்குறுதிகளை வெடித்து மேடையை சிவகாசியாக்கிவிடும்.
ஒருமுறை தலைவர் மேடையில் இருக்கும்போதே ஒருவர், ”காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால் உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்” என்று பேசினார்.
இப்போது பெருந்தலைவர் பேச வருகிறார். பேச்சின் தொடக்கமே உழுபவனுக்கு நிலம் சொந்தமாகண்ணும்ணு நீங்க கேட்கறீங்க. சரி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அப்படியே தந்துவிதுவதா வச்சிக்குவோம்.அப்புறம் அறுக்கிறவன் அறுக்கிறவனுக்கு நெல் சொந்தம் என்பான். அப்புறம் அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கு அரிசி சொந்தம் என்பான்?”
கூட்டம் பலமாகச் சிரித்தது. நடக்காததை நாடக வசனமாக நாவினிக்கப் பேசுவதை நம்பக் கூடாது என்றும் பேசுகிறவர்களும் சிந்திக்க வேண்டும், பேச்சைக் கேட்கிறவர்களும் சிந்திக்க வேண்டும் என்பதை எளிதான நகைச்சுவைக்குள் ஏற்றிப் பேசும் லை காமராஜர் அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலையாகும்.
கேட்பவன் சிந்திக்க தொடங்கிவிட்டால் பேசுபவனும் சிந்தித்துப் பேசத்தொடங்கிவிடுவான்.
எனவே வாக்காளர்களை நோக்கி வாயினிக்க வாக்குறுதிகளை வாரி வீசும் அரசியல்வாதிகள் எப்படியாவது படிக்க வேண்டிய பாடம் இதுவாகும்.
Leave a Reply