ஒரு தலைவனின் தகுதிகளில் தலையாயது அவனது நாட்டின் புவி இயல் அறிவுதான். மண்ணின் வளத்துக்குத் தக்கவே மனிதனின் மனவளம் அமையும் என்பதால் மண்ணைத் தெரிந்திருந்தால் அம்மண்ணின் மனித வாழ்வையும் ஊகித்து உணரலாம்.
நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன? அவை எங்கு தோன்றி எந்தக் கடலில் கலக்கின்றன? இடையில் தோன்றி இடையில் முடியும் ஓடைகள் எத்தனை? பேராறுகள், சிற்றாறுகள் எவை எவை? மலைவளம், அம்மலையில் உள்ள நீர்த்தேக்கங்கள், அதன் பாசன வழிகள், கடல் வளம், கனிம வளம் ஆகியவை பற்றிய அறிவு இருந்தால் மட்டுமே ஒரு தலைவனுக்கு தேசிய சிந்தனை வரும்.
அதுபோல, ஊர்கள், பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாவட்டங்களில் எந்த ஊர்கள் எந்தெந்த மாவட்டங்களில் உள்ளவை? போன்ற புவியியல் புலமை இருந்தால் மட்டுமே அரசியல் நடத்தும் ஆளுமை வரும்.
சட்டசபையில் கேள்வி கேட்டால் அதிகாரிகளை அண்ட வேண்டிய அவலம் இன்று. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் அது அதிகாரிகளுக்கே தெரியும் என்று அன்னியமாகும் தலைவர்கள்.
மேலும் சொந்த நாட்டின் புவியியல் அறிவு இருக்குமானால் அதிகாரிகள் அரசியல்வாதிகளை ஏமாற்ற முடியாது.
அரசியல்வாதிகள் அனைவரும் முதலில் தனது பணிக்குட்பட்ட அல்லது தனது சேவைக்குட்பட்ட ஊர்களையாவது அறிந்திருக்க வேண்டும்.
எல்லோரும் எம்.எல்.ஏ. ஆகும் தகுதிக்குத் தக்கவாறு இருக்க வேண்டும் என்றுதான் பதிவுக் கட்டணத்தை அரசாங்கமே குறைத்து நிர்ணயித்துள்ளது. நமது கட்சிகளோ பத்தாயிரம், இருபதாயிரம் என்று பதிவுக் கட்டணத்தையும் லட்சக்கணக்கில் கட்சி நிதியையும் பெற்று அவரை வேட்பாளராக்கி விடுகிறது.
அப்புறம் என்ன? அவர் எம்.எல்.ஏ. ஆகி கொடுத்தப் பணத்துக்கு வட்டி கணக்கு பார்த்து விடுகிறார். அவ்வளவுதான்.
இப்படித் தேர்வு நடக்கும்போது அரசியலில் ஈடுபடுபவர்க்கு புவிஇயல் அறிவும், நாடு பற்றிய புள்ளி விபரங்களும் எபெபடித் தெரியும்?
இந்தியா – பாகிஸ்தான் போரின்போது பெருந்தலைவர் காமராஜர் எல்லைக்குச்சென்று நமது வீரர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டப் புறப்பட்டார்.
அப்போது தலைவர் சென்றிருந்தது பஞ்சாபில் உள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதி. போர் மும்முரமாகியிருந்த நேரம் அது.
அங்கு சென்று வீர்ர்களை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் கர்மவீரர் பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த படைவீரர்கள் சிலர், ”வணக்கம்” என்றனர்.
உடனே அவர்களிடம் தலைவர் பேச்சுக் கொடுத்தார். ஊர் தெரு விவரம் கேட்டார். அவ்வீர்ர் வேலூர் என்றார். உடனே தலைஏர் அவ்வூரின் முக்கியமான தலைவர்கள் மற்றும் செயல்பாடுகளைக் கூறி அந்த ஊர்ப்பக்கம் சென்றால் உங்களைச் சந்தித்ததைத் தெரிவிக்கிறேன் என்று கூறி அவ்வீர்ரை மகிழ்ச்சிபடுத்தினார்.
ஒரு முறை தலைவர் ஒரிசாவுக்குச் சென்றிருந்தார். அங்கே ஒரு தமிழ்நாட்டு நிருபரைச் சந்தித்தார். எதார்த்தமாக அவரிடம் எந்த ஊர் என்று கேட்டார்.
அவரும், ”தென் ஆற்காடு மாவட்டம் ஐயா” என்றார்.
”தென்னாற்காட்டில்”
‘ஒரு சிற்றூர் ஐயா’
‘சிறிய ஊரா? பெயர் என்ன?’
‘பெயர் தெரியும் அளவு பெரிய ஊர் இல்ல – களவூர்’ என்றார்.
”தெரியுமே” என்றார் தலைவரும் நிருபருக்கு ஆச்சரியமாக இருந்தது களவூர் மிகச் சிறிய ஊர். அதையும் தெரியும் என்கிறாரே என்று ஆச்சரியம்..
”களவூர் நீங்கள் சொல்வது போல் இப்போது சிறு கிராமம் அல்ல. அது விவசாய வளம் உடைய ஊர். அந்த முன்பு காங்கிரஸ்க்கு பெரிய ஆதரவு இருந்தது. இப்போது இல்லை’ என்று பெருந்தலைவர் பேசியதும் நிருபர் தனித்தகுதிகளை அறிந்து பெருந்தலைவரைப் பற்றி பெரிதாக எழுதினார்.
இன்று வளரும் அரசியல்வாதிகள் தனது தகுதியை உயர்த்த வேண்டும் என்று விரும்பினால் தாங்களும் தலைவர்போல் தங்களைப் புள்ளி விவரப் புலிகளாக்கிக் கொள்ள வேண்டும்.
ARR
அந்தக்காலமெல்லாம் இனி வருமா..?
எப்படிப்பட்ட மனுஷன் அவர்.? அவரைத் தோக்கடிச்ச பாவத்தை இன்னும் அனுபவிக்கிறோமே..!