காமராஜரின் சீரிய சிந்தனைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெறியுடன் செம்மையாய் வாழ வழிவகுக்கும் வித்த்தில் அமைந்துள்ளன. அவரது சிந்தனையில் உதித்த சீரிய கருத்துக்களை இப்போது காண்போம்.

பொறுமையைக் கடைப்பிடியுங்கள்

இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.

தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள். அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

“பதறும் காரியம் சிதறும்” என்பார்கள். திட்டமிடாமல் அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் முடிவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், மேலும் அவமானங்களை உருவாக்கும்.

இதனை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜர் நிதானமாகச் செயல்படுவதற்கு எளிய வழியாக “ஆகட்டும் பார்க்கலாம்” என்னும் வார்த்தைகளை உபயோகித்து வந்தார்.

எந்தக் காலத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெருந்தலைவரின் சிந்தனையாகும்.

வீண் வம்புக்கு விலகிவிடுங்கள்

நம்மீது குறை சொல்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். நம்மீது வேண்டுமென்றே குறை சொன்னால் எரிச்சலோடு கோபமும் சேர்ந்து வரும். சில வேளைகளில் மற்றவர்கள் வீண் வம்பு செய்து நம்மைச் சண்டைக்கு இழுப்பார்கள்.

இதனால் நிலைகுலைந்து நிதானம் இழந்து செயல்படவும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான காலகட்டங்களில் பிரச்சினை கொடுப்பவரை விட்டு விலகி இருப்பது விவேகமான செயல் ஆகும்.

வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நேரம் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தர வில்லை. பல்வேறு வித்த்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்கள்.

குமரி அனந்தன் சமாளித்துப் பார்த்தார். முடியவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்ட குமரிஅனந்தன், முடிவில் பெருந்தலைவர் காமராஜரிடம் சொன்னார்: மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்” என்பதைச்சொன்னால் காமராஜர் கண்டிப்பாக அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என எதிர்பார்த்தார் குமரிஅனந்தன்.

காமராஜர் நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன் என்று சொன்னார். பெருந்தலைவரின் சீரிய வழிகாட்டல் கேட்ட குமரி அனந்தன் அமைதியாகிவிட்டார்.

வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகிவிடு என்பது கர்மவீர்ர் காமராஜரின் அன்புக் கட்டளை ஆகும்.

படிக்கும் போது அரசியல் வேண்டாம்

அரசியல் என்பது அறிவுள்ளவர்களைக் கூட சில வேளைகளில் அழித்துவிடும். அதுவும் மாணவப் பருவத்தில் குறிப்பாக இளம்பருவத்தில் அரசியலில் மாணவர்கள் ஈடுபடும் போது உணர்ச்சிகள் மேலோங்கி இருப்பதால் படிப்பு பாழாக வாய்ப்புள்ளது. கவனம் சிதறிவிடுவதால் படிப்பில் அக்கறை இல்லாமல் கோஷ்டி சேர்ந்து படிப்பை நிறுத்திக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

மாணவர்கள் தம்மோடு இருந்தால் அரசியலில் தனிபலம் கிடைக்கும் என்று இளம் இரத்தங்ளைத் தனது கட்சியின் வளர்ச்சிக்காக உரமாக்கிச் செயல்படுபவர்களும் உண்டு. ஆனால் காமராஜர் அரசியல் தலைவராக இருந்தாலும் மாணவர்கள் எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பதைத்தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.

ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டுப் பிரச்சனைகளைச் சந்தித்திருந்தனர். அவர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசரைக் காண்ச் சென்னை சென்றார்கள். அவர்களிடம் காமராஜர்.

படிக்கும்போது மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்; படிப்பை முடித்த பின்பு எந்த அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடுங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர்கள் பிரச்சனைக்குத்தீர்வு ஏற்பட உதவினார்.

படிக்கும்போது அரசியல் வேண்டாம் என்பது படிக்காத மேதையின் பண்புள்ள சிந்தனையாகும்.

உழைத்து வாழ வேண்டும்

இப்போதெல்லாம் உழைக்காமல் பிழைக்க வேண்டும் என்பதைச் சிலர் மனதில் கொண்டு சும்மா இருக்கிறார்கள். உடலுழைப்பு செய்யவும் தயாராக இல்லை. மூளை உழைப்புக்கும் தயாராக இல்லை. எனவே சோம்பலுடன் திரியும் கூட்டம் அதிகமாகிவிட்டது. ஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அந்த நாட்டின் மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.

ஒருமுறை ஆவடியில் காங்கிரஸ் மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், கலந்து கொண்டார். மாநாட்டில் கலந்து கொண்ட பெருந்தலைவர் காமராஜர் “கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை.

காந்திஜி காட்டிய வழியில் சமதர்மச் சமுதாயத்தை அமைப்போம்” எனப்பேசி மக்களின் மனதில் இடம்பெற்றார்.

உழைத்து வாழ வேண்டும் என்பது உத்தமர் காமராஜரின் சத்திய மொழியாகும்.

வீரமுடன் வாழுங்கள்

“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.

“அஞ்சி அஞ்சி சாவார் – அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”

என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.

நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக – விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.

1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது சிலர் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.

மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.

வீரமுடன் வாழ்வதே விவேகமான செயலாகும் என்பது “பாரதரத்னா” காமராஜரின் சீரிய சிந்தனையாகும்.

எளிமையோடு இருங்கள்

எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.

மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் “நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்” என்றார்.

வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் “நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்” என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார்.

சட்டத்தை மதித்திடுங்கள்

முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக்காரில் திரும்பினார்.

சென்னையில் ஒரு வழிப்பாடை ஒன்றில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. எனவே உடனே காமராஜர் காரை நிறுத்தச் சொன்னார்.

“ஏன் கார் செல்ல அனுமதியில்லாத பாதையில் செல்கிறார்? காரைத்திருப்பு” என டிரைவரிடனம் கண்டிப்புடன் சொன்னார். “ஐயா, இந்த ராத்திரி நேரத்தில் போக்குவரத்து ரொம்ப குறைவாகத்தானே இருக்குது. இந்தப்பாதை வழியே போனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம்” என்றார் டிரைவர்.

“இரவு நேரமென்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்று இப்போது போனால் இது எப்போதும் பழக்கமாகிவிடும்.

சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?” என டிரைவரிடம் கூறிவிட்டு ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார்.

“சட்டம் இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும்” என்பது காமராஜரின் எண்ணமாகும்.

ஒற்றுமையோடு வாழுங்கள்

கருத்து வேறுபாட்டினால் ஒருவருக்கொருவர் சண்டைப்போடுவது நல்லதல்ல. ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்தது. முன்னேற விரும்புகிறவர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். என்பதை வலியுறுத்தினார் காமராஜர். 1960ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில்பேஇய கமராஜர்,

“குறுகிய உணர்ச்சிகளில் மனதைப் பறிகொடுத்துச் சண்டைப்போடக்கூடாது. இருப்பவர்கள் வேண்டுமானால் தாராளமாகச்சண்டைப்போட்ட்டும்; பணக்காரர்களுக்கு வேறு வேலையில்லை யென்றால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளட்டும். எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் எல்லோரும் ஒரே இனம், அதாவது பட்டினிப் பட்டாளம்: எங்களைச் சண்டைக்குக் கூப்பிடாதீர்கள்.

வடக்கிலிருந்தாலும், தெற்கிலிருந்தாலும், தமிழன் என்றாலும் வங்காளி என்றாலும் ஏழைகள் எல்லோரும் ஒரே இனம்தான். நமக்குச்ச்ணைட் போட நேரமில்லை. நான் முன்னேற விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

“ஒற்றுமையே முன்னேற்றத்திற்கு அசைக முடியாத நம்பிக்கை அடித்தளம்” என்பது காமராஜரின் வாக்கு.

உழைப்புக்கு ஏற்ற கூலி கேளுங்கள்

காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள். வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.

‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?

வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். கடைசியில் சோறு சொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.

“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர் இந்தச் சம்பவம் காமராஜர் முதலமைச்சராகப் பணியாற்றிபோது சிவகிரியில் நடந்தது ஆகும்.

“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.

லஞ்சம் வாங்காதீர்

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரும், எழுத்தாளர் சாவியும் ஊட்டியில் சந்தித்தார்கள். முதலமைச்சராக இருந்த காமராஜர், எழுத்தாளர் சாவியை அருகில் அழைத்து “ஊட்டி ஏரியை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் அழகு படுத்தணமுமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என நான் வந்து பார்க்க வேண்டுமாம். வாருங்கள் படகில் போய்வருவோம்” என்றார்.

படகு சவாரி செய்யும்போதே “ஊட்டினா.. அது பணக்கார்ர்களுக்கு மட்டும் உரிய இடம் என்ற நிலை இருக்கக்கூடாது. அதை ஏழைகளும் அனுபவிக்க வேண்டும். இந்த ஏரியைச்சுற்றி நிறைய மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவே சின்ன காட்டேஜ்கள் கட்டி குறைந்த வாடைக்குக் கொடுக்க வேண்டும். சமையலுக்கு பாத்திரங்கள் கூட அரசாங்கமே கொடுத்திடனும். வாடையாக பத்து ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்கூடாது.

ஆனால் படுபாவிங்க இங்கே மரத்தைக்கூட வெட்டிவிடுகிறார்கள். மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இருந்த என்ன பலன்? கலெக்டரைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போட்டுவிட்டால்பதும் ‘வெட்டிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடுவார்ள் என்ற மிகவும் வருத்தத்தோடு காமராஜர் சொல்லிக்கொண்டே போனார்.

படகு போய்க்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் “அதோ அங்கே பாருங்கள் இப்போதுதானே இதைப்பற்றிச் சொன்னேன்” என்றார் காமராஜர்.

அங்கே பார்த்தால்… ஒருபெரிய மரம் வெட்டப்பட்டு சாய்ந்து கிடந்தது. கலெக்டருக்கு நல்ல சாப்பாடு கிடைத்துவிட்டதாக நினைத்தாராம் எழுத்தாளர் சாவி.

அரசப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டு தகாத செயல்களுக்கு துணை போக்க்கூடாது” என்பது காமராஜரின் கொள்கையாகும்.

ஏழைகளுக்கு உதவிடுங்கள்

முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர், சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்கு வைத்துக்கொண்டார்.

கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்த தொண்டரைக் காமராஜர் அழைத்து “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார். அந்தத் தொண்டர் அதிர்ந்து நின்றார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே” என மனம் வருந்தினார்.

“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்..இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்ற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.

“ஏழைகளுக்கு உதவிடுங்கள்” என்ற கருத்தை அழகாக விளக்கினார் காமராஜர்.