ராஜாஜி

”தமிழ் நாடு காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காமராஜர் வயதில் சிறியவர். ஆனால் அரசியலில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர். அவர் அதிகமாகப் பேசமாட்டார். பேச்சை விடச் செயலில் தான் அவருக்குஆர்வம் அதிகம். அவரை நமது தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பது மிகவும் பொருத்தமானதே. அரசியலில் இளைஞர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என்பதற்கு காமராசர் ஒரு உதாரணமாகும். அவரை மனதரப் பாராட்டி தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்படி வாழ்த்துகிறேன்.”

ஜவஹர்லால் நேரு

”உயிரோடு இருப்பவர்களுக்குச் சிலை அமைப்பதை நான் விரும்புவதில்லை. ஆனால் இதற்கு விதிவிலக்காக இன்று காமராஜ் சிலையை ஏன் திறந்து வைக்கிறேன்? காமராஜ் என் நண்பர். மக்களிடையே தோன்றிய மக்கள் தலைவர். தான் ஏற்றுக் கொண்ட பொறுப்பை நிறைவேற்றத்தக்க ஆற்றல் கொண்ட தலைவர். உண்மையான தலைவர்.”

பெரியார் ஈ.வே.ரா

”இது பச்சைத் தமிழர் காமராஜரின் ஆட்சி கல்விக்காக அவர் போட்ட திட்டங்கள் மகத்தானது. இன்னும் பத்து ஆண்டுகளுக்குக் காமராஜர் ஆள வேண்டும். அப்போதுதான் தமிழ் நாட்டில் கல்வியறிவு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்படும்.”

பாவேந்தர் பாரதிதாசன்

”சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தின் சிறப்பைக் காமராசர் ஆட்சியில் காண்கிறேன்.”

நேருஜி

”தனது ஓயாத மக்கள் தொண்டினால், சென்னை மாநிலத்தில் மட்டுமல்லாது, பாரதம் முழுதும் மேன்மையை அடைந்து இருக்கிறார் காமராஜர்.

மக்கள் தொண்டில் காமராஜரை மிஞ்சியவர்களைப் பார்த்தல் அரிது. திறமை, நல்லாட்சி இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திறகுத் தலைவர் என்ற முறையில் அவர் சென்னை மாநிலத்திற்கு முதல் மந்திரியாக இருக்கிறார்.”

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்

”பேரறிஞர் அண்ணா என் தலைவர். கர்மவீர்ர் காமராஜர் என் வழிகாட்டி”.

கலைஞர் கருணாநிதி

“தியாகச்சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்.”

நடிகர் விஜயகாந்த்

காங்கிரஸ்காரரான என்னுடைய தந்தை, காமராஜரின் பக்தர், இருவர் மீதும் உள்ள ஈடுபாடு காரணமாக, வானத்தைப்போல படத்தில் கதர் வேட்டி, சட்டையோடு நடித்தேன். இனையத் தலைமுறைக்கு காமராஜரைப் பற்றித் தெரிய வேண்டும்.

ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்

”மீண்டும் நான் பாரத நாட்டிற்கு சுற்றுப் பயணம் வரும் போது சென்னைக்கு விஜயம் செய்யும் போது தாங்களே முதலமைச்சராக இருப்பீர்கள்” என்று இங்கிலாந்து மாகராணியின் கணவர், எடின் பரோகோமகன் காமராஜரைக் கை குலுக்கி வாழ்த்திச் சென்றார்.

”திரு. காமராஜர் தமிழ் நாட்டின் தலைசிறந்த காங்கிரஸ் ஊழியர். அவர் எனது கட்சிக்கார்ர் மட்டும் என்று எண்ண வேண்டாம். என்னுடைய ஆலோசகர் அவர்.”

”காமராஜரின் ஆட்சியின் கீழ் தமிழ் நாடு பல துறைகளில் முன்னேற்றம் அடைந்து இருப்பதை நான் காண்கிறேன். தமிழ் நாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பக்தவத்சலம்

காமராஜர் முதல் மந்திரியாக இருந்த போது தனது அமைச்சரவையில் உள்ள மந்திரியின் இலாக்காக்களில் தலையிடுவதே கிடையாது. இதுவே அவருக்குப் பெருமை தேடித்தந்தது.

திருமதி எஸ். பாலசுந்திரம்மாள்

”காமராஜ் என்னுடைய கணவருடன் சேர்ந்து தேச சேவையிலே 20 ஆண்டுக் காலத்திற்கு மேலாக ஈடுபட்டு உழைத்த போது தியாகம், உணர்ச்சி, பொது ஜன சேவை முதலிய பண்புகளுடன் பணியாற்றினார். என்னுடைய கணவருக்கு நல்ல துணையாக இருந்து காங்கிரஸ் ஸ்தாபனத்தைத் தமிழ் நாட்டிலே பலப்படுத்துவதற்கு ஓயாது பாடுபட்டு வந்தார்.

காமராஜர் தமிழ்நாட்டின் முதல் மந்திரியாகப் பதவி வகிப்பது என்னுடைய கணவரின் கனவு பலித்ததற்குச் சான்றாகும்”

வினோபாவே.

காமராஜரின் ஆட்சியில் ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த ஒருவரையே, தமிழ் நாட்டின் அறநிலையத் துறை அமைச்சராக ஆக்கினார். இது ஏன்?

அந்தக் காலத்தில் ஹரிஜனங்கள் ஆலயங்களில் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. காந்திஜி, ராஜாஜி போன்றவர்கள் ஹரிஜனங்களுடன் ஆலயம் பிரவேசங்கள் செய்து அந்த வழக்கத்தைப் பழக்கத்தை முறியடித்தார்கள்.

ஒரு ஹரிஜன் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பதால், அர்ச்சகர்கள், தர்மகர்த்தாக்கள் எல்லோரும் பூர்ண கும்ப மரியாதை செய்து அவர்களே அந்த ஹரிஜனைக் கோவிலுக்குள் அழைத்துச் செல்வார்கள் அல்லவா. அதற்காகத்தான் அப்படிச் செய்தாராம் காமராஜர்

”நீங்கள் தான் உண்மையான மக்கள் தலைவர்”

திருவிதாங்கூர் மன்னர்.

”காமராஜர், ஏழைகளிடம் எல்லையற்ற அன்பு கொண்டவர். எந்நேரமும் ஏழைகளை முன்னேற்றத்தைப் பற்றியே சிந்திப்பவர்.”

ஆச்சாரிய கிருபாளினி

”சுதந்திரம் வந்த பிறகும், எளிமையாக வாழ்ந்த ஏழைத்தலைவர் காமராஜர் ஆவார். அவர் மறைவினால் நம் நாடு ஒரு சிறந்த தேசபக்தரை இழந்து விட்டது.”