1954 – ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13-ஆம் நாளான தமிழ்ப்புத்தாண்டு நாளில் தமிழகத்தின் புதிய முதல்வராகக் காமராஜர் பொறுப்பேற்றார்.

பனகல் அரசர், பொப்பில அரசர், டி.பிரகாசம், ராஜாஜி ஆகிய மிகவும் படித்தவர்களும், பணக்காரர்களும் இருந்த இடத்தில் காமராசரை யாராலும் எண்ணிப்பார்க்க முடிவில்லை. ஏன் காமராஜரே கூட எண்ணிப் பார்க்கவில்லை. எனவே முதலைச்சர் பொறுப்பை ஏற்க அவர் தயங்கினார். காங்கிரஸ் சட்டசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் காமராஜருக்குப் பதவியை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருந்தது. சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து கொண்டு, முதல் மந்திரியாக இன்னொருவரை நியமித்துக் கொள்ளலாமா என்று மேலிட காங்கிரஸ் தலைவர்களுடன் காமராஜர் ஆலோசனை செய்தார்.

சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தான் முதல் மந்திரியாய் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் கூறிவிட்டது. காமராஜர் முறைப்படி கல்வி பயின்றவரோ அல்லது நிர்வாக அனுபவம் வாய்ந்தவரோ அல்லர் எனினும் அவர் முதல்வர் தேர்தலில் போட்டியிட்ட பிறகு இனிமேல் வேறுவிதமாக முடிவு செய்யக்கூடாது என்று நேரு உறுதியாகக் கூறினார். மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்திருந்த நேருவின் தீர்க்கமான சிந்தனையால், தமிழக முதல்வராகக் காமராஜர் பதவி ஏற்றார்.

முதலமைச்சர் தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியிட்டது. வெற்றி பெற்றது, பின்னர் பதவியை ஏற்பதில் தயக்கம் காட்டியது. போன்ற நடவடிக்கைகள் பதவியின் மேல் காமராசருக்கு நாட்டமில்லை என்பதைத்தான் காட்டியது. அவர் முதல்வர் தேர்தலில் போட்டியிட்டது கூட ஒரு தற்செயலாக நடைபெற்றது என்பதாகத்தான் கருத வேண்டியுள்ளது.

ராஜாஜியின் குலக்கல்வித்திட்டம்

காமராஜர் முதலமைச்சராக வருவதற்கான முதல் படியாக அமைந்தது ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் ஆகும். 1952-ஆம் ஆண்டு தமிழக முதல்வரான ராஜாஜி புதிய கல்வித்திட்டம் ஒன்றை வெளியிட்டார். அதன்படி கிரமப்புறத்தில் தொடக்கக்கல்வி பயிலும் மாணவர்கள் முழுநாள் படிப்பதற்குப் பதில், அரைநாள் படித்துவிட்டு மீதி பாதி நாள் தத்தம் குலத் தொழிலைச் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தங்கள் குலத் தொழிலும், ஓரளவு எழுத்தறிவும் பெறும் வகையிலான இதனைக் குலக் கல்வித் திட்டம் என அழைத்தார். இந்தத்திட்டம் பெரியாரைப் பொங்கி எழச் செய்த்து. குலக்கல்வித்திட்டத்தைக் க்ண்டித்து அறிக்கை எழுதி தனது விடுதலை நாளிதழில் பெரியார் வெளியிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் அண்ணா கண்டனம் தெரிவித்தார். பகுதி நேரக் கல்வி ஏற்பாடு அமல் செய்யப்பட்டதும், சாதி முறையை நீடித்திருக்கச் செய்ய ராஜாஜி விரும்புவதாக்க்கூறி இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. ராஜாஜி முதலமைச்சராக நீடிப்பதையும், ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தையும் எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. குலக்கல்வித் திட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் குலக் கல்வி முறையை ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளுக்குப் பின்னரும் புதிய கல்வித் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறையவில்லை. அதிருப்தி அடைந்த பல காங்கிரஸ்கார்ர்களும், ராஜாஜி எதர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ராஜாஜியின் மீது நம்பிகைக் இல்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியினர் முடிவு செய்தனர். பெரும்பான்மையும் கிடைத்தது. நம்பிக்கை இருக்கிறது என்ற தீர்மானத்துக்குக் கையெழுத்து வாங்க ராஜாஜி கோஷ்டியினர் முயன்றனர். இதற்கு ஆதரவு கிடைக்காத்தால் நெருக்கடி அதிகமாகியது.

ராஜாஜியின் பதவி விலகல்

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தமக்கு எதிர்ப்பு இருந்ததால் பதவியிலிருந்து விலகிடத் தாம் விரும்புவதாக நேருவிடம் ராஜாஜி தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நேரு தமிழக சட்ட மன்ற காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஆணையிட்டார். இருப்பினும் மார்ச் 23, 1954 – ஆம் நாள் முதலமைச்சர் ராஜாஜியை அவரது தியாகராய நகர் பசுல்லா சாலை இல்லத்தில் சந்தித்து ‘நீங்கள் தொடர்ந்து திட்டத்தை மட்டும் திரும்ப몮 பெறுங்கள்’ என்று ராஜாஜியிடம் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் காமராஜர் வேண்டுகோள் விடுத்தார், ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள ராஜாஜி மறுத்துவிட்டார்.

சட்டமன்றக் கட்சித்தலைவர் தேர்தல்.

சட்டமன்ப் பட்ஜெட் கூட்டத் தொடரின் இடையில் மாற்றம் நடைபெறுவதால் , பட்ஜெட் கூட்டத்தொடர்காலம் வரை இருக்கின்ற அமைச்சர்களில் யாராவது ஒருவரை முதல்வராகத் தேரந்தெடுத்துக்கொண்டு, பட்ஜெட் கூட்டத்தொடரக்குப் பின்னர் ஒருவரை முறையாக தேர்ந்தெடுத்துக் கொள்ளாலமன்று காமராஜரிடம் ராஜாஜி ஆலோசனை கூறினார். அதனை காமராஜரும் ஏற்றுக்கொண்டார். அதன் படி, சட்டசபைக்காங்கிரஸ் கட்சித் தலைவராக தற்காலிமாக திரு.சி.சுப்பிரமணியத்தை ஏற்றுகொள்வதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 25.03.54 – ல் நடைபெற்ற சட்டசபைக் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் சி.சுப்பிரமணியம் பெயரை முன்மொழிந்த ராஜாஜி இரண்டு மாதங்களுக்குத்தான் இந்த ஏற்பாடு என்பதைக் கூறவில்லை. உடனே காமராஜர் எழுந்து இந்த ஏற்பாட்டை பட்ஜெட் கூட்டத்தை முன்னிட்டு இரண்டு மாத்த்துக்குத்தான் தாம் ஒப்புக்கொண்டதாக்க் கூறினார். ராஜாஜி இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று உறுப்பினார்கள் வற்புறுத்தினர். உடனடியாக 30.03.54 ஆம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் என ராஜாஜி அறிவித்தார். சி.சுப்பிரமணியத்தை தலைவர் பதவிக்கு ராஜாஜி கோஷ்டி நிறுத்திட, காமராஜர் சார்பாக டாக்டர் சுப்பராயணை நிறுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் நடைபெற்ற மார்ச் 30-ஆம் தேதி டாக்டர் சுப்பராயன் சென்னைக்கு வரவில்லை. அந்தச் சூழ்நிலையில் சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக காமராஜரே வரவேண்டும் என பலர் வற்புறுத்த, அவரும் அதனைக் கடைசி நேரத்தில் ஏற்றுக்கொண்டார். காமராஜரும், சி.சுப்பிரமணியமும் வேட்பாளராக களத்தில் நிற்க, நடைபெற்ற தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார்.

இப்படி இந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல 1940 – ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் நான்கு முறை சென்னை மாநில முதல்வர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்றது. எந்த முறையும் அவருடைய பெயர் முன்மொழியப்பட்டது கூட இல்லை. ஆனால், ஒவ்வொருமுறை நடைபெற்ற முதல்வர் தேர்வின்போதும் , அவரின் அழுத்தமான முத்திரைகள் அந்தத் தேர்தல்களில் எதிரொலித்தது. 1946 – லிருந்து 1952 வரை நடைபெற முதல்வர் தேர்வுகள் இதனை உறுதி செய்கிறது.

1946 – ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்ட மேலவைக்கு நடைபெற்ற தேர்தல்களில், மொத்த தொகுதிகளான 215 இடங்களில் 165 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக காமராஜரும், ஆந்திர காங்கிரஸ் கமிட்டித்தலைவராக டி.பிரகாசமும், மலபார் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாதவ மேன்னும் இருந்தனர். இப்படிமூன்று மாநில கமிட்டிகள் அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்தன.

சென்னை மாகாணப் பிரதமராக டி.பிராகசம் தேர்வு

சென்னை மாகாண சட்டசபைக் காங்கிரா கட்சி கூடுவதற்கு முன்னர் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்த காமராஜர் சேவாக்கிராம்ம் சென்று அண்ணல் காந்தியடிகளை சந்தித்து ஆலோசனை செய்தார். காங்கிரஸ் கட்சித் தலைவராக ராஜாஜியைத் தேர்வு செய்யுமாறு காந்தியடிகள் காமராஜரிடன் தெரிவித்தார். சட்டசபைக்காங்கிரஸ் கட்சியின் முதல்நாள் கூட்டத்தில் எவ்வித முடிவுக்கும் வர இயலவில்லை. தொடர்ந்து கூடியும் சட்டசபை காங்கிரஸ் கட்இயால் ஒரு மனதான முடிவுக்கு வர இயலாத நிலையில் காங்கிரஸ் மேலிடமும் ராஜாஜியைத் தேர்ந்தெடுக்கக் கேட்டுக்கொண்டது. இல்லையெனில் டாக்டர் பட்டாபி சீதாராமய்யாவைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் மேலிடம் தெரிவித்தது. பொறுமை இழந்த ராஜாஜி தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் மேலிடத்தின் தலையீடு, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அதன் எதிரொலியாக காங்கிஸ் மேலிடத்தின் பரிந்துரையை எதிர்த்து 148 வாக்குகளும் ஆதரித்து 38 வாங்ககளும் பதிவாகின. மேலிடத்தின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.

பின்னர் சட்டசபைக் காங்கிரா கட்சித் தலைவர் பதவிக்கு ஆந்திர்ர் சார்பில் டி.பிரகாசம் பெயரும், தமிழர் சார்பில் காமராஜர் ஆதரவோடு சி.என். முத்துரங்க முதலியார் பெயரும் முன்மொழியப்பட்டது. ராஜாஜியைத் தேர்ந்தெடுக்க மறுப்பதில் ஒன்றுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர்கள் முத்துரங்க முதலியாரை தேர்ந்தெடுப்பதில் வேறுபட்டனர். தங்கள் தலைவரை நிராகரித்ததால் ராஜாஜியை ஆதரித்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இதன் காரணமாக டி.பிரகாசம் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை மாகாணப்பிரதமாகப் பொறுப்பேற்றார். மாகாண முதலமைச்சர் பிரதம் என அப்போது அழைக்கப்பட்டார். இந்நிலை 1952 வரை நீடித்தது. பிரகாசத்தின் தலைமை ஓரளவு சர்ச்சைக்கு இடமளித்ததாகவே இருந்தது. சென்னை மாகாண்த் எல்லா நூற்பாலைகளையும் மூடிவிடத் தாம் விரும்புவதாக பிரதமர் பிரகாசம் ஒருமுறை திடீரென அறிவித்தார்.. சென்னை மாகாணத்தில் தமிழ்நாட்டுப் பகுதியில்தான் மிகப்பெரும் பான்மையான நூற்பாலைகள் இருந்தன. எனவே தமிழ் நாட்டுக்கு எதிராகவும் தமிழகத் தொழில் குலைக்கவுமே பிரகாசம் முயன்றார் என்று கருதப்பட்டது.

பிரகாசம் ராஜினாமா

அன்றைய பிரதமர் டி.பிரகாசம் தலைமையின் மீதுத நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கும் தீர்மானம் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் கொண்டு வரப்போவதாக அறிவித்தவுடன் 1947 மார்ச், 14-ஆம் தேதி அன்று பிரகாசம் ராஜினாமா செய்தார். பின்னர் நடைபெற்ற சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் ஓமந்தூர் ராமசாமி தேர்தலில் காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவராக காமராஜர் ஆதரவுடன் ஓம்தர் ராமசாமி ரெட்டியார் 1947 மார்ச் 23 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்ட்டு சென்னை மாகாணப் பிரதமராக ஆனார்.

ஓமந்தூர் ரெட்டியார் தேர்வும், விலகலும்

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் பதவி ஏற்ற சறிது காலத்திலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் “பண்ணையாள் போராட்டம்” தீவிரமாகி, விவசாய வேலைகள் நடைபெறவில்லை. காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான சட்ட மன்ற உறுப்பினர்களைத் தமது ஆதரவாளர்களாக வைத்துக் கொள்ள அவரால் முடியவில்லை. எனவே இரண்டு ஆண்டுகள் பிரதமராக இருந்த பிறகு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் பதவியிலிருந்து விலகினார்.

குமாரசாமி ராஜா

ஓமந்தூர் ரெட்டியாருக்குப் பின்னர் பக்தவச்சலத்தைப் பிரதமராக ஆக்க வேண்டுமென்று காமராஜர் முடிவு செய்திருந்தார். ஆனால் சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் பக்தவச்சலத்தை பிரதமராக ஏற்பதில் தங்களுக்குள்ள தயக்கத்தை காமராஜரிடன் தெரிவித்தனர். பிரதமர் பதவியிலிருந்து விலகி இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும் பக்தவத்சலத்திற்கு எதிரான கருத்துக் கொண்டிருந்தார். இப்படி பக்தவத்சலம் பிரதமராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குமாரசாமி ராஜாவை பரிந்துரை செய்தனர். அதனைக் காமராஜரும் ஏற்றுக்கொண்டார்.

காங்கிரஸ் தோல்வியும் ராஜாஜியின் தேர்வும்

அதன் பின்னர், 1952 வரை பிரதமராகப் பதவி வகித்த குமாரசாமி ராஜா 1952 – ஆம் ஆண்டில் புதிய அரசியல் சட்டப்படி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அவர் மட்டுமல்ல, ரேஷன் முறையைப் பின்பற்றியதற்காகவும், விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்வதிலும்,பொது ம்க்களிடமும், விவசாயிகளிடம் கடுமையான அதிருப்தி நிலவிய காரணத்தாலும், கடுமையான தோல்வியை சென்னை மாகாணத்தில்காங்கிரஸ் கட்சி சந்திக்க வேண்டியதாயிற்று. மொத்தமுள்ள 375 இடங்களில் 152 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. பொதுவுடமைக்கட்சிகள் 61 தொகுதிகளிலும் சுயேட்சைகள் 63 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தனர்.

சட்ட சபையில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸ் ஆட்சி அமைத்திட முடியுமா? என்ற சந்தேகம் அனைத்து காங்கிரஸ் தலைவர்களிடமும் குடிகொண்டிருந்தது. பொதுவுடமைக்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்திட முயன்றனர். ஆனால் ‘காங்கிரஸ்தான் ஆட்சி அமைத்திடும்’ என்று தமிழ்நாடு காங்கிரா கமிட்டித்தலைவராக இருந்த காமராஜர் அறிவித்தார். பல கட்சிகள ஆதரவபை பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலையில் ராஜாஜி போன்ற சூழ்நிலையில் இராஜாஜி போன்றவர் முதலமைச்சராக வருவது சிறப்பாக இருந்திடுமென காமராஜர்ந கருதினார். ஆந்திர காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த சஞ்சீவி ரெட்டியும் அதனை ஆதரித்தார். 1952 – ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைக் காங்கிரா கட்சிக் கூட்டத்தில் ராஜாஜி பெயரை காமராஜர் முன்மொழிய ராஜாஜி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு துவங்கிய ராஜாஜியின் ஆட்சி, ராஜாஜின் வீண் பிடிவாத்த்தால் குலக்கல்வித் திட்டம் வழியாக 1954 – இல் முடிவுக்கு வந்தது. அதுதான் காமராஜரின் ஆட்சிக் காலத்தை தமிழகம் காண முதல் துவக்கமாக அமைந்தது.

முதலமைச்சராக காமராஜர்

ஒரு முதலமைச்சராக வேண்டும் என்று சிந்தனை காமராஜர் மனதிலும் செயல்களிலும் இல்லாத தன்மையை மேலே கூறப்பட்ட நிகழ்வுகள் உறுதி செய்கின்றன 1952 – ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கடுமையான தோல்வியைச் சந்தித்த சூழ்நிலையிலும் ‘காங்கிரஸ்தான் ஆட்சி அமைத்திடும்ய என்று கூறிய காமராஜர், தன்னுடைய பெயர் முன்மொழியப்பட விரும்பியதில்லை. அதன் பின்னர் ராஜாஜி முதலமைச்சர் பொறுப்பை விட்டு விலகிய போதும் கூட, குலக்கல்வித் திட்டத்தைக் கைவிட்டு தொடர்ந்து முதலமைச்சராக ராஜாஜியை தொடரச்சொன்னவர காமராஜர் என்பதையும் கண்டோம்.

அதன் பிறகு போட்டி என்று வந்துவிட்ட பின்னரும், காமராஜர் பெயரை அவரும் சரி, அவரது ஆதரவாளர்களம் சரி நினைத்துப் பார்க்கவில்லை. அன்றைக்குக் கூட காமராஜரின் ஆதரவு பெற்ற வேட்பாளர் டாக்டர்சுப்பராயன்தான். ஆனால் தேர்தல் நடைபெற்ற அன்று டாக்டர் சுப்பராயனே வரவில்லை. வேறுயாரும்பொருத்தமான வேட்பாளராகத் தெரியவில்லை. அந்தச் சூழ்நிலையில்தான், ஆதரவாளர்களால் முன்மொழியப்பட்டு, வேறு வழியின்றி சட்டசபை காங்கிரஸ் கடசித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் காமராஜர். அப்போதுகூட,தான் முதலமைச்சராக வரவேண்டுமென்ற எண்ணம் அவரிடத்தில் இல்லை. ஏனெனில், சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், வேறு ஒருவரை முதலமைச்சராகத் தேர்வு செய்யக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தில் ஆலோசனை செய்தார் காமராஜர்.

இருபதாம் நூற்றாண்டில் பிறந்து முதலமைச்சரானவர்

அப்படி முதலமைச்சர் பதவி மீது பற்று இல்லாமல் பதவிப் பொறுப்பை ஏற்றார் காமராஜர். விடுதலை பெறுவதற்கு முன்னரும், விடுதலைக்குப் பின்னரும், சென்னை மாகாணப் பிரதமராக முதலமைச்சராக பதவி ஏற்றர்களில் இருபதாம் நூற்றாண்டில் (1903 ஆம் ஆண்டு) பிறந்து பதவியை ஏற்ற முதலாமவர் காமராஜர்தான். இவருக்கு முன்பிருந்தவர்கள் அத்துணை பேரும் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தமிழ்நாட்டின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது நினைத்தப் பார்த்திட முடியாத நிலையல், முதலமைச்சராக உயர்ந்தவர் காமராஜர். சென்னை மாகாணப் பிரதமராகப் பதவிப் பொறுப்பை ஏற்ற டி. பிரகாசமும் ஏழ்மையான குடும்பதில் பிற்நுத, தன்னுடையதனிப்பட்ட உழைப்பின் காரணமாக உயர்ந்தவர்தான். ஆனால், தன்னுடைய பொருளாதார நிலை உயர்ந்து, வாழ்க்கை மேம்பட்ட பின்னர்பொது வாழ்க்கைக்கு வந்தவர் டி. பிரகாசம். மாறாக வாழ்நாள முழுவதும் தன்னுடைய பொருளாதார நிலை உயர்வைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் காமராஜர்.

ம.பொ.சியின் கருத்து – முதலமைச்சர் பதவியில் ஆந்திரர்

ஆந்திரம் பிரிந்து போனதன் விளைவாகத்தான் தமிழரான காமராஜர் முதல்வர் பதவிக்கு வருவது பற்றி நினைக்க முடிந்தது என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கூறுகிறார்.

“ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியிலே ஆந்திரர்களே அடுத்தடுத்து முதலமைச்சர்களாயினர். சர்.பி.டி. ராசன் முதலமைச்சராக வர முயன்று முடியவில்லை.

நான்கு மொழியினர் கலந்திருந்த மாநிலத்தில், ஆந்திர்ர் தலைமையின் கீழேயே ஜஸடிஸ் கட்சி ஆட்சி நடத்தியது. தமிழரான டாக்டர் சுப்பராயன் தலைமையில் இயங்கிய தமிழர் ஆட்சியைக் கவிழ்த்த பெருமை ஜஸ்டிஸ் கட்சிக்கு உண்டு. ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியிலே முதல்வர்களாக வந்த ஆந்திரர்களின் பெயர் பட்டியலை பார்ப்போம்.

1. திரு. ஏ. சுப்பராயலு ரெட்டி
(7.12.20 முதல் 11.7.21 வரை)

2. பனகல் அரசர்
(19.12.23 முதல் 3.12.26 வரை)

3. திரு.பி. முனுசாமி நாயுடு
(27.10.30 முதல் 4.1.32 வரை )

4. பொப்பிலி அரசர்
(5.11.32 முதல் 1.4.37வரை)

5. சர். கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
(1.4.37 முதல் 14.7.37வரை)

1937 -ல் அமைந்த காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் தமிழகத்தைத் தன்னுள் கொண்ட சென்னை மாநிலம், ஒரு தமிழரை முதல்வராகப் பெறும் பேற்றினை அடைந்தது. ஆம். காங்கிரஸ் ஆட்சியிலே தமிழரான ராஜாஜி முதல்வர் பதவிக்குப்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய காங்கிரசில் அவருக்கிருந்த செல்வாக்கு காரணமாகத்தான் ஆந்திர காங்கிரஸ்காரர்கள் அவருக்கு வழி விட்டனர்.

அதைப்போல, 1946 – ல் காங்கிரஸ் ஆட்சி திரும்பவும் தோன்றியபோது, ஆந்திர காங்கிரஸ்கார்ர் டி.பிராகசம் தான் முதலமைச்சாரக வருமுடிந்தது. அதன் பின்னர் முதலைச்சராகப் பொறுப்பேற்ற ஓமந்தூர்ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா போன்றவர்களும் தமிழ்நாட்டைச்சார்ந்தவர்ளாக இருப்பினும் ஆந்திரகாங்கிரஸ் ஆதரவுடன்தான் முதலமைச்சராக வர முடிந்தது.

1952 – ஆம் ஆண்டு புதிய அரசியல் சட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநிலத்தைச்சேர்ந்த ஆந்திர பகுதிகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தமிழக பகுதிகளில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்ததால்தான் ராஜாஜியை முதலமைச்சராகத் தேர்வு செய்ய இயன்றது. 1953 – ஆம் ஆண்டு ஆந்திர பகுதிகள் பிரிக்கப்பட்ட, ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னை மாநிலம் என்பது ஏறக்குறைய இன்றைய தமிழ்நாடுதான். ஒருவேளை ஆந்திர பகுதிகள் பிரிக்கப்படாமல் இருந்திருக்குமேயானால், காமராஜர் முதல்வர் பதவிக்கு வருவது பற்றி நினைத்துப்பார்க்க முடிந்திருக்காது என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கூறியதை வலுவூட்டும் வகையிலேதான் முதலமைச்சர் பதவியின் முந்தைய வரலாறுகள் எடுத்துரைக்கின்றன.

முதல்வர்களின் போராட்டப் பின்னணி – ஓர் ஒப்பீடு

ஆந்திரா? தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா என்ற நோக்கத்தில் பார்க்காமல் விடுதலைக்குத் தங்களை அர்ப்பணிந்துக் கொண்டவர்கள் என்றுபார்த்தால், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் பொறுப்பில் இருந்தவர்களைத் தவிர, டாக்டர் சுப்பராயன், ராஜாஜி, டி.பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா போன்றவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஆங்கி ஆட்சியரின் வெஞ்சிறையில் வாடியவர்கள் என்பதை முறக முடியாது. உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஓர் ஆண்டு சிறைத்தண்னை, வெளையனே வெளியேறு போராட்டத்தின் போதுமூன்று ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்ட்டு சிறைப்பட்டவர் டி.பிரகாசம்.

உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக சிறைத் தண்டனை உள்பட விடுதலைப் போராட்டத்தின்போது நான்கு முறை சிறை சென்றவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். சுயாட்சி இயக்கத்தில் ஈடுபட்டதற்காக இரண்டு முறை சிறைத்தண்டனை அடைந்தவர் குமாரசாமி ராஜா. ஒத்துழையாமை இயக்கத்தின்போது ஒன்பது மாதச்சிறைத் தண்டனை பெற்றவர் ராஜாஜி.

இப்படி முந்தைய முதல்வர்கள் விடுதலை போரில்காட்டிய அதே தீரத்தை வெள்படுத்தியது மட்டுமில்லாமல், அதிலும் கூட முந்தைய முதல்வர்களை விட அதிக நாட்கள்சிறைத் தண்டனை பெற்று அதிலும் முதல்வர்களில் முதல்வராக விளங்குபவர் காமராஜர். 1930 – ல் நடைபெற்ற உப்பச் சத்தியாகிரகப் போராட்டத்தில் இரண்டு ஆண்டுகள், வட்ட மேஜை மாநாடு தோல்வியைத் தொடர்ந்து ஓராண்டு, ஆகஸ்ட் புரட்சியில் மூன்று ஆண்டுகள் என்று சிறைத் தண்டனை பெற்றவர் காமராஜர்.

விடுதலைக்குப் பின்னர் சென்னை மாகாண ஆட்சித் தலைமையை ஏற்றவர்களில் டி.பிரகாசமும் ராஜாஜியும் தான் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர்கள். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் எட்டவாது வரையும், குமாரசாமி ராஜா பள்ளிப்படிப்பையும் முடித்திருந்திருந்தார். காமராஜர் நான்காவது வரை மட்டுமே படித்திருந்தார். 1937 – ல் ராஜாஜி அமைத்த ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்தவர் டி.பிரகாசம் அமைச்சரவையில் ஓமந்தூர் இராமசாம ரெட்டியாரும் குமாரசாமி ராஜாவும் பதவி வகித்து பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்கள். இதுமட்டுமல்ல, இவர்கள் அனைவரும் நகராட்சித்தலைவராக, உள்ளாட்சி மன்றங்களில் பொறுப்பாளர்களாகப் பதவி வகித்தார்கள். ஆனால், காமராஜர் அமைச்சராகவோ அல்லது வேறு எந்த பொறுப்புகளிலுமோ பதவி ஏற்றவரில்லை. ஏற்ற முதல் பதவியே முதல்வர் பதவிதான்.

சிறிய அமைச்சரவை

முந்தைய ராஜாஜி அமைச்சரவையில் ராஜாஜி உட்பட மொத்தம் 12 பேர் அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், காமராஜரின் முதல் அமைச்சரவையில் அவருடன் சேர்ந்து ஏ.பி. ஷெட்டி, எம்.பக்தவச்சலம் , சி.சுப்பிரமணியம், எம்.ஏ. மாணிக்கவேலு, சண்முக ராஜேஸ்வர சேதுபதி, பி.பரமேஸ்வரன் மற்றும் அமைச்சர்களாக இருந்தனர். 1957 பொதுத்தேர்தலுக்குப்பின்னர் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராஜர் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 8 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். 1962 ல் பொதுத் தேர்தலுக்குப்பின்னர்பதவியேற்ற காமராஜர் அமைச்சரவையில் அவருடன் சேர்ந்து 9 பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். “சிறியது அழகானது” என்று தலைப்பிட்டு அறிஞர் ஸ்கூமாச்சர் ஒரு நூறை எழுதினார். சிறியது அழகானது மட்டுமல்ல, சீரிய செயலுக்கும் உரியது என்று முதலமைச்சர் காமராஜர் ஆட்சி நிரூபித்தது.

சி. சுப்பிரமணிந்ததின் கருத்து

அதன்காரணமாக எழுந்த கருத்துக்களை சி.சுப்பிரமணியம் கூறும்போது “சென்னை மாகாண முதலமைச்சராகக் காமராஜர் தேர்வு ஆனது குறித்து இருவிதமான கருத்துக்கள் கூறப்பட்டன. ஒருமாகாணத்தின் நிருவாகத்தை நடத்துவதற்கு அவசியமான கல்வியறிவோ அல்லது நிர்வாகப் பின்னணியோ காமராஜருக்கு இல்லை. என்று சிலர் கருதினர். ஆனால் இந்திய ஜனநாயகத்தின் மிகச் சிறந்த குறிக்கோள் நிறைவு பெற்றதையே, காமராஜர் முதலமைச்சரானது எடுத்துக் காட்டியது என்று பலர் கூறினர்.

முறையான கல்வியறிவு எதுவும் இல்லாமல் ஒருசிறிய கடையில் உதவியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவர்பணபலமோ அல்லது மேற்குடியில் பிறந்தவர் என்ற பெருமையோ இல்லாமல் ஒரு மாகாணத்தின் முதலமைச்சராக உயர்ந்தது ஒரு குறிப்பிடத்தக சாதனையே ஆகும்” என்றார்.

நேருவின் பாராட்டு

இப்படி சாதனை படைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்ற குறைந்த காலத்தில் காமராஜர் ஆட்சி பற்றி நேரு கூறும்போது ,

“ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும்போதல்லாம் மிகவும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்ட, பல முறைகளிலும் உயிரோட்டமான முறையில், இந்த மாநிலம் முன்னேறி வருவதை நான் உணர்கிறேன். இது ஒரு இனிமையான உணர்வு. இது உணர்வு மட்டுமல்ல, செயல் பாட்டினுடைய பதிவு’ என்றார்.

அண்ணாவின் பாராட்டு

1957-ல் அப்போதைய திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் திரு. அண்ணாதுரை,காமராசர் அவர்களுடைய ஆட்சியைப் பற்றிக் கூறும்போது,

“வேறு எந்த அமைச்சரவையையும் விட, இந்த அமைச்சரவயிடத்தில் நாங்களும் நாடும் மிக அதிகமாக எதிர்பார்க்கிறோம் என்பதை அமைச்சரவையும் , அமைச்சரவை நடத்தும் கட்சியும் பெருமைக்குரியதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டை ஆளுகிற இன்றைய அமைச்சரவை உண்மையிலேயே நாட்டு மக்களுக்கு மிக அதிகமாச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பது மாத்திரம் அல்ல. அதற்கேற்ற திறமை அவர்களிடத்திலே இருக்கிறது என்று நாட்டு மக்கள் நிச்சயமாக நம்புகிறோம். உண்மையிலேயே இன்றைய தினம் இருக்கிற அரசியல் சூழ்நிலையில் இந்த அமைச்சரவையை விட வேறு ஒரு அமைச்சரவை இதே கட்சியாலே நிறுவப்பட்டாலும் கூட, அந்த அமைச்சரவையினால் அதிகமான அளவிறகு நனமை கிடைக்கும் என்று நாங்கள் யாரும் எண்ணி ஏமாந்து கொண்டிருக்கவில்லை.

இத்தகைய பதிவுகளை ஏற்படுத்திய சிறந்தொரு ஆட்சியை அளித்ததற்கு காமராஜரின் தன்னலமற ஈடுபாடும் தான் காரணம். எதிர்ப்புகள் இல்லாமல் 1954 ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்நாடு முதல் அமைச்சராகப்பொறுப்பேற்ற காமராஜர் ஒன்பது ஆண்டுகளாலம் அப்பதவியிலிருந்து, பதவிக்கு பெருமை சேர்த்தார். அவரின் ஆட்சிக் காலம்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பொற்காலமாகும்.