கடைசிக்காலத்தில் பெருந்தலைவர் காமராஜருக்கு உடல் நோய் வந்தது. அதை விட மனநோய் வருத்தியது. எல்லாவற்றையும் தனது தைரியத்தால் தாங்கிக் கொண்டார்.

நோய் நொடியில்லாமல் என்றும் ஆரோக்கியமாகவே வாழ்ந்து வந்த காமராஜர் 1975 – ஆம் ஆண்டு , அக்டோபர் மாதம், முதல் தேதி நண்பர்களுடன் நள்ளிரவுவரை, நாட்டின் நிலைமைப்ப பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். உணவு உட்கொண்டார். படுத்துத் தூங்கச் சென்றார். சிறிது நேரம் தூங்கினார். பின்னர் எழுந்தார்.

உதவியாளரை அழைத்து,

”என்னவோ பண்ணுவதாக தோன்றுகிறது. டாக்டருக்கு டெலிபோன் பண்ணு” – என்று கூறினார்.

டெலிபோன் செய்வதற்கு உதவியாளர் போகும்போது,

”விளக்கை அணை” என்று கூறி விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டார். காமராஜர் கடைசியாகச் சொன்னது ” விளக்கை அணை” என்பதேயாகும். இதன் பொருள் என்ன என்று காமராஜருக்குத் தெரிந்து இருந்தது. ஆனால் உதவியாளர் வைரவனுக்கு இந்த ”விளக்கை அணை” என்பதன் உட்பொருள் இன்னதென்று தெரியவில்லை.

அவர் விளக்கை அணைத்துவிட்டு டாக்டருக்கு டெலிபோன் செய்ய ஓடினார். ஒரு டாக்டர் கிடைக்கவில்லை. என்றதால் அடுத்த டாக்டருக்கு டெலிபோன் செய்தார்.

”மரணம் என்றால் சட்டுபுட்டென்று உயிர் போய்விடவேண்டும். நோயாலோ வேறு எதனாலோ இழுத்துப் பறித்துக் கொண்டு இருக்கக்கூடாது.” – என்று காமராஜர் யாராவது மரணப் படுக்கையில் கிடப்பவர்களைப் பார்க்க நேர்ந்தால் கூறுவதுண்டு.

காமராஜர் விரும்பியபடியே விளக்கு அணைக்கப்பட்டது. படுக்கையறை விளக்கு மட்டுமல்ல அந்தத் தியாக சீலருடைய உயிர் விளக்கும்தான். ஆம். வேதனைப்படாமல் தனது உயிரை விட்டார்.

1975 – ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று அவருத் சீடரான காமராஜர், மாலை 3.20 மணிக்கு இயற்கை எய்தினார்.

செய்தி பரவியது. நாடே கண்ணீர்க் கடலில் மூழ்கியது. தமிழ்நாடு மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் காமராஜ் இயற்கையடைந்த செய்தி கேட்டு மக்கள் பெருந்துயரம் அடைந்தார்கள். உலக தலைவனுக்கு அஞ்சலி செலுத்தியது.

சென்னை தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலை, எட்டாம் எண் வீடு நோக்கி நாடெங்கிலுமிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்தார்கள். காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் பெரும்பாடுபட்டார்கள்.

காமராஜரோடு கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், தன்னைப் பிரதமராக்கிய பெருந்தலைவர் காலமான செய்தியறிந்தார் பிரதமர் இந்திரா காந்தி. உடனடியாக விமானமேறிப் பறந்தோடி வந்தார் சென்னைக்கு. அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சி. சுப்பிரமணயமும் டெல்லியிலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார்.

காமராஜரது பூத உடல், அவரது வீட்டில் இருந்ததால் அஞ்சலி செலுத்த வரும் பெருங்கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. எனவே இறுதித் தரிசனத்துக்குகாகவும், மரியாதை செலுத்தவும் அவரது உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

பிரதமரும் மத்திய, மாநில அமைச்சர்களும் எல்லாக் கட்சித் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும், லட்சக்கணக்கான பொது மக்களும் பெருந்தலைவர் காமராஜரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

டாக்டர் கலைஞர் கருணாநிதி தான் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்தார். பெருந்தலைவர் காமராஜரிடம் அவருக்கு எப்போதும் மதிப்பும், மரியாதையும் உண்டு. எதிர்க்கட்சிக்காரர் தானே காமராஜர் என்று அலட்சியமாக இருக்காமல் இறதிச் சடங்குகளுக்கு ஏற்பாடுகள் செய்தார்.

சென்னை, கிண்டி கவர்னர் மாளிகையினை ஒட்டி காந்தி நினைவாலயம் அமைக்கப்பட்டிருந்தது. காந்திஜியின் பக்தரான காமராஜின் உடல், காந்தி நினைவாலயத்தின் பக்கத்திலேயே தகனம் செய்யப்பட்டது. பின்னர் நினைவாலயமும் எழுப்பப்பட்டது.

சென்னை, ராஜாஜி மண்டபத்திலிருந்து அரசு மரியாதையுடன் காமராஜர் உடல் கிண்டிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அழுது கண்ணீர் வடித்து, ஊர்வலத்தில் சென்றார்கள். அந்தக் கள்ளமில்லாக் கர்ம வீர்ரின் கடைசி ஊர்வலத்தில் மக்களுடன் சேர்ந்து வானமும் கண்ணீர் விட்டுக் காமராஜருக்கு அஞ்சலி செலுத்தியது. ஊர்வலம் கிண்டி, காந்திஜி நினைவாலயம் அருகில் சென்றடைந்தது. பூரண அரசு மரியாதையுடன் காமராஜரின் உடல் எரியூட்டப்பட்டது.

காந்திஜியின் உண்மையான, தீவிரமான, பக்தரான காமராஜரின் உடல் காந்தி நினைவாலயத்துக்கு இடப்பக்கம் வைத்து தகனம் செய்யப்பட்டது. திட்டமிட்டபடி காமராஜருக்கு நினைவாலயமும் கட்டப்பட்டது. காமராஜர் வாழ்ந்திருந்த சென்னை தி நகர் திருமலைப்பிள்ளை சாலை எட்டாம் எண் வீடும் பிற்காலத்தில் அரசுடமை ஆக்கப்பட்டு ”காமராஜர் நினைவு இல்லம்” – ஆனது. காமராஜரது கதர் உடைகள், மூக்குக் கண்ணாடி, கால் செருப்புகள், அவர் படித்த நூல்கள் எல்லாம் அந்த நினைவு இல்லத்தில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன. காமராஜர் பயன்படுத்திய கார் தேனாம்பேட்டை, காங்கிரஸ் மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் நாளதோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்க்காரர்கள் சுற்றுலாக்காக சென்னை வரும், வெளி மாநில மற்றும் வெளிநாட்டுக்காரர்கள் காமராஜர் நினைவாலயத்துக்கு வந்து பார்வையிட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

சுமார் 72 – ஆண்டு காலம் காமராஜர் இந்த மண்ணிலே வாழ்ந்தார். தனது பெர்ம்பாலான வயிதனை எல்லாம் அவர் விடுதலைப் போராட்டத்திலும், சத்தியாக்கிரகம், மற்றும் வெள்ளையனே வெளியேறு என்ற பற்பல போராட்டங்களிலும் செலுத்தியதால் சிறைச்சாலைகளில் கழித்தார்.

12 – ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து செயலாற்றித் தமிழ் நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

9 – ஆண்டுகளுக்கு மேல் காமராஜர் தமிழ் நாட்டின் முதலைமைச்சராக இருந்து, கல்விக்கும் விவசாயத்துக்கும் தொழில்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாட்டை முன்னேற்றினார்.

சுமார் 2 1\2 ஆண்டுகாலம் காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்காகப் பெரும்பாடுபட்டார்.

‘கிங் மேக்கர்’ என்று எல்லோரும் கூறும்படி, பிரதமரகளைத் தான் நினைத்த வண்ணமே தேர்ந்தேடுத்து ஆட்சி செய்ய வைத்தார்.

காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலக மெங்கும் பரவியது. அமெரிக்காவும், ருஸ்யாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன்.

1966 – ஆம் ஆண்டில் காமராஜர் சோவியத் நாட்டுக்குச் சென்றார். சிறப்பான் வரவேற்பு அளித்து சோவியத்து அரசு காமராஜருக்கு மரியாதை செலுத்தியது. ருஸ்யச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு காமராஜர், அமெரிக்கா செல்லத் தான் நினைத்திருந்தார். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்க விருந்ததால் காமராஜர் அமெரிக்கா செல்லம் திட்டத்தைக் கைவிட்டு விட்டார். இது அவருக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும் ஏமாற்றமாகவே இருந்தது.

கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லெவியா, யூகோஸ்லேவேக்கியா, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தும விட்டு இந்தியா திரும்பினார்.

எப்போதும் தான் அணியும் கதர் நான்கு முழ வேட்டி, அரைக் கைக்கதர் சட்டை, ஒரு கதர் துண்டு, காலில் தோல் செருப்பு – இவைகளுடனேயே அவர் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் தமிழ் நாட்டில் இரண்டே இரண்டு பேர்கள்தான்.

ஒன்று பெருந்தலைவர் காமராஜர் மற்றொருவர் விஞ்ஞானி ஜி.டி. நாயுது. ஒரு முறை ஜி.டி. நாயுடுவிடம் ஒருவர்,

”ஐயா நீங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போகிறீர்கள். பல முறை உலகம் சுற்றுகிறீர்கள். வெளிநாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் எல்லாம் பேசுகிறீர்கள். ஏன் நீங்கள் கோட்டு, சூட்டு, டை, பூட்ஸ் – என்று அணிந்து கொண்டு போக்கூடாது?” – என்று கேட்டாராம். இதைக் கேட்டு ஜி.டி. நாயுடு கோபம் கொண்டாராம்.

இந்த உடையோடு வெளிநாடுகளுக்குசை சென்றால்தான், நான் ஒரு பமுழன் என்று அவர்களுக்குத் தெரியும். கோட்டும் சூட்டுமாக நடமாடிக் கொண்டு இருபவர்கள் மத்தியிலே வேட்டி, சட்டையில் சென்றால் வித்தியாசமாக இருக்கும். அவர்களும் நம்மைப் பார்த்து, ”யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றெல்லாம் விசாரிப்பார்கள்.

அது சரி. வெளிநாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது, நமது உடைகளான வேட்டி, சட்டைகளையா போட்டுக்கொண்டு வருகிறார்கள்?” அவரவர் வழக்கப்படி தானே உடைகளை அணிந்து கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் தமிழ் நாட்டுக்குத் தமிழர்களது உடைகளை அணிந்து வந்தால், நானும், அவர்களது நாடுகளுக்குப் போகும்போது, அவரகளது உடையை அணுந்து கொண்டு போகிறேன்.” என்று ஜி.டி. நாயுடு விவரமாகப் பதில் கூறினாராம்.

இதே கருத்துத் தான் பெரும் தலைவர் காமராஜரும் கொண்டிருந்தார். எபெபோதும் போலத்தான் உடுத்தும் உடைகளை அணிந்து கொண்டேதான் அவர் ருஸ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணம் செய்து விட்டுத்திரும்பினார்.

காமராஜர் அதிகம பேச மாட்டார் என்றே சொல்லுவார்கள். ஆனால் அவருக்கு மேடையில் பேசத் தெரியாது என்று சொல்லி விட முடியாது.

சுதந்திரம் அடையும் வரை பேசுவதற்குக் காமராஜருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கட்சிக் கூட்டங்களில் ஈடுபடவும் சிறை செல்லவும் நேரம் சரியாக இருந்தது.

சுதந்திரம் அடைந்த பின்னர் ஊனநாயக முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது. மக்களிடம் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்க வேண்டி கட்டாயம் ஏற்பட்டது.

எனவே காமராஜர் மேடையேறி இரவு பகலென்று பாராமல் பொதுக்கூட்டங்களில் பேசினார். எளிய தமிழிலே எல்லார்க்கும் புரியும்படி தனது கருத்துக்களைப் பட்டிதொட்டிகளில் எல்லாம் சென்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குக் காமராஜர் அயராது பாடுபட்டார். அதன் பயனாகவே தமி. நாட்டில் நிலையான் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கானவர்ள் கூடியிருக்கும் கூட்டத்தில் கூட, மணிக்கணக்கில் காமராஜர், மக்களுக்கும் புரியும்படி உரை நிகழ்த்தினார். அதிகம் பேச மாட்டார் என்று எண்ணியிருந்தவர்கள் அதிசயத்துப் போகுமாறு அவர் மேடைகளில் பேசினார்.

மூத்த தலைவர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகித் தங்களைக் காங்கிரஸ் கட்சிப் பணிக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செயதாலன்றி காங்கிரஸின் வீழ்ச்சியை, சரிவைச் சரி செய்ய முடியாது என்று கூறினார்.

இதைத் தான் கே.பிளான் (காமராஜர் திட்டம்) என்றார்கள். இந்தத் திட்டத்திற்கு முன் உதாரணமாகக் கர்மவீரர் காமராஜரே, தான் வகித்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டுக் கட்சிப் பணிக்கு முன் வந்தார்.

”சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்” – என்ற வள்ளுவரின் இந்தக் குறளுக்குக் காமராஜரே அன்று சாட்சியாக்க் காட்சி அளித்தார். அவர் சொல்வீரரல்ல. செயல்வீரர். தான் சொன்னதைத் தானே செய்து காட்டினாரல்லவா.

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை ஏற்பதற்காகக் காமராஜர் அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கே.பிளான் திட்டத்திற்காக்க் காமராஜர் முதலமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார். சொல்லிய வண்ணம் செய்வதில் அவரே வல்லவராக இருந்தார்.

இதுவரை காமராஜர் எனக்ற ஒரு பெரிய விருட்சம் எப்படி வளர்ந்து, உயர்ந்து தழைத்து கிளைத்து, நிழல் தந்தது. கனி தந்தது என்றெல்லாம் பார்த்தோம்.

ஒரு ணிறுவிதையிலிருந்து முளைத்து தானே இத்தனை பெரிய விருட்சமாக ஆனது. விருட்சம் காலத்தால் வீழ்ந்தாலும் பின்னும் ஒரு முறை அது வித்திலிருந்து பூமியில் வெடித்து முளைத்து வெளிக் கிளம்பி, செடியாகி சிறுமரமாகிப் பின் பெரிய விருட்சமாகத் தான் ஆகி விடப் போகிறது. இது தான் இயற்கையின் நியதி.

காமராஜ் என்ற பெரிய விருட்சம் 72 – ஆண்டுக்ள வாழ்ந்து, நிழற் தந்து வீழ்ந்து விட்டது. இது இயற்கையின் நியதி தான். ஆனாலும் கூட்க் காமராஜர் செய்த தியாகங்கள், தொண்டுகள், சேவைகள், ஆட்சிகள், அரசியல் சாதனைகள் யாவையுமே மக்களின் மனதிலிருந்து என்றும் மறையாது. அவர் காலத்தை வென்ற கர்மவீரர். சாதனை படைத்திட்ட சரித்திர நாயகன்.

பெருந்தலைவர் காமராஜரது மறைவை, அவர் வித்தானார் என்றே எடுத்துக கொள்ள வேண்டும். பின்பொரு நாள் அவர் இந்தத் தமிழ் மண்ணில் கட்டாயம் விருட்சமாவார் என்பது தான் உண்மை.

காமராஜரைப் படிக்காத மேதை என்று அவர் என்னென்ன படிக்கிறார் என்பதனை எல்லாம் பார்த்திராதவர்கள் தான் அப்படிக் கூறுவார்கள். காமராஜர் பள்ளியில் படித்தது கொஞ்சம் தான் என்றாலும் நண்பர் ஒருவரின் உதவியால் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். காமராஜர் அனுபவப் பள்ளியில் அநேகம் கற்றுக்கொண்டவர்.

அவருக்குக் கல்வி ஞானம். சுயமுயற்சிகளால் வந்தது. கேள்வி ஞானம் காந்திஜி, நேருஜி, வினோபாஜி பொன்றவர்களின் பேச்சுக்களைக் கேட்டதால் வந்தது.

”தமிழே இவருக்கு தகராறு. இவர் எப்படி எப்பொழுது ஆங்கிலமும் இந்தியும் கற்றுக் கொண்டார்?” என்று கூடச் சிலர் தங்களுக்குள் கேட்டுக் கொள்வதுண்டு.

பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்தபோது காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சர் அவர்களோடு ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார்.

பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியாரு கவிதைகள் நூலை வைத்திருப்பார். பாரதி கவிதைகளை ஓய்வு கிடைத்தபோதெல்லாம் படித்து ரசிப்பார். அதனால் தான் அவருத் ரஷ்யப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர் பாரதியின் ”ஆகவெறன்றெழுந்தது பார் யுகப் புரட்சி” என்ற பாடலைப் பாடி ரஸ்ய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.

காமராஜர் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அன்றாடச் செய்தித் தாள்களைப் பிரித்துப் படித்து நாட்டின் அரசியல் சூழ்நிலைகளைத் தெரிந்து கொள்வார். தமிழில் வெளியாகி வந்திருந்த செய்தித் தாள்கள் மட்டுமின்றி அவர், ”ஹிந்துஸ்தான் டைம்ஸ், இன்டியன் எக்ஸ்பிரஸ்” போன்ற ஆங்கிலச் செய்தித் தாள்களையும் படிப்பார்.

காமராஜர் எப்போதும் தனது பிரீப்கேஸில் வைத்திருந்த ஆங்கில நூல் மற்றும் இதழ்கள்.

1. Inside Africa

2. Endand Means

3. Time Magazines

4. News weak – போன்றவைகள் ஆகும். இவைகளுடன் பாரதியார் கவிதைகளும் கட்டாயமாக்க் காமராஜர் வைத்திருப்பார்.

அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் தயாரித்த கோப்புகளில் கையொப்பம் வாங்க வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அவர் கவனமாகப் படித்து, சந்தேகப்பட்ட இடங்களில் அதைப் படித்துக் கேள்விகள் கேட்டு அந்த அதிகாரிகளை அசரவைத்து விடுவாராம். ஆகவே காமராஜரின் கல்வி அறிவை யாரும் குறை கூறவே முடியாது.

காமராஜரின் கடைசி நாள் நிகழ்ந்தவைகளைக் காட்சிகளாக்கிப் பார்த்தால் படிக்கிற யாவருக்கும், தானாக்க் கண்ணீர் வரும். நெஞ்சிலே சோகம் நின்று நெறுடும்.

1975 – ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 2 – ஆம் தேதி அன்று காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் நாடெங்கும் அந்த நாளிலே, சென்னை தி.நகர், திருமலைப் பிள்ளை சாலையிலே என்ன நடந்தது?

காமராஜர் வழக்கம் போல் எழுந்து காலைக் கடன்கள் முடித்து குளித்து இட்லி, தேங்காய்ச் சட்னி சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து செய்தித் தாள்களைப் படித்துக் கொண்டு இருக்கிறார்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் வந்து சந்திக்கிறார்கள். கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களுடன் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் சென்றதும் சற்று காலதாமதமாக பகல் 1.30 மணிக்கு உணவு சாப்பிடுகிறார். உதவியாளர் வயிரவன் தான் பறிமாறுகிறார். ஓய்வு எடுத்துக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து வயிரவனைக் கூப்பிட்டுத் ”தலையெல்லாம் வேர்க்கிறதே” – என்றார். அவர் தலையைத் துவட்டி விடுகிறார். ”டாக்டரைக் கூப்பிட்ட்டுமா?” என்கிறார். உதவியாளர். ”சௌரிக்கு போன் போட்டுக் கனக்சன் எனக்குக் கொடு” – என்கிறார் காமராஜர். எவ்வளவோ டயல் செய்தும் டாக்டர் சொளரிராஜன் கிடைக்கவில்லை. பின்னர் டாக்டர் ஜெயராமனுக்கு டயல் செய்து காமராஜரே பேசுகிறார்.

”என் உடலெல்லாம் வியர்க்கிறது. ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறையில் இப்படி வேர்க்கிறதே” என்கிறார் காமராஜர்.

”ஐயா! மூச்சுத் திணறுகிறதா? மார்வலி இருக்கிறதா?” எனப் பல கேள்விகளைக் கேட்கிறார் காமராஜரிடம்.

”அதெல்லாம் ஒன்றுமில்லை. ரொம்ப வேர்த்துக்கிட்டு இருக்கு,. அவ்வளவுதான்.” – என்று கூறிய காமராஜர், டாக்டர் ஜெயராமனை உடனே புறப்பட்டு வரும்படி கூறுகிறார்.

பின்னர் மணியடித்தார். வயிரவன் வந்து நின்றான். வரும்போது இரத்த அழுத்தம் பார்க்கிற கருவியையும் டாக்டரை எடுத்துக் கொண்டு வரச் சொல்லு. டாக்டர் வந்தால் எழுப்பு. விளக்கை அணைத்து விட்டுப் போ” – என்றார் காமராஜர்.

இந்தப் பேச்சே பெருந்தலைவர் காமராஜர் மூச்சு போகுமுன் பேசிய கடைசிப் பேச்சு.

உள் விளக்கை அணை என்றவர், ஏன் உயிர் விளக்கை அணைத்துக் கொண்டார்.

டாக்டர் சௌரிராஜன் வந்தார். பார்த்தார்.”ஐயோ! பெரியவர் போய் விட்டாரே” என்று கீழே விழுந்து புரண்டு அழுதார். டாக்டர் ஜெயராமன் வந்தார். அதன் பின் டாக்டர் அண்ணாமலை வந்தார். யார் வந்தால் என்ன? போன உயிரை மீட்கவா முடியும். செய்தி பரவியது. நாடே திரண்டது. முதலமைச்சர், பிரதமர், அமைச்சர்கள், தலவர்கள் எல்லோரும் வநுத் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் இராஜாஜி ஹால் ஊர்வலம். உடலுக்கு தீவைப்பு. நினைவாலயம்.

கடைசி நாளில் சென்னை, தி.நகர், திருமலைப் பிள்ளை சாலை, எட்டாம் எண், காமராஜர் இல்லத்தில் என்ன நடந்தது என்பதைச் சற்று தெளிவாகச் சித்தரிக்கவே இதை எழுதிக் காட்டினேன்.

அடுத்தது என்ன நடந்தது என்பதனை எல்லாம் இந்த அத்தியாயத்தின் முன் பகுதியிலேயே எழுதிக் காட்டியிருக்கிறேன்.

காமராஜர் காலமான செய்தி தமிழகம் முழுதும் பரவியது. எல்லா மாட்டத்து மக்களும், இராஜாஜி மண்டபத்துக்குத் திண்டோடி வந்தார்கள். லடசோப லடசம் மக்கள, மகள் தொண்டருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியா முழுதும் செய்தி பரவியது. ஏன் உலகம் முழுதுமே செய்தி போயிற்று.

பிரிட்டிஷ், ரஷ்ய , அமெரிக்க மற்றும் பற்பல நாட்டுத் தலைவர்கள் இரங்கற் செய்திகளைப் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பியிருந்தார்கள்.

தன்னை பிரதமராக்கிய தலைவனுன் உடலுக்குப் பிரதமர் வந்து மலர் வளையம் வைத்து வணங்கிக் கண்ணீர் விட்டார். காமராஜர் மீது கொண்டிருந்த பெரிய மரியாதையால் அப்போதிருந்த முதலமைச்சர் மு. கருணாநிதி தகனம் செய்ய அரசின் இடம் தந்ததோடு நினைவாலயமும் கட்டித் தந்தார்.

விருட்சம் வித்தாகிவிட்டது. காத்திருப்போம். பின்பொருநாள் கட்டாயமாக அந்த வித்து தமிழ் மண்ணில் முளைத்து விருட்சமாகும். அண்டி வருபவர்களுக்கு அந்த ஆலமரம் காலமெல்லாம் நிழல் தரும்.

வாழ்க காமராஜ் புகழ்!