நான் முகம் பார்த்த கண்ணாடிகள்- 1

posted in: admire | 0

ராஜேஷ்குமார்

இந்த 2015-ல் நான் 1500 நாவல்கள், 2000 சிறுகதைகள் என்கின்ற எண்ணிக்கையோடு ஒரு பிரபலமான எழுத்தாளனாக இருப்பேன் என்று கனவுகூட காண முடியாத காலகட்டம் அது.

1967-ம் வருடம். அப்போது நான் கோவை அரசினர் கல்லூரியிஸ் பிஎஸ்ஸி பாட்டனி (தாவரவியல்) கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். கருமமே கண்ணாகப் படித்து இந்த பிஎஸ்ஸி டிகிரியை வாங்கிய பிறகு, தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி, யாராவது ஒரு பெரிய புள்ளியை சிபாரிசு பிடித்து ஒரு அரசு வேலையைச் சம்பாதித்துக் கொள்வதுதான் என்னுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய லட்சியமாக இருந்தது. ஏனென்றால் வீட்டின் பொருளாதார நிலைமை ஐஸி யூனிட்டுக்குப் போகும் கட்டத்தில் இருந்தது.

நன்றாகப் படிக்க வேண்டும் என்ற அக்கறையின் காரணமாய் நண்பர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அதை ஒரு சின்ன வட்டமாய் மாற்றிக் கொண்டேன். என்னோடு படித்த மாணவர்கள் இஷ்டத்துக்கு வகுப்புகளை கட் அடித்துவிட்டு கல்லூரிக்கு வெளியே இருக்கும் டீக்கடைகளில் போய் உட்கார்ந்து கொண்டு, பஜ்ஜி, போண்டா சாப்பிட்டு அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். என்னையும் கட் அடித்துவிட்டு வரும்படி அழைப்பார்கள். நான் மறுத்துவிடுவேன்.

ஆனால் அன்றைக்கு காலையில் ஆங்கில வகுப்பை முடித்துக் கொண்டு, நான் கெமிஸ்ட்ரி வகுப்புக்கு போய்க் கொண்டு இருந்தபோது, என்னுடைய நண்பனும், கல்லூரி மாணவத் தலைவனுமான குருராஜன் வழிமறித்தான்.

“டேய் கேயார்..!” (என்னுடைய பெயர் கேஆர் ராஜகோபால். ஆனால் நண்பர்கள் என்னை ‘கேயார்’ என்றுதான் அழைப்பார்கள்)

நான், “என்ன?” என்றேன்.

“இன்னிக்கு நீ கெமிஸ்ட்ரி க்ளாஸூக்கு போக வேண்டாம்”

“ஏன்?”

“நான் கூப்பிடற இடத்துக்கு நீ வரணும்.. போயிட்டு ஒரு மணி நேரத்துக்குள்ள வந்துடலாம்..!”

“மொதல்ல எங்கேன்னு சொல்லு”

“ஒரு அரசியல் தலைவரைப் பார்க்கப் போறோம்..”

“அரசியல் தலைவரா.. யார் அவரு?”

“காமராஜர்”

என்னை வியப்பு அடித்துப் போட்டது. “டேய் குரு! என்னடா சொல்றே.. காமராஜரை நாம் பார்க்கப் போறோமா.. எதுக்கு..?”

என்னோட அண்ணன் ஒருத்தர் காங்கிரஸ் கட்சியில் மாணவர் அணி செயலாளராய் இருக்கார். அவர் இன்னிக்கு பதினோரு மணிக்கு பீளமேட்டில் இருக்கிற காமராஜரைப் பார்க்கப் போறார். அவர் அப்படிப் போய்ப் பார்க்கும்போது, அவரோடு குறைந்தபட்சம் பத்து மாணவர்களாவது இருக்கணும்னு எதிர்ப்பார்க்கிறார். நான் நம்ம ஃப்ரண்ட்ஸ் எட்டுபேரைச் சேர்த்துட்டேன். உன்னையும் என்னையும் சேர்த்தா பத்துப் பேர்… என்ன வர்றியா?”

“ஸாரி.. நான் வரலை.. வேற யாரையாவது பார்.”

“டேய் கேயார் ப்ளீஸ்…! இன்னிக்குன்னு பாத்து எவனுமே பார்வைக்குத் தட்டுப்படலை. நீ க்ளாஸை கட் பண்ணிட்டு வா..! போய்ட்டு ஒரு மணிக்கு வந்துடலாம்… இது பணமும் உண்டு”

“பணமா?”

“ம்.. நூறு ரூபாய்…! அது தவிர உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல மத்தியானம் சாப்பாடும் உண்டு!”

என்னுடைய மனசுக்குள் லேசாய் சபலம் தட்டியது. கையில் நூறு ரூபாயும் மத்தியானம் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சாப்பாடும் சாதாரண விஷயம் இல்லையே. (அன்றைய நூறு ரூபாயின் மதிப்பு, இன்றைய ஐயாயிரம் ரூபாய்க்குச் சமம்!)

குருராஜன் என்னுடைய தோளைத் தட்டினான்.

“என்னடா… யோசனை பண்றே?”

“போயிட்டு ஒரு மணி நேரத்துக்குள்ள திரும்பிடுவோமா…? ஏன்னா பனிரெண்டு மணிக்கு எனக்கு ஜூவாலஜி ப்ராக்டிகல் க்ளாஸ் இருக்கு”

“பனிரெண்டு மணிக்குள்ள வந்துடலாம்…”

“காமராஜர்கிட்டே என்ன பேசப் போறோம்?”

“நாம ஒண்ணும் பேசப் போறது கிடையாது. என்னோட அண்ணன் எல்லாம் பேசிக்குவார். மாணவர் காங்கிரஸ் அணி கோவையில் சிறப்பாய் செயல்படுதான்னு காமராஜர் கேட்பாரு. அண்ணன் தலையாட்டுவார். சுத்தியிருக்கிற நாம அதுக்கு ‘ஆமாஞ்சாமி’ போடணும். இப்படி மாணவர் அணி மட்டுமில்லை.. விவசாயிகள் அணி, தொழிலாளர்கள் அணி, மகளிர் அணின்னு ஏகப்பட்ட அணிகள் வந்து அங்கே வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…”

“லேட்டாயிடாதே?”

“லேட்டாகாது… அப்படியே லேட்டாகிற மாதிரியிருந்தா நீ புறப்பட்டு வந்துரு…!”

“எதுல போறோம்?”

“அதோ…! வேன் ரெடியாய் இருக்கு!”

நான் திரும்பிப் பார்த்தேன். கல்லூரிக்கு வெளியே சாலையோரத்தில் காங்கிரஸ் கொடிகளோடு வேன் ஒன்று தெரிந்தது.

நூறு ரூபாய் பணம், ஒரு நல்ல ஹோட்டலில் சாப்பாடு என்கிற அந்த இரண்டு விஷயங்களையும் தாண்டி, அப்போதிருந்த அரசியல் தலைவர்களில் எனக்கு காமராஜரைப் பிடிக்கும் என்கிற காரணத்தினால் நான் காலேஜ் வகுப்பை கட் செய்துவிட்டு குருராஜனுடன் வேனை நோக்கி நடந்தேன்.

கோவை பீள மேட்டில் இருந்த ஒரு பிரபலமான மில் அதிபரின் பங்களாவில்தான் காமராஜர் தங்கியிருந்தார்.

அந்த பங்களா இருந்த சாலை நெடுகிலும் மூவர்ணக் கொடிகள் பறந்தன. எங்கு பார்த்தாலும் தோரணங்கள் அசைய, தொண்டர் கூட்டம் பங்களாவின் உள்ளும் புறமும் நிரம்பியிருந்தது.

நாங்கள் பத்துப்பேர் வேனிலிருந்து இறங்கியதும், குருராஜனின் அண்ணன் வேக வேகமாக எங்களை நோக்கி வந்தார்.

“எல்லாரும் காங்கிரஸ் பேட்ஜை சட்டையோட மார்புப் பகுதியில் ‘பளிச்’னு தெரியும்படியாய் குத்திக்குங்க… காமராஜர் இப்போ காங்கிரஸ் விவசாயிகள் அணியோட பேசிக்கிட்டிருக்கார். அடுத்து நாமதான் உள்ளே போகணும்! காங்கிரஸ் கட்சியை வளர்க்க மாணவர் அணி எதுமாதிரியான நடவடிக்கைகள் எடுத்திருக்குன்னு அவர் கேட்பார். அவர் கேட்கிற எந்தக் கேள்விக்கும் நான் பதில் பேசிக்கிறேன். நீங்க யாருமே எதுவுமே பேசாம கையைக் கட்டிக்கிட்டு நின்னுட்டிருந்தா போதும்..”

நாங்கள் தலைகளை ஆட்டி வைத்தோம்.

வராந்தாவின் ஒரு ஓரமாய் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார வைக்கப்பட்டோம். சூடாய் சமோசாவும் டீயும் கொடுத்தார்கள். கோவையில் இருந்த பெரிய பணக்காரர்கள் எல்லாம் கார்களில் வந்து இறங்கி காமராஜரைப் பார்ப்பதற்காக அடுத்த அடுத்த அறைகளில் காத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னுடைய மனசுக்குள் லேசாய் ஒரு கர்வம் மேலோங்கியது.

காமராஜராப் பார்ப்பதற்காக கோவையில் இருக்கிற பெரிய பெரிய விஐபிக்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நானும் காத்துக் கொண்டு இருக்கிறேன்.

‘இது எப்பேர்ப்பட்ட வாய்ப்பு!’

‘என் வாழ்நாளில் இதுபோன்ற வாய்ப்பு இனி எனக்குக் கிடைக்குமா?’

எனக்குப் பக்கத்தில் உட்காந்திருந்த குருராஜனைப் பார்த்தேன்.

“குரு..!”

“தேங்க்ஸ்”

“எதுக்கு…!”

“காமராஜர் மாதிரியான ஒரு ஒப்பற்ற தலைவரைப் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்காக!”

“என்னமோ பெரிசா பிகு பண்ணிக்கிட்டே?”

“ஸாரிடா..!”

ஒரு அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் ஒரு நபர் வேக வேகமாய் எங்களை நோக்கி வந்தார்.

“நீங்க மாணவர் அணிதானே?”

“ஆமா…”

“உள்ளே வாங்க…! தலைவர் கிட்ட பத்து நிமிஷம்தான் பேசணும், அதிகப்பிரசங்கித்தனமாய் கேள்விகள் கேட்கக் கூடாது..”

தலையாட்டினோம்.

” எம் பின்னாடியே வாங்க…!” அவர் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட நாங்கள் ஒரு சின்ன ஊர்வலமாய் பின் தொடர்ந்தோம். பல அறைகளைக் கடந்த பின் ஒரு பெரிய ஹாஸ் பார்வையில் பட, அதன் மைய சோபாவில் கரிய நெரிய உருவமாய் காமராஜர் உட்கார்ந்திருந்தார். சுற்றிலும் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அப்போதைய கல்வி மந்திரி சி சுப்பிரமணியம் உள்பட பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள் கண்ணில் பட்டார்கள்.

அறையில் அசாத்திய நிசப்தம்.

எல்லோரும் காமராஜருக்கு முன்பாய் போய் நின்று கைகளைக் குவித்து “வணக்கம்” சொன்னோம்.

எங்களை ஏறிட்டுப் பார்த்த காமராஜர் புருவச் சுழிப்போடு அருகில் இருந்த நபரிடம் கேட்டார்.

“யார் இவங்க?”

அவர் பவ்யத்தோடு குனிந்து சொன்னார்.

“அய்யா இவங்க நம்ம காங்கிரஸ் கட்சியோட மாணவர் அணி.”

“என்னது மாணவர் அணியா…?”

“இவங்களுக்கு இங்கே என்ன வேலைண்ணேன்?”

“உங்களைப் பார்க்கிறதுக்காக…”

“என்னை எதுக்குப் பார்க்கணும்ண்ணேன்?”

“கட்சிப் பணி சம்பந்தமாய்…”

காமராஜர் கோபமாய் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“என்னது… கட்சிப் பணியா..? படிக்கிற பசங்களுக்கு என்ன கட்சிப் பணிண்ணேன்! அவங்க பணி ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணி ஒரு வேலையைத் தேடிக்கிட்டு பெத்தவங்களைக் காப்பாத்தறதுதான். கட்சிப் பணிகளைப் பார்த்துக்கத்தான் நாம இருக்கோமே…?” படபடவென பொரிந்து தள்ளிய காமராஜர், முதல் வரிசையில் நின்றிருந்த என்னைப் பார்த்தார்.

“நீங்க எல்லாரும் எந்த காலேஜ்?”

“கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்”

“இதே ஊர்தானே?”

‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டினேன்.

“இப்ப மணி என்னண்ணேன்?”

நான் கையிலிருந்த வாட்சைப் பார்த்துவிட்டு, “பனிரெண்டு மணி” என்று சொன்னேன்.

“இப்போ காலேஜ்ல பாடம் நடக்கிற வேளைதானே?”

“ஆமா..!”

“பாடம் நடக்கிற வேளையில் வகுப்புக்குப் போகாம உங்களை இங்கே வரச் சொன்னது யாருண்ணேன்?”

நாங்கள் மௌனமாய் நின்றோம். காமராஜர் கிட்டத்தட்ட கர்ஜித்தார்.

“போங்க… எல்லாரும் போங்க..! படிக்கிற பசங்களுக்கு கட்சியில இடம் இல்லை. எம் முன்னாடி யாரும் நிக்கக் கூடாது. போய்ப் படிங்க.. கட்சியை நாங்க வளர்த்துக்குறோம். எங்க கட்சி வளராட்டியும் பரவாயில்லைண்ணேன்..! அவங்களையெல்லாம் கூட்டி வர்றதுக்கு ஏற்பாடு பண்ணின ஆள் யாரு… அந்த ஆளைக் கூப்பிடுங்க…!”

காமராஜர் போட்ட சத்தத்தில் அரண்டு போன நாங்கள், வேர்த்து, விறுவிறுத்துப் போனவர்களாய் வெளியே ஓடி வந்தோம்.

மத்தியானம் ஒன்றரை மணி.

நான் கல்லூரியின் டூ வீலர் பார்க்கிங்கில் இருந்த சைக்கிளை எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது, எனக்குப் பின்னால் குரல் கேட்டது.

“கேயார்”

திரும்பிப் பார்த்தேன்.

குருராஜன் நின்றிருந்தான். “என்னடா கிளம்பிட்டே.. வா உட்லண்ட்ஸ் ஹோட்டல் போலாம். ஏற்கெனவே சொன்னபடி நமக்கு இன்னிக்கு சாப்பாடு அங்கேதான்.

“நான் வரலை…”

“ஏன்டா…”

“எனக்குப் பிடிக்கல.. நான் சாப்பிட வீட்டுக்கே போறேன்.”

“அப்போ நூறு ரூபாய் பணமும் கூட வேண்டாமா?”

“வேண்டாம்…!”

“என்னடா சொல்றே?”

“காமராஜர் மாதிரியான ஒரு தலைவரைப் பார்த்துப் பேசினதே போதும்னு சொல்றேன்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *