அரசியலில் குரு-சிஷ்ய நட்புக்கு உதாரணமாக யாரைச் சொல்லலாம்?

posted in: lessons | 0

தீரர் சத்தியமூர்த்தியையும் பெருந்தலைவர் காமராஜரையும் சொல்லலாம்.

சத்தியமூர்த்தியை வைத்து விருதுநகரில் கூட்டம் போட்டவர் காமராஜர். அன்றைய காங்கிரஸில் ராஜாஜியா, சத்தியமூர்த்தியா என்ற போட்டிதான் இருந்தது. அதில் சத்தியமூர்த்தி பின்னால் காமராஜர் நின்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சத்தியமூர்த்தி ஆனபோது, சிஷ்யன் காமராஜர் செயலாளராக ஆனார். தனக்குத் தெரிந்த எல்லா டெல்லித் தலைவர்களையும் காமராஜருக்கு அறிமுகம்செய்து வைத்தார் சத்தியமூர்த்தி. சில ஆண்டுகள் கழித்து நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராஜரை நிறுத்தினார் சத்தியமூர்த்தி. அப்போது செயலாளர் பதவியை சத்தியமூர்த்தி வகித்தார். அவருக்கு கீழே செயலாளராக இருப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். சிஷ்யனின் தலைமையை குரு ஏற்றுக் கொண்ட காலம் அது. 1943-ல் சத்தியமூர்த்தி இறந்துபோனார். 11 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன காமராஜர், பதவி ஏற்பதற்கு முன்னதாக நேராக சத்தியமூர்த்தியின் வீட்டுக்குப் போய் அவரது மனைவி பாலசுந்தரத்து அம்மாளிடம் ஆசீர்வாதம் வாங்கினார். காங்கிரஸ் கட்சித் தலைமையகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் என்று பெயரும் சூட்டினார்.

தன்னுடைய சிஷ்யன் வளர்வதைப் பார்த்து பெருமைப்பட்டார் குரு. தன்னுடைய குருநாதர் புகழை கடைசி வரை பரப்பினார் சிஷ்யர். இந்தக் காலத்தில் இது சாத்தியமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *