விளம்பரம் இல்லாத பொருள் விற்பனையாவதில்லை. விற்காத பொருள்கூட விளம்பர, உக்தியால் விற்றுத் தீர்ந்து தீர்ந்து போகிறது.
அலங்கார வளைவு என்றும், ஆள் உயர மாலை என்றும், கையடக்க நோட்டீஸ்கள், சுவரெங்கும் போஸ்டர்கள் என்றும் சுற்றிச் சுற்றி எங்கு பார்த்தாலும் விளம்பரம்தான்.
விளம்பரத் தண்ணீர் இல்லாமல் அரசியல் பருப்பு வேகாது என்ற நிலை இன்று-
ஒவ்வொரு அரசியல்வாதியும், தான் அரசியலில் இருப்பதைக்காட்ட விளம்பரத்துக்கு செலவிடும் பணத்தைக் கணக்கிட்டால் இந்தியக் கடனை இரு மாதங்களில் அடைத்துவிடலாம் எனக் கருதத்தோன்றும்.
நல்ல பொருளுக்கு விளம்பரம் வேண்டாம் என்பதுபோல நல்ல நேர்மையான அரசியல் நடத்துபவர்களுக்கும் அது வேண்டியதில்லை.
காமராஜர் அவர்கள் எப்போதும் விளம்பரத்தை விரும்பியதே இல்லை. மேடையில் அவர் அமர்ந்திருக்கும் போது, பேச்சாளர்கள் ஏதேனும் அவரைப் புகழந்து பேசினால் உடனே உட்காரவைத்துவிடுவார். ஆட்சியில் கூட செய்ததை மட்டுமே சொல்ல வேண்டும். செய்யப்போவதை எல்லாம் சொல்லக்கூடாது என்ற எண்ணம் உடையவர். தன்னை, தேவையில்லாமல் புகழ்வதாக நினைத்துக் கூச்சப்பட்டவர் அவர்.
அரசியல் என்பது ஒரு நாட்டில், நடப்பது தெரியாமல் நடக்க வேண்டும். மின்சாரம் செல்வது தெரியாமல் செல்கிறது. பல்புகளாக டயூப் லைட்டுகளாக எரிகிறது.
அரசியலும் மின்சாரம் போல்தான்.
செயல்வடிவங்களாக மட்டுமே வெளிப்படவேண்டும்.
கர்மவீரர் ஆட்சிமுழுக்க செயல், வெளிப்பாடுகளில்தான் முழுமை பெற்றது. இவர் செய்வதையும் சொல்லமாட்டார், செய்ய முடியாததையும் செய்வதாகச் சொல்லமாட்டார்.
யாரையும் ஆகட்டும் பார்க்கலாம் என்று எதார்த்தமாகப் பேசி அனுப்பும் இயல்புடையவர்.அதனால்தான் பத்திரிக்கை ஆசிரியர் திரு. சோ அவர்கள் அவசியமில்லாமல் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பதும் ஆதாயத்துக்காக போட்டோவுக்கு போஸ் அவரிடம் இல்லாத கலைகள்.
மொத்தத்தில் விளம்பரப்படுத்துவதில் விருப்பமே இல்லாதவர்.
விளம்பரத்தை தகுதியின் தடை என்றே கருதினார். அதிலும் எதார்த்தம் மீறிய எல்லாவற்றையுமே வெறுத்து ஒதுக்கிவிடுவார். அப்போது திரு. நிஜலிங்கப்பாதான் காங்கிரசின் தலைவர். மாமராஜரோ ஒரு சாதாரண உறுப்பினர்தான்.
அந்நேரம் யூகோஸ்லோவாக்கிய நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தினர் இந்தியாவுக்கு ஒரு செய்திப்படம் தயாரிக்க வந்திருந்தனர். படத்தின் பெயர் பாரத்த்தில் தாற்பது நாள்கள் (Fourth days in Bharat).
அத்தொலைக்காட்சி நிறுவனத்தார்க்கு இந்தியா என்றதும் பெருமைக்குரிய பெருந்தலைவரின் நினைவு வந்தது. அப்போது டில்லியில் இருந்த காமாஜரைச் சந்திக்கச் சென்றனர்.
காமராஜரோ பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்குத் தங்களை அர்த்தப்படுத்த உதவும்.
”நான் இப்போது அரசியலில் பதவிகள் எதிலும் காங்கிரஸில் தலைவரும் இல்லை. காங்கிரஸ் தலைவரிடம் பேட்டி காண வேண்டுமானால் திரு. நிஜலிங்ப்பா அவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள்” என்றார்.
”இல்லை… சாதரண உறுப்பினராக இருந்தாலும், தங்களைத்தான் பேட்டி காண வந்தோம்” என்றார்கள். தொலைக்காட்சி நிலையத்தார்.
அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? ”ஒரு சாதாரண உறுப்பினரான என்னைப் பேட்டி காண விரும்பினால் காங்கிரஸ் கட்சியன் எல்லா உறுப்பினர்களையும் பேட்டி காண்பீர்களா? முடியுமானால் வாருங்கள்” என்று டில்லியிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டார்.
வலிந்து வந்த விளம்பரங்களையே வெறுத்தவர், தானே விளம்பரம் செயயத் துணை நிற்பாரா?
விளம்பரம் இன்றைக்கு அரசியல் அறுவடை நடத்த நினைப்போரின் அஸ்திவாரம். இப்படி ஒரு அஸ்திவாரம் இல்லாமலேயே இந்திய அரசியலை ஆட்டிப் டைத்தார் என்றால் அவரிடம் விளம்பர விரும்பிகள் பாடம் படிக்க வேண்டும்.
Leave a Reply