பார்புகழ் பெற்ற தலைவர்

posted in: admire, Leadership, lessons | 1

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு சேர்ந்த ஆண்டு எது? ஆயிரத்து தொள்ளாயிரத்து அய்ம்பத்தாறாம் ஆண்டு ஆகும்.

கன்னியாகுமரியில், ஏன்கனவே அய்ந்தாம் வகுப்பு வரை கட்டாய இலவசக்கல்விமுறை நடைமுறையில் இருந்தது. பள்ளிகளில் கஞ்சி கொடுக்கும் ஏற்பாடும் இருந்தது. அங்கே பல தொடக்கப் பள்ளிகள், அரசின் நிதி உதவியைப் பெறும் தனியார் பள்ளிகள்.


இவற்றைச் சிக்கல் இல்லாமல், சென்னை மாநிலக்கல்வித்துறை இயக்கவேண்டும். அதுபற்றிய ஆலோசனைகளைக் கேட்பதற்காக, முன்னேற்பாட்டின்படி திருவனந்தபுரம் சென்றேன். அம்மாநிலத்தின் பொதுக்கல்வி இயக்குநரான திரு. சுந்தர்ராசுலு நாயுடுவோடு விவரமாகப் பேசி உரிய நுட்பங்களைத் தெரிந்துகொண்டேன். நாயுடு, உண்மையிலேயே உதவியாக இருந்தார்.

அதோடு, திருவாங்கூர் மன்னரை நான் பேட்டி காண எளிதில் ஏற்பாடசெய்து கொடுத்தார்.

குறித்த நேரத்தில், காட்சிக்கு எளியவராக விளங்கிய மன்னர் என்னை வரவேற்றார். கலகலப்பாகவும் இனிமையாகவும் பேசினார். என்னென்ன தகவல்களைத் திரட்டினேன் என்பதையும் விசாரித்தார்.

“கண்ணினைக் காக்கும் இமைபோல், நெற்களஞ்சியமாகிய நாஞ்சில் நாட்டைக் காத்து வந்து, அருள் புரிந்தீர்கள். எங்களிடம் வந்த பிறகு, அரசு அருள்பார்வை விழுவதற்கு வாய்ப்பு இராது. ஏதோ மக்களாட்சியில் எங்களா முடிந்தவரை பாதுகாக்கிறோம்” என்று அடக்கமாக்க் கூறினேன்.

மன்னர் இளநகை புரிந்தார்.

“என் உள்ளத்தில் எவ்விதக்கிலேசமும் இல்லை.

“சென்னை மாநில முதல் அமைச்சர், மக்கள்நாடி யறிந்த தலைவர், அதோடு ஏழை பங்காளர், காமராசரின் பார்வையில் நாஞ்சில் நாடு மேலும் செழித்து வளரும். இது உறுதி எனவே, சஞ்சலம் ஏதுமின்றி அதைத் தமிழ் நாட்டோடு சேர்க்கப் போகிறோம்” என்று உளமார உரைத்தார். காமராசரின் தொண்டர் அணியில் இருப்பதன் சிறப்பை அப்போது உணர்ந்தேன்; தொடர்ந்து உணர்கிறேன்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டு, இந்இய அரசு, கல்விக் குழுவொன்றை சோவியத் நாட்டிற்கு அனுப்பி வைத்தது. மூவரடங்கிய அக்குழுவில் என்னையும் சேர்த்திருந்தார்கள்.

தில்லியிருந்து விமானம் மூலம் புறப்பட்டோம். முதலில் டாஸ்கண்டில் இறங்கிச் சில நாள்கள் தங்கினோம்.

டாஸ்கண்ட் உயர்கல்வி நிலையத்தைக் காண்ச்சென்றோம். இந்தியக் குழுவின்தலைவராகிய திரு. இராஜாராய்சிங், என்னையும் அன்றைய பஞ்சாப் மாநிலத்தின் பொதுக்கல்வி இயக்குநராய் இருந்த செல்வி சரளா கன்னாவையும் அங்குள்ள பேராசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

“சென்னை மாநிலத்தின் பொதுக்கல்வி இயக்குநராகிய நெ.து. சுந்தரவடிவேலு” என்று என்னை அறிமுகப்படுத்தியபோது, ஒரு விஞ்ஞானப் பேராசிரியர் சிலசொற்கள் சொல்ல விரும்பினார்.

“நான் சென்னைக்குச்சென்று சில நாள் தங்கிவிட்டு வந்திருக்கிறேன். அம்மாநிலதின் கல்வி வளர்ச்சி போற்றுவதற்குரியதாய் இருக்கிறது.

“கல்விபற்றித் திட்டமிடுபவர்கள் அய்ந்து, பத்தாண்டுகளை நினைத்துக்கொண்டு திட்டமிடக்கூடாது. முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சமுதாயம் எப்படி இருக்குமென்று எண்ணிப்பார்த்து அதற்கு ஏற்றபடி திட்டம் தீட்ட வேண்டும்.

“முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கப்போகும் இந்தியாவிற்கு எட்டாவது வகுப்புப் படிப்பு போதாது. அதை உங்கள் மாநிலம் உணர்ந்திருக்கிறது. சரியான தொலைநோக்கு உங்கள் முதல் அமைச்சருக்கு. காமராசருக்கு இருக்கிறது. போக்கும் சரியாக இருக்கிறது. ஒவ்வொரு திட்ட காலதிலும் எல்லா நிலைக்கல்வியையும் தூண்டி ஊக்குவிப்பது, சரியான வளர்ச்சிப்போக்கல்ல. அத்தகைய தவற்றைச் சென்னை மாநிலம் செய்யவில்லை.

“இரண்டாம் அய்ந்தாண்டுத்திட்டத்தில் அய்ந்தாம் வகுப்புவரை எல்லோருக்கும் கல்வி கொடுப்பதில் தனி முயற்சி. மூன்றாம் அய்ந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கத்தில் நடுநிலைப்பள்ளி வளர்ச்சியில் தனி அக்கறை; பிற்பகுதியில் உயர்நிலைப்பள்ளி கல்வியை விரைந்து வளர்ப்பது.

“நான்காம் அய்ந்தாண்டுத்திட்டத்தின்போது கல்லூரிக் கல்வியையும் பல்கலைக் கழகக்கல்வியையும் பெரும் அளவு வளர்ப்பது என்று வரிசைப்படுத்தியிருப்பது போற்றுதற்குரியது.

“சோவியத் நாட்டின் தந்தை, மாமேதை லெனின், முதலில் கல்வி ஒளியையும் மின்னொளியையும் ஊர்தோறும் கொண்டுபோகத் திட்டமிட்டார். அதுபோலவே, சென்னை மாநிலத்திலும் நடக்கிறது. உங்கள் வெற்றிக்கு நல்வாழ்த்துகள்” என்றார். பூரித்துப் போனேன்.

Leave a Reply to kaliraja.t Cancel reply

Your email address will not be published. Required fields are marked *