மண்ணை நினைத்த மன்னர்

posted in: Leadership | 1

ஒரு அரசியல் தலைவனது எண்ணம் எங்கு சென்றாலும் தனது மண்ணைப் பற்றியே இருக்கவேண்டும். விண்ணில் எறந்து வேறு வேறு நாடுகள் போனாலும் கண்ணில் தன் பிறந்த மண்ணே நிழலாட வேண்டும்.

ஒரு முறை பெருந்தலைவர் மணிப்புரிக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார்.

மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கே அமைந்துள்ள இயற்கை எழில் கட்டிய தொட்டில் என்றே கூறலாம். ஏறத்தாழ தமது அண்டை மாநிலமான கேரளாவை ஒத்திருக்கும்.

எங்கும் மலைமுகடுகளும், மரங்களின் அணி வகுப்பும், செடி கொடிகளின் அலங்காரதோரணங்களும் வானத்தைப் பார்த்து வாவென்று அழைக்கும்.

சிற்றோடை சலசலப்பும் ஆற்று நீரின் அங்கலாய்ப்பும் காற்றுக்கு ஏற்றவாறு தப்பாது தாளம் போடும்.

எப்போதும் பச்சைப் பட்டாடை கட்டி எழில்காட்டும் மணிப்பூரின் சிறப்பை வார்த்தையில் வடிப்பதாக இருந்தால் அதுவே தனிக் கட்டுரையாகிவிடும். அத்தகைய மணிப்பூர் மாநிலத்தின் அன்றைய முதல்வராக இருந்தவர் சாலிஹா ஆவார். அவர் தலைவரை அந்த மாநிலம் முழுவதும் அழைத்துப் போய்க்காட்டினார்.

காமராஜர் இயற்கையைக் கண்டுகளிக்கும்போதெல்லாம் மணிப்புரி கண்ணில் தெரிந்தாலும் மனதில் என்னவோ சொந்த மண்ணின் சோகம் வந்து போகத்தான் செய்தது.

மணிப்பூர் முதல்வர் மணிப்பூரின் சிறப்புகளைச் சொல்லும்போது ‘ இங்குள்ள மணிப்புரி நடனம் இந்தியாவின் பிரபல நடனங்களில் ஒன்று’ என்றார். பரத நாட்டியம், கதக், கதக்களி, குச்சுப்புடி வரிசையில் மணிப்புரியும் ஒன்று என்பது உண்மைதான்.

ஆனால் கர்மவீரரின் கருத்தோ வேறாக இருந்தது. எந்த நிலம் செழிப்பாக இருக்கிறதோ அந்த நலத்தில்தான் கலைகள் யாவும் செழித்திருக்கின்றன என்ற எண்ணம் அவர் சிந்தனையில் மின்னலாக வெட்டியது.

நிலம் செழித்த நிலத்தில் வாழும் மனிதர்களுக்கு உழைப்பு குறைகிறது. நீருக்காக அலையத் தேவையில்லை. நினைத்த பயிர் நட்டு எளிதில் முழுமையாகப் பலன் பெறலாம்.

தொழில் எளிமையாக நடந்துவிடுவதால் பொழுதுபோக்க கலைகளை நாடும் நிலை தானாகவே உருவாகிவிடுகிறது.

இதை உணர்ந்த உத்தமத் தலைவர், ”மணிப்புரி நடனம் பிரபலம் என்கிறீர்கள்… அது சரிதான். உங்கள் மண்ணில் மழை எப்போதும் பெய்கிறது. விதைத்தால் போதும் வேறு வேலைகள் செய்யாமலே விளைந்து விடுகிறது. எங்கள் ராமநாதபுரத்தில் காலை முதல் இரவு வரை தண்ணீருக்காகவே அலையும் ஏழை உழவனுக்கு தோடி ராகம் எப்படித் தெரியும்” என்றார்.

எந்தச் சூழ்நிலையில் தன் சொந்த மண்ணைப் பற்றிப் பேசுகிறார் என்பதை சற்றுக் கவனியுங்கள்.

அந்த மண்ணில் செழிப்பு, தன் சொந்த மண்ணில் வறட்சி. செழிப்பால் கலைகள் பெருகுகின்றன. வறட்சியால் கவலைகள் பெருகுகின்றன.

மனிதனின் அன்றாடத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் அவனுள் வேறேந்த நாட்டமும் வேரூன்றாதுதான். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் மணிப்பூரில் இருந்து கொண்டு இராமநாதபுரத்தை ஒப்பிட்ட பெருந்தலைவரிடம் நாம் பாடம் கற்க வேண்டியது அவசியம்தானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *