தான் இறங்கினாலும் தரம் இறங்காதவர்

posted in: admire, Leadership, lessons | 0

சிறுசிறு அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி மெல்ல மெல்ல அரசியல்வாதியானவர்களும் உண்டு. தொண்டு செய்து சமூகத்துக்உ உதவும் தோள்களைப் பார்த்து தலைவர்கள் அழைத்துச் சேர்த்ததால் அரசியலுக்கு வந்தவர்களும் உண்டு.

அரசியல் தலைவர்களின் உறவாய் பிறந்ததாலே அரசியல்வாதியாக ஆனவர்கள் – பணபலமும், புகழ் ஆசையும் கொண்டு அரசியலைச் சார்ந்தவர்கள்-சமூக விரோதச் செயல்களை மறைக்கவும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கவும் அரசியல்வாதி ஆனவர்கள் இப்படி பல ரகத்தினர் உண்டு.

அரசியல்வாதிகளின் நதிமூலத்தை அவர்கள் செயல்படும் விதத்தை வைத்தே கண்டு கொள்ளலாம்.

பதவி வந்ததும் காரைவிட்டு காலை தரையில் வைக்க விரும்பாதவர்களை மக்கள் விரும்பமாட்டார்கள்.

பதவி வந்ததும் பவனியை விரும்புவர்களை அவணி ஏற்றுக் கொள்ளாது. அஸ்திவாரமே இல்லாமல் அரசியலுக்கு வருபவர்களை மக்கள் ஒருவேளை கவர்ச்சியால் ஏற்றுக் கொள்ளலாம், வரலாறு ஏற்றுக் கொள்ளாது.

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் அரசியல், அஸ்திவாரம் ஆழமும் அகலமும் உடையது. எனவேதான் அவரது செயல்களில் மனிதாபிமானமும், சமூக வாஞ்ஞையும், மக்கள் நலமும் ஆடம்பரம் இல்லாமல் அடியெடுத்து வருவதைக் காணலாம்.

மக்களுடன் மக்களாக் கலந்துவிட்ட மக்கள் தலைவர் அவர். மக்களுக்காகத் தன்னை மறந்த மாமனிதர் அவர்.

தான் வரும் சாலைகளில் வீணாக பொதுவாகனங்களை மணிக்கணக்கில் தடுத்து நிறுத்தி மக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரசியல்வாதிகளையும் நாம் சந்தித்திருக்கிறோம்.

தலைவர் வருகிறார் என்று சாலைகளில் வாகனங்கள் எதையும் ஓடவிடாமல் வழிமறித்த வரலாறும் நமக்குத் தெரியும்.

மந்திரி வீட்டில் புறப்பட்டதுமே அவர் செல்லவிருக்கும் சாலைகளில் பொது மக்களை செல்லவிடாமல் தடை அமைத்த வழிமுறைகளையும் நாம் வடுக்களாக சுமந்து கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படி, தான் சொகுசாக பயணம் போக வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகளால் சாலைச் சந்தடிகளில் பொதுமக்கள் சிக்கித் தவிப்பதை எப்படி உணரமுடியும்?

அரசியல் தலைவர்கள் மக்களின் அன்றாடப் பிரச்னைகளை அறிய வேண்டுமானால் எந்த அவசர ஏற்பாடுகளும், அறிவிப்புகளும் இன்றி மக்கள் பயன்படுத்தும் சாலை, கழிப்பிடங்கள், திரையரங்கங்கள் போன்ற பொது இடங்களை வந்து பார்க்க வேண்டும்.

ஆயிரம் கார்களுடன் பவனி வருபவர்களுக்கு அது வசதிபடாதுதான். ஆகவேதான் மக்களின் நாடித்துடிப்பை அறிய மறந்து விடுகிறார்கள்.

பெருந்தலைவர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு சென்று திரும்பியதும் எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு – எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்று கூறினால் அது அவ்வாறே இருக்கும். ஏனெனில் மக்களோடு கலந்து நடந்து உணர்ந்து அவர்களின் மன ஓட்டத்தை அறிந்து கொள்வார் அவர்.

இன்று!

வந்த இடத்தை மறந்துவிடுகிறார்கள். ஆகவே சேர வேண்டிய இடமும் வேறு வேறாகிவிடுகிறது.

அமைச்சர்கள் வருவதும் போவதும் அன்றாடச் செயல்பாட்டில் ஒன்றாக இருக்க வேண்டுமே தவிர, அது அலங்காரப் பவனியாக ஆர்ப்பாட்ட வரவேற்பாக அமைந்துவிடக்கூடாது.

பெருந்தலைவர் எப்போதுமே அதை விரும்பியதில்லை. ஆர்ப்ஆட்டங்களைப் பார்த்து வெறுப்பும் கோபமும் அடைவார்.

அதுபோல சாலைளில் போகும்போது தான் ஒரு மந்திரி என்பதை மறந்து சராசரியாக மாறிவிடுவார். அதனால்தான் சராசரிகளின் மனதுள் சாகாமல் இன்றும் அவரால் வாழமுடிகிறது.

ஒரு நாள் – சைதாப்பேட்டையில் உள்ள மர்டலாங் பிரிட்ஜில் காமராஜ் அவர்களின் கார் செல்லும்போது டிராபிக் பிரச்னையாகிவிட்டது. போக்குவரத்தும் ஸ்தம்பித்தும் போய்விட்டது.

இத்தனைக்கும் அப்போது மணி அதிகாஐ ஆறுதான். தலைவரின் கார், பஸ், லாரிகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டது.

காரினுள் தொலைதூரத்தில் முடித்துவிட்டு வரும் காமராஜர் அவர்கள் நன்கு தூங்கிக்கொண்டிருக்கிறார். முன்னும் பின்னும் நின்ற கார், பஸ், லாரிகளின் ஹாரன் ஒலியால் கண் விழித்துவிட்டார்.

ஒரு வினாடியில் பிரச்னை புரிந்துவிட்டது. எந்த ஆலோசனையும் இன்றி நடுப்பாலத்தில் முன்னும் பின்னும் நெருக்கியடித்துக் கொண்டிருந்த கார்களின் இடையில் தவித்துக்கொண்டிருந்த தனது காரின் கதவைத் திறந்து கீழே இறங்கினார். இறங்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களோ சாலையின் நடுவில் கார்களுக்கு இடையே நடந்து முன்னும் பின்னும் பார்த்து போக்குவரத்தை சரிசெய்யத் தொடங்கிவிட்டார்.

சற்று நேரத்தில் போக்குவரத்து சரியானதும் பாரத பெருந்தலைவரே பாதசாரிகளின் வசதிக்காக போக்குவரத்துப் போலீஸ் வேலைப் பார்த்ததை என்னென்று சொல்வது.!

பிற அரசியல் தலைவர்களைப் போல, உடனே பத்திரிகை அலுவலகத்துக்குப் போய் செய்தி கொடுக்கவில்லை. நேராக பக்கத்தில் இருந்த சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்குப் போய் ” சாலைகளை பராமரிப்பது இப்படியா?” என்று எச்சரித்து விட்டுப்போனார்.

பொதுத்தொண்டு புரிவதில் நாட்டம் உடைய நமது நாட்டு இளைஞர்களும், அரசியல் பந்தாவில் அகப்பட்டு ஆடம்பர சுகம் அனுபவிக்கும் அரசியல்வாதிகளும் காமராஜ் அவர்களிடம் கற்கவேண்டிய கட்டாய பாடம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *