ஆளத்தெரிந்தவர்கள் ஒவ்வொரு ஆளையும் தெரிந்திருக்க வேண்டும் என்னும் அரசியல் சித்தாந்தத்தை உணர்ந்த உத்தமர் காமராஜர்.
என்றோ பார்த்து அறிமுகமான ஒருவர் கூட்டத்துக்குள் எங்கேனும் நின்றால் கூட பெயர் சொல்லி அழைக்கும் நினைவாற்றலே ஆளவந்தவர்களிடம் அவசியம் இருக்க வேண்டும். இது பெருந்தலைவரிடம் இருந்தது.
பூமி நூல்கள் படிக்கவில்லை. ஆனால் இந்தியப் பூகோளத்தில் ஓடும் ஆறுகள், பாயும் பாசன வெளிகள், மண்ணின் வளங்கள் வளத்துக்கேற்றவாறு வளரும் செடி கொடிகள் யாவும் வைத்திருந்தார் பெருந்தலைவர். ஆளத் தெரிந்தவர்கள் ஆற்றையும் ஊற்றையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.
வரலாற்று நூல்கள் படிக்கவில்லை ஆனால் ஆட்சி செய்தவர்களின் வாழ்க்கை வரலாறும் அவர்கள் நாட்டின் உயர்வு தாழ்வும் தெரிந்து வைத்திருந்தார்.
மொத்தத்தில் அனுபவம் அவரிடம் அறிவாய் இருந்தது என்றால் அது மிகையில்லை. அவர் அன்று பூகோள அறிவுடைய ஆட்சியாளராக இருந்ததால் தான் நெய்வேலிக்கு நில்க்கரிச் சுரங்கமும் சேலத்துக்கு இரும்பாலையும் வந்து சேர்ந்தன.
ஆளவும் தெரிய வேண்டும் ஆளையும் தெரிய வேண்டும். அப்படியானால்தான் அரசியலில் ஏமாற்றங்களை அறவே தவிர்க்க முடியும்.
குறிப்பாக காமராஜர் அவர்கள் பெரும்பாலும் அறிமுகமானவர்களை நினைவில் வைத்திருப்பார். அதுபோல் அரசு ஊழியர்களைக்கூட அறிந்து வைந்த்திருப்பார்.
அவர்களின் செயல்பாடுகள்தான் ஆட்சியின் வெளிப்பாடு என்பதை அழகாக உணர்ந்து அப்போதைக்கப்போது அழைத்துப் பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்டுவார்.
ஒருமுறை திருச்சிக்கு வந்திருந்த தலைவர் அவர்கள் திருச்சி கண்டோன்மென்ட் பயணியர் விடுதியல் தங்கியிருந்தார்.
உடனே அந்த மாவட்ட அரசியல்வாதிகள், அரசியல் அனுதாபிகள் அவரைப் பார்க்க கூடி விட்டனர். காமராஜரை காணவேண்டிக் காத்து நின்றவர்கள் பலரும் மாலை, கதர்த் துண்டு எனக் கைகளை நிறைத்தப்படி வரிசையாக நின்றனர்.
அந்த வரிசையில் காமராஜர் அவர்களின் அரசியல் அனுதாபியான ஒரு பள்ளிக்கூட ஆசிரியரும் கையில் மாலையுடன் காத்து நிற்கிறார்.
தலைவர் அறையை விட்டு தொண்டர்களைச் சந்திக்க வரவேற்பு அறைக்கு வந்து அனைவரையும் வணங்குகிறார. பதிலுக்கு அனைவரும் வணங்குகின்றனர்.
வரிசையாகத் தொண்டர்கள் தலைவருக்கு மாலை அணிவித்துக் கொண்டிருக்கும்போது அவர் வரிசையில் நின்ற பள்ளிக்ஊட வாத்தியாரைக் கண்டுவிட்டார்.
உடனே அவரைப் பெயர் சொல்லி அழைத்துப் ‘படிக்காதவங்களுக்கு பாடம் சொல்லிக் குடுங்கண்ணா நீங்க படிக்காதவனுக்கு மாலபோட வந்திருக்கீங்களே’ என்று கடமையை உணர்த்தினார்.இந்தக் கண்ணியமான முறை அனைத்து அரசியல்வாதிகளும் அவசியம் படித்தறிய வேண்டிய பாடமாகும்.
Leave a Reply