கல்வித் தடை கடக்கும் வழி

posted in: Education, Leadership | 3

கல்வியே மனித மனங்களைக் கனிய வைக்கும், அறிவைத் துலக்கி அகத்துள் ஒளியேற்ற உதவும். மனிதன் கல்வியறிவு பெறும்பொதுதான் மகத்துவம் பெறுகிறான்.

உலகை கண்களால் காணும் முன்பே கல்வி காட்டிவிடுகிறது. எனவேதான், ”கல்வியே அறிவுச் சன்னலாகி அகவீட்டை அலங்கரிக்கிறது” என்றான் ஓர் அறிஞன்.

ஒவ்வொரு மனிதனின் எண்ணத்தைச் சுத்தப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் கல்வி ஆதாரமாக இருக்கிறது.

அதுவே சிந்தனையைச் சீராக்கி செயலைத் தெளிவாக்கி வாழ்வைத் துலக்கிவிடுகிறது.

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், தெரிந்து பழகவும் பல்வேறு மக்களோடு பாசப்பிணைப்பை ஏற்படுத்தவும் கல்வியே காரண வேராக இருப்பதைக் காணலாம்.

மொத்தத்தில் கல்வியே மனிதனின் மூன்றாவது கண். அதுவே இருள் அகற்றி அறிவொளியை ஏற்றி வைக்கிறது.

ஒரு நாடு முன்னேற வேண்டுமாயின் அந்நாட்டின் ஒவ்வொரு தனி மனிதனும் முன்னேற வேண்டும். தனி மனித முன்னேற்றத்திற்குக் கல்வியின் பங்கை வாழ்வில் உணர்ந்தவர், கர்மவீரர் காமராஜர் அவர்கள்.

எல்லோரும் ஓர் நினை – எல்லோரும் ஓர் விலை என்றாக வேண்டுமானால், நாட்டின் பொருளாதாரத்தில் சமச்சீர் நிலை பெற வேண்டும்.

ஏற்றத்தாழ்வின்றி எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கல்வியைக் கட்டணத்துக்குரியதாக ஆக்கினார்கள்.

அவ்வாறெனில், கட்டணமளிக்கும் தகுதியுடையவர் மட்டுமே கல்வி பெறும் தகுதி உடையவராக இருப்பார்கள்.

இந்த நிலை சுதந்திரத்துக்ககுப் பிறகும் தொடர வேண்டுமா? அவ்வாறு தொடர்ந்தால் சுதந்திரத்துக்கே அர்த்தமில்லாமல் போய்விடுமே என்றெல்லாம் சிந்தித்தார், பெருந்தலைவர்.

கல்வியின் மூலமே பொருளாதார முன்னேற்றமும் பண்பாட்டுப் பரிவர்த்தனையும், நாகரீகமும், மக்கள் அடைவார்கள் என்பதை கர்ம வீரர்உணர்ந்தார். எனவே ஏழைகளெல்லாம் கல்வி பெறும் வகையில் எல்லோர்க்கும் கல்வி என்றாக்கினார்.

எல்லார்க்கும் கல்வி என்ற நிலை ஏற்பட்ட பின்னும், ஏழைகளால் கல்வி கற்க இயலவில்லை. அன்றாட வாழ்க்கையை நடத்தத் தேவையான வருவாய ஈட்ட பள்ளிக்குச் செல்ல வேண்டிய சிறுவர்களும் சிறுமிகளும் ஆடுமாடு மேய்த்து, அப்பா அம்மாவுக்கு உதவியாக இருந்தார்கள்.

இது கல்விக் கண் திறந்த கர்மவீரருக்குக் கவலையளித்தது.

யார் கல்வி பெற வேண்டும் என்பதற்காகக் கல்வியை இலவசமாக்கினோமோ, அவர்கள் கல்வி பெற வழி என்ன என்று சிந்திக்கலானார்.

எப்படியாவது ஏழைகளைக் கல்விக் கூடங்களுக்குள் ஏற வைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கும் காலத்தில் உதயமானதுதான் மதிய உணவுத் திட்டம்.

காமராஜர் ஒரு சுற்றுப் பயணத்திற்காக காரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அந்தச் சாலையின் ஓரத்தில் அடு மேய்த்துக் கொண்டிருந்த ஏழைச் சிறுவர்களைப் பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். இறங்கி அவர்களை நோக்கி நடந்தார்.

கட்டாயக் கல்வி என்று சட்டம் இயற்றியும் கல்வி கற்க வேண்டிய நேரத்தில் காட்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறார்களே என்று எண்ணியவாறே அச்சிறுவர்களை அடைந்தார்.

”பள்ளிக் கூடத்துக்குப் போகாமல் ஆடு மேய்க்கிறீர்களே இது சரியா?” என்று கேட்டார் தலைவர்.

”ஆடு மேய்த்தால்தானே சோறு கிடைக்கும். பள்ளிக்கூடத்தில் சோறா போடுறாங்க?” என்று கேட்டான் அந்த ஏழைச் சிறுவன்

காமராஜர் உடனே திருப்பிக் கேட்டார், ” பள்ளிக்கூடத்தில் சோறு தந்தா படிக்கப் போவாயா?” ”அவனும் ‘ஆமா’ என்றான்”.

உடனே பக்கத்தில் இருந்த தனது செயலாளரிடம் மதிய உணவுக்கான திட்டத்தைச் செயலாக்கக் கூறினார்.

இத்திட்டமே இன்றளவும் இந்தியாவில் மட்டுமின்றி உலகத்துக்கே முன்னோடியக இருக்கிறது.

மக்களுக்குப் பயன்படும் நிரந்தரத் திட்டங்களில் மனம் ஈடுபட்டதால், மக்கள் மனத்தில் நிலையாக நிற்கும் பேறுபெற்றார். பெருந்தலைவர்.

3 Responses

Leave a Reply to karuppasamy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *