வழி விட்ட வள்ளல்

posted in: admire, lessons | 0

‘பதவியை நீ தேடிப்பொனால் பதவிக்குகப் பெருமை. பதவி உன்னைத் தேடி வந்தால் உனக்குப் பெருமை’ – என்ற உயர்ந்த அரசியல் இலக்கணத்துக்கு ஏற்றாற் போல, உலகம் போற்ற வாழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர்.

அவர் எப்போதுமே பதவியைத் தேடிப் போனதே இல்லை. மாறாக பதவிதான் காமராஜரைத் தேடிப் போனது. அதனால்தான் அவர் வகித்த பதவிகள் எல்லாம் இன்றளவும் அவரால் பெருமை பெற்றுள்ளன.


பதவி ஆசையே இல்லாத ஒரே பாமரனை பதவியிலேற்றி வைத்த பெருமையைப் பாரதம் பெறக் காரணமானவர்தான் கர்மவீரர்.

பதவி ஆசை இல்லாத அவரை பதவியில் அமர்த்தியதால்தான் பதவி மூலம் அவர் பலன் பெற முயலவே இல்லை.

கிடைத்த பதவியை விடாமல் காப்பாற்ற வேண்டுமென்று துடிப்பவர்கள் தான், பதவியைக் காப்பதில் காலத்தை செலவிட்டு பாமரனைக் காப்பாற்றத் தவறி விடுகிறார்கள்.

தலைவருக்கோ பதவி ஒரு தலைத்துண்டு மாதிரி. எனவேதான் எப்போதும் விடத் தயாராக இருந்தார். இன்று பலருக்கு பதவி வேட்டி மாதிரியும், சேலை மாதிரியும் ஆகிவிட்டது. எனவே விடமுடியாமல் விழிப்பதையும் காணமுடிகிறது.

பதவி போனால் பலம் போய் விடுமோ என்று பயப்படும் பலவீனமானவர்கள் நிறைந்த நாட்டில் ஒரு பாமரத் தலைவர் மட்டுமே, பதவியைத் தூக்கி எந்நேரமும் எறியத் தயாராக இருந்தார். எறிந்து விடவும் செய்தார்

பதவி போனால் செயலிலந்து செல்லாக் காசாகி விடுபவர்கள் மத்தியில் பதவியைத் துறந்து அரசியல் துறவி ஆன பின்பும், செல்லும் காசாகவே செயல்பட்டு அரசர்களை உருவாக்கும் அரசராகவே வாழ்ந்தார்.

ஒரு அரசியல்வாதிக்கு உரிய அனைத்துத் தகுதிளும் உடைய உத்தமத் தலைவர் காமராஜர். அதனால்தான்அரசியலில் அடுத்தவர்க்குப் பதவியைக் கொடுத்துவிட்டு, பதவியில் இல்லாமலும் மக்களுக்குத் தொண்டாற்ற முடியும் என்று கூறி நிரூபித்துக் காட்டவும் செய்தார்.

பதவிப் பல்லக்கில் ஏறி ஏறியே பழகிப்போனவர்கள் இறங்க நேர்ந்தால் பல் பிடுங்கிய பாம்பாகி செயலிழந்துவிடுகிறார்கள்.

ஆனால் காமராஜர் அவர்களுக்கு அந்த நிலை வரவே இல்லை. அது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.

பொதுவாக முதுமை என்பது சுறுசுறுப்பைக் குறைக்கும். அதில் செயல் திறன் குறையும்.

அரசியல் என்பது அறப்பணி அந்த அறப்பணிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டவர்கள் வயோதிகம் வந்தால் வாலிபர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என்றார் பெருந்தலைவர்.

தான் முதலமைச்சராக இருந்து கொண்டு இப்படியொரு கருத்தைச் சொன்னால் அறிவுரை எல்லாம் அடுத்தவருக்கே என்றூ ஆகிவிடுத் என்று கருதினார் காமராஜர்.
சொல்வது யாருக்கும் எளிது, சொல்லியது போல் நடப்பதுதான் எல்லோர்க்கும் அரிது.

ஆனால்,

உயர்ந்தோர்கள் சொல்வதையே செய்வார்கள், செய்வதையே சொல்வார்கள்.

இவ்வாறு,

சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்பவர்களையே வையகமும் வைத்துப் பாதுகாக்கும்.

அதனால்தான்,

இளையோருக்கு வழிவிட்டு முதியோர் பதவி விலக வேண்டுத் என்று கூறிதானே முதலில் பதவியிலிருந்து விலகுவதாக்க் கூறிவிட்டு வெளியேறினார்.

எனவேதான்,

இத்திட்டத்தை காமராஜர் திட்டம் என்றே இன்றளவும் கூறி வருகிறார்கள்.

பதவி பதவி என்று பறக்கும் அரசியல் வேட்டைக்காரர்கள் அவசியம் படிக்க வேண்டிய பாடம் இதுவாகும்.

இளமையும் சுறுசுறுப்பும் தியாக சிந்தயும் உடைய கல்விமான்கள் அரசியலில் அதிகமாக ஈடுபடவேண்டும் என்று விரும்பினார் காமராஜர்.

ஆனால் கற்றவர்களோ அரசியல் என்பது கசடர்களின் கூடாரம் என்று ஒதுங்கி விடுகிறார்கள். கற்றவர்கள் ஒதுங்குவதால்தான் மற்றவர்கள் பதவிகளை பங்கு வைத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

ஒரு முறை மதுரையில் டி.வி.எஸ். கிளையின் திறப்பு விழா. விழாவுக்கு அப்போதைய முதல்வர் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் ‘ சத்திரியர்கள் செய்யும் தொழிலை அந்தணர்கள் செய்யலாமா?’ என்று குறிப்பிட்டார். ‘ஆனால் முதியோர் தனது பொறுப்பை இளையோருக்கு விட்டு ஒதுங்குவதை நான் பாராட்டுகிறேன்.’ என்று பாராட்டிவிட்டு அமர்ந்தார்.

தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் பேச வந்தார். ‘ முதலமைச்சர் மூதறிஞர்இராஜாஜி அவர்கள் இந்த டி.வி.எஸ். கம்பெனிப் பொறுப்பை முதியோர் இளைஞர்களிடம் ஒப்படைத்ததைப் பலவாறாகப் பாராட்டினார். இதுபோல் நாட்டின் அரசாங்கப் பதவிகளிலிருந்தும் முதியோர்கள் விலகி இளைஞர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

தமிழகத்தின் தனி முதல்வராக வரும் முன்பே தலைவரிடம் வழிவிடும் பண்பு இருந்திருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் உய்த்துணரலாம்.

எனவே,

பதவி பதவி என பதவி ஆசை பிடித்தவர்கள் பதவியைத் துறக்கும் பண்பை படிக்காத மேதையிடமிருந்துதான் படிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *