நேர்மை, நாணயம், நம்பிக்கை மட்டும் அரசியல்வாதிகளிடம் இருந்தால் போதாது. அவர்கள் சிறந்த மனிதாபிமானியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் செயலில் தூய்மையும், செய்கையில் தெளிவும் பிறக்கும். தான் ஒரு சமுதாயக் காவலன் என்ற உள்ளுணர்வு தோன்றும்.
கட்டுப்பாடு மட்டும் அரசியல்வாதியை உயர்த்தாது. அவர்களிடம் கருணையும் இருக்கவேண்டும். இத்தகைய கருணை மறவராக காமராஜர் திகழ்ந்ததால்தான் இந்திய அரசியல்வானின் இளைய நிலவாக ஒளிவீச முடிகிறது.
பேசும்போது கண்டிப்பும், செயலின்போது கடமையும், செய்தியாளர்களின் சுருக்கெழுத்தைப்போன்ற உரையாடலும் தந்திச் சொற்களால் தகாதவற்றைத் தடை செய்வதும் தலைவரின் தகுதி மகுடங்களாகும்.
இப்படிப்பட்ட இயல்புடையவரிடம் இருக்குமா என்று ஐயுறுவதற்குப் பெயர்தான் ‘கருணை’ கருணையை ஒருவர் வெளிக்காட்டினால்தானே கண்டுகொள்ள முடியும்.
கர்மவீரர் காமராஜரோ எப்போதுமே தான் ஒரு கருணையின் அவதாரம் என்று வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை.
நாட்டையும் மக்களையும் சிந்தித்துச் சிந்தித்தே நாடகமாடும் கலையை மறந்த மாமேதை அவர். ஆனாலும் கர்மவீரர் காமராஜர் ஒரு கருணை மறவர்தான்.
எல்லோரிடமும் கருணை இருக்கிறது. வெளிப்படும் விதங்களில்தான் வேறுபாடுகள். காமராஜர் அவர்களிடமோ கருணை கணிசமாகவே இருந்தது. அதுதான் மக்களுக்குச் செயலாக அவதாரமெடுத்தது என்றாலும் கர்மவீரர் வெளிப்படுத்திய கருணைக்குள் ஒரு வீரரின் வெளிப்பாடு இருப்பதைக் காணலாம்.
ஒரு முறை காமாராஜர் அவர்களின் அரசியல் தொண்டரின் இல்லத் திருமணம் வந்தது. தொண்டருக்கோ தனது வீட்டுத் திருமணத்தைத் தனது தலைவனை வைத்தே தடத்த வேண்டும் என்ற துடிப்பு. ஊரில் அனைவரிடமும் தவைவர் தனது வீட்டுத் திருமணத்துக்கு வருவதாகக் கூறிவிட்டார்.
அழைப்பிதழ் தயாரானதும் அதனைக் கொண்டு தலைவரிடம் கொடுக்கப்போனார் தொண்டர். கொடுத்துவிட்டு, ‘தாங்கள் அவசியம் எனது இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று அழைத்தார்.
தலைவரோ ”முடியாதுண்ணேன்” என்று மறுத்துவிட்டார். மனம் ஒடிந்த நிலையில் ஊர் வந்து சேர்ந்தார் தொண்டர்.
ல்யாண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
காமராஜர் வரமறுத்த வருத்தத்தால் முழு ஈடுபாடு இல்லாமலே திருமண ஏற்பாடுகளைக கவனித்தார் அவர். நண்பர்களின் கேலியும் கிண்டலும் மேலும் வருத்தத்தை கூட்டவே செய்தன.
திருமண நாள் வந்தது. மண நேரம் நெருங்கியபோது திடீரென தெருவில் ஒரு கார் வந்து நின்றது. எல்லோர் தலைகளும் திரும்பின.
கதவைத் திறந்தபடிகரிசல் காட்டில் மலர்ந்த அந்த கருப்புத் தாமரை கர்மவீரர் காமராஜர் இறங்கி நடந்தார்.
தொண்டருக்கு இன்ப அதிர்ச்சி. துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பரபரத்தபடியே தலைவரை வரவேற்க ஓடினார்.
உள்ளூர் உறவினர்களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் தங்களது கண்களையே தங்களால் நம்பமுடியவில்லை.தொண்டர் ”ஐயா வருவீங்கண்ணு தெரிஞ்சிருந்தா பெருசா வரவேற்பு ஏபாடு செஞ்சிருப்பேனே… ஏமாத்திட்டு திடுதிப்புண்ணு வந்து நின்னதாலே பெருசா ஒண்ணும் ஏற்பாடு செய்யலீங்களே…” என்று வருந்தினார்.
அதற்குக் காமராஜர் சொன்ன பதில்தான் அவரை கருணை மறவராக்கியது.
”நான் வாறேண்ணு சொல்லியிருந்தால் நீ பெருசா செலவு செய்து வரவேற்பு ஏற்பாடு செய்து விடுவே. அது மட்டுமில்ல எங்கூட வரும் தொண்டர்களுக்கும் சாப்பாடு சமைக்க வேண்டியது வந்துவிடும். உன்னைச் சிரம்ப்படுத்தக் கூடாதுண்ணுதான் வரல்லண்ணு சொல்லிட்டு வந்துட்டேன்…” என்று கூறியவாறே மணமக்களை வாழ்த்த விரைந்தார்.
ஒரு திருமண விழா கிடைத்தால் அதையே அரசியல் மேடையாக மாற்றும் அளவு அரசியல் மாறிவிட்டது இன்று.
முடிந்தால் பல நூறு திருமணங்களை நடத்தியே அரசியல் யாகம் வளர்த்துக் கொள்ளும் அளவு அரசியல் வளர்ந்துவிட்டது.
அடுத்தவர் வீட்டுத் திருமணத்தில் அரசியல் வளர்க்காமல், அவருக்குப் பொருள் செலவை உண்டாக்கி அவரைக் கடனாளி ஆக்கிவிடக்கூடாது என்ற கருணையும் உடைய கர்மவீரரின் வாழ்க்கை இன்றைய அரசியல்வாதிகள் அவசியம் படிக்க வேண்டிய பாடந்தான்.
Leave a Reply