தோல்வியை ஏற்கும் துணிவு

posted in: admire, Leadership, lessons | 1

வெற்றி என்றால் தமது தோளில் வைத்து ஆடுபவர்கள், தோல்வி என்றால் அடுத்தவர்கள் தோளில் தூக்கி வைப்பது இன்றைய அரசியலின் பழக்கம். தேர்தல் என்றால் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. ஒருவர் வெற்றியால் பலர் தோல்வியை தழுவிக் கொள்வர். இது இயற்கை.

இதில் தோற்றவர் ஆளுங்கட்சியாக இருந்தால் ‘ நான் தலைருக்கு எதிர் கோஷ்டியில் இருப்பதால் வேண்டுமென்றே தோற்கும் தொகுதியை எனக்குத் தந்தார்’ – என்பதும், ‘எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் இறுதிக் கட்டத்தில் ஜாதிப் பிரிவினையைத் தூண்டிவிட்டார்கள்’ – என்பதும், ‘பல வாக்குச் சாவடிகளில் நடந்த தில்லுமுல்லுகளே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும் சாதாரணமாக நாம் காண்பதுதான்.

இதில் தோற்றவர்கள் எதிர் கட்சியாக இருந்தாலோ, ‘ அரசு நிர்வாகம் முறைகேடாகப் பயன்படுத்தப்ட்டதே என் தோல்விக்குக் காரணம்’ என்பதும், ‘தவறான வாக்காளர் பட்டியலை வைத்து நடந்த தவறான தேர்தல்’ – என்பதும், ‘கள்ள ஓட்டுக்களே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும், தேர்தல் நேரத்தில் போலியான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். – என்பதும், ‘இந்தத் தேர்தல் செல்லாது, நான் கோர்ட்டுக்கு போவேன்’ – என்பது எல்லா தேர்தல்களிலும் எதர்த்தமாகப் பார்ப்பதுதான்.

எல்லாவற்றையும்விட பேசுபவர்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடுவார்கள். அதுதான் மக்கள்.

முழுமையான ஜனநாயக நாட்டில் வாழுகின்றோம். மக்கள் வேண்டாம் என்று நினைத்தால் வாக்கை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள்.

மிசாவும், பின் இ. காங்கிரஸ் அடைந்த மோசமான தோல்வியம், ஜனதா அடைந்த அமோக வெற்றியும், அதன்பின் மாற்றாக ஆளின்றி மறுபடியும் இ. காங்கிரஸ் வெற்றி பெற்றதையும் சிந்தித்துப் பார்த்தால், மக்கள் முடிவுகளை மாற்றிப் பார்க்கத்தான் செய்கிறார்கள்.

எனவே, அரசியலில் தோல்வி என்பது அவ்வப்போது வருவதுதான். ஆனால் அரசியல் ஞானம் உடையவர்கள் மட்டும்தான் தனது தோல்வியை ஏற்றுக்கொள்கின்றனர்.

அந்த வரிசையில் தலைமை தாங்கி நிற்பவர் பெருந்தலைவர்தான். தோல்வியை ஏற்கும் துணிவுடைய தூயவர் அவர்.

1971 அகில இந்திய அளவில் இ. காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்றது. காமராஜின் பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

நாடெங்கும் வெளியாகும் பேர்தல் முடிவுகள் நேர்மாறாகவே வந்து கொண்டிருக்கின்றன. சிந்திக்கத் துவங்கினார். தனது ஆதரவாளர்கள் தோல்வியைத் தாங்கிக்கொள்ளாமல் இருப்பதை தலைவர் அறிகிறார்.

தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்கள் பலரும் போய், பெருந்தலைவரைப் பார்த்தனர்.”ஐயா, அவர்களின் வெற்றிக்குக் காரணம் ‘ரஷ்ய மை’ ஏமாற்றிவிட்டார்கள். வாக்குச் சீட்டில் தடவிய ரஷ்ய மைதான் காரணம்” என்றனர்.

தலைவர் நிதனமாக சொன்னார், ”ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்களின் பேச்சா இது? நாம் தோற்றதற்கு காரணம் ரஷ்ய மை என்கிறீர்களே… அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை”

இவ்வாறு தன்னை அல்லது தனது தலைமையை அல்லது தனது கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தன்னடக்கத்தோடு ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த குணம்தான் அவரது உயர்வுக்கு காரணம்.

தோல்வியை சமதானத்தோடு, அமைதியாக நிதானமாக அணுகினால் அதற்குள் அடுத்த வெற்றி அடங்கியிருக்கும்.

ஆம், நிதானமாக தோல்வியை அணுகும்போது தோல்விக்கான உண்மையான காரணங்கள் தெரிந்துவிடும். அப்படியானால் மறுமுறை தோற்பது தவிர்க்கப்படும்.

முழுமையாக ஜனநாயகவாதி என்பதால் தோல்வியை முதலில் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியுடையவராக இருந்தார் காமராஜர்.

எனவேதான் அவர் வெற்றியில் மகிழ்வதும் இல்லை; தோல்வியில் வருந்துவதும் இல்லை; மனதை எப்போதும் எதார்த்த நிலையிலே வைத்திருந்தார்.

வெற்றியால் துடிக்காமலும், தோல்வியால் துவளாமலும் இருக்கவேண்டும் என்று எண்ணுபர்கள் காமராஜரைப் படிக்கவேண்டும்.
பொது நலத்தில், அதிலும் குறிப்பாக அரசியலில் ஈடுபட்டவர்கள் தோல்வியைச் சந்திக்காமலே இருக்கமாட்டார்கள்.

அவ்வாறு தோல்வியை ஏற்கும் துணிவை படிக்காத மேதையிடம்தான் படிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *