காங்கிரஸ் கூட்டத்தில் வெளியூர் ஆட்கள் மட்டுமின்றி உள்ளூர் ஆட்களும் பேசலாம் என்ற எண்ணம் எழுந்ததால் உள்ளூர் பேச்சாளர்களை பேச வைத்தார்கள். இந்நிலையில் அடித்து பேசும் ஆற்றல் கொண்ட காமராஜரும் மேடையில் பேச வேண்டும் என்று காங்கிரசார் விரும்பினார்கள்.
தோழர் தங்கப்பன் வற்புறுத்தி காமராஜரை சம்மதிக்க செய்தனர். விருதுநகருக்கு மேற்கே பாவாடி ஜமீன் பக்கம் உள்ள எளியநாயக்கன்பட்டியில் குமாரசாமித்தேவர் என்பவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். கமராசர் முதன்முதலாக அந்த மேடையில் பேச்சை தொடங்கினார்.
காமராஜர் சாதாரணமாக பேச்சுதமிழில் பேசினார். “கூட்டத்தை நடத்தி தர முன்வந்த பெரிய தனக்காரருக்கு நமஸ்காரம். உங்கள் முன்னாலே பேச சந்தர்ப்பம் கிடைச்சதுக்கு ரொம்ப சந்தோஷம். இப்போ நம் வீட்டுக்குள்ளே பக்கத்து வீட்டுக்காரன் வந்து அதிகாரம் செஞ்சா நீங்க விடுவீங்களா?
இப்படித்தான் ஆறாயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிற ஊரிலே உள்ள வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வந்து இருக்கான். நம்ம நிலத்திலே பயிர் செஞ்சு சாப்பிடுறோம். அதே மாதிரி நம்ம ஊர் பருத்தியை நாமே நூற்று வேட்டி கட்டினா இவனுக்கு என்ன?”என்று கேள்விக்குறி போட்டு பேசினார். விவசாயிகள் சிரித்து சிரித்து ரசித்து கேட்டார்கள்.
இவ்வாறாக காமராஜரின் முதல்மேடை பேச்சு வெற்றிகரமாக அமைந்தது. தோழர்களிடத்திலும் காங்கிரஸ் வட்டாரத்திலும் பெரும் பாராட்டு கிடைத்தது. பிறகு நகரங்களில் காமராஜர் மாபெரும் கூட்டத்திலும், அருமையாக பேசினார். தமிழ் நடை மாறினாலும் கூட்டத்தினரோடு உரையாடும் முறையை மாற்றாமால் பேசிவந்தார்.
Source:பெரும் தலைவர் புகழ் பாமாலை பாசறை
Leave a Reply