மக்களுக்கு முதல் மரியாதை செய்யுங்கள்

posted in: admire, lessons | 11

“எனக்கு மாலை கிடைக்குமா, மரியாதை கிடைக்குமா” என்று ஆண்டவன் வாழும் ஆலயத்திறகுச் சென்றால் கூட காத்துக்கிடக்கும் மக்கள் அதிகமாகி விட்டார்கள். அரசியல் பொதுக்கூட்டத்திற்கு வரும் அரசியல் தலைவர்கள் கூட எனக்கு ஆள் உயர மாலை வேண்டும் என்று அதிகாரம் செய்யும்நிலைதான் இன்றும் உள்ளது. மாலை வாங்க காசு கொடுத்து ஆட்களைத் தயார்படுத்தும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். காமராஜர் அரசியல் தலைவர்களில் வித்தியாசமானவர்.

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு கூட்டத்திற்கு பேச வந்தார். அப்போது நிறையப்பேர் மாலைகளை எடுத்துக்கொண்டு மேடைக்கு வந்தார்கள். கையில் மாலையோடு நிறையப் பேர்கள் மேடைக்கு வருவதைக்கண்ட காமராஜர் “எனக்கு மாலை மரியாதையெல்லாம் வேண்டாம்” என்று சொல்லி விட்டார்.

வந்தவர்கள் எல்லோரும் திகைத்துப் போய்விட்டார்கள். நாம் ஆசையோடு மாலை வாங்கி வந்திருக்கிறோம்; தலைவர் வேண்டாம் என்று சொல்கிறாரே என மிகவும் மன வருத்தத்துடன் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது பெருந்தலைவர் காமராஜர் வந்திருந்தவர்களைப் பார்த்து “நாம் ஏன் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம்? மக்களுக்கு நம் கருத்துக்களைச் சொல்வதற்குத்தானே! மக்கள் நம் கருத்தை கேட்பதற்குத்தானே பொறுமையாக வந்து காத்திருக்கிறார்கள்.

எனவே முதலில் மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை நான் சொல்வதுதான் மரியாதை; நான் முதலில் அந்த மரியாதையைச் செலுத்திவிடுகிறேன். அதன் பிறகு எனக்கு நீங்கள் மாலை, மரியாதை செய்யலாம்” என்றார். மக்களைக் காமராஜர் எந்த அளவு மதிக்கிறார் என்பதைத்தெரிந்தவுடன் வந்திருந்தவர்கள் “கப்சிப்” ஆகிவிட்டனர்.

மக்களுக்குத்தான் முதலில் மரியாதை செய்ய வேண்டும் என்னும் மகத்தான உணைமையை வாழ்க்கையிலும் என்றும் கடைப்பிடித்த மாமனிதர்தான் பெருந்தலைவர் காமராஜர்.

பெருந்தலைவர் காமராஜர் தியாகம், தன்னலமற்ற சேவை, அனைவரோடும்நெருங்கிப்பழகும் அன்பான பண்பு ஆகியவற்றால் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர்.

அவரது சிந்தனைகள் எல்லாம் சீரிய பொன்மொழிகளாகத் திகழ்கின்றன. அவை அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் என்பது குறிப்பிடத் தக்கவையாகும்.

எளிமையோடு இருங்கள்

எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.

மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் “நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்” என்றார்.

வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் “நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்” என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார்.

11 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *