மாற்றார் மீதும் மதிப்புடையவர்

posted in: admire, politics | 0

அரசியலில் எதிர்க்கட்சியினர் எதிரணியினர்தானே தவிர எதிரிகள் இல்லை. இந்த உயர்வு இருந்தால் அதைத்தான் ஆரோக்கியமாஉ அரசியல் என்று கூறலாம். அந்த ஆரோக்கியமான அரசியல் நடத்தியவர்தான் காமராஜர்.

கொள்கையினைப் பகைக்கலாமே தவிர அதைக் கொண்டவர்களைப் பகைக்கக்கூடாது எனும் உயர்ந்த சித்தாந்திகளுடன் உறவாடியவர் இவர். ஆதலால், பெருந்தலைவர் ஓர் உயர்ந்த அரசியல் ஞானியாகவே வாழ்ந்தார்.

மாற்றுக் கருத்து மீது மதிப்பில்லாமல் போனபோதும் மாற்றார் மீது மிகவும் மதிப்புடைஅவராக வாழ்ந்தவர், கர்மவீர்ர் காமராஜர்.

ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அவசியம் படிக்கவேண்டிய பாடமாகத் திகழ்பவர்தான், இந்தப் பாமரர்களின் தலைவர்.

அரசியல்வாதிகள் எப்படி நடக்க வேண்டும் என்பதை அந்த ஏழைப் பங்காளன் வார்த்தையிலிருந்து எவ்வளவோ அறியலாம்.

அரசியலின் வெற்றி, சிந்தனையில் இருக்கலாம். ஆனால் ஓர் அரசியல்வாதியின் வெற்றி அவன் அதை நிறைவேற்ற அனுபவிக்கும் சிரமங்களில் இருக்கிறது.

அரசியல் பற்றிய தார்மீகச் சிந்தனையும், தர்மமும் தடம்புரண்டு வருவதாக உணர்வது உண்மையானால் உடனாக அதைத் திருத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

அவ்வாறு திருத்த முற்படுபவர்களுக்குக் காமராஜரின் வாழக்க்கையைக் கட்டாயப் பாடமாக்கலாம்.

ஒரு நாட்டுக்கு அரசியல் வேர் போன்றது என்றால் அவர் ஆணிவேர், கோபுரம் என்றால் அவர் அஸ்திவாரம்.

சேவை நோக்கத்தை விட்டுவிட்டு கட்சிகள் வணிக நோக்கத்தை கட்டிக் கொள்வதை நிறுத்த விரும்பினால் படிக்காத மேதையிடமிருந்து பாடம் படிக்க வேண்டும்.

எல்லாக் கட்சியினரும் ஒருவரை ஒருவர் மதிப்புடையவர் என்று உணர வேண்டும். மதிக்க வேண்டும்.

ஒருவரை நேரில் மதிப்பவர்கள் வானளாவப் புகழ்பவர்கள், அவரில்லாத இடத்தில் அவதூறு பேசுவதைக் காண்கிறோம்.

நண்பர்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்.

மேடைகளிலே ஒரு கட்சியினர் தங்கள் எதிர்க் கட்சியினரை அழுகிய வார்த்தைகளால் அபிஷேகம் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.

எதிர்க்கட்சியினரை தரக்குறைவாகப் பேசுவதையே தாரக மந்திரமாகக் கொண்டவர்களைக் கூட, தரம் தாழ்த்திப் பேசுவதற்குத் தலையசைக்காமல், மேடையிலேயே தடைசெய்யும் தலைவரே பெருந்தலைவர்.

அதனால்தான் மாற்றான்மீதும் மதிப்புடையவராக வாழ்ந்தார்.

அறிஞர் அண்ணா அவர்களின் ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்னும் ஆற்றின் கொள்ளிடமாகத் திகழ்ந்தார் காமராஜர்.

அண்ணாவும், காமராஜரும் எதிரும் புதிருமாய் இருந்த காலம். காமராஜரின் ஒரே அரசியல் எதிரியாய் அண்ணாவின் அரசியல் கொடி பறந்த காலம்.

அப்போது காமராஜர் ஆட்சியில் இல்லை. எம்.பி.யாக இருந்தார் அவ்வளவுதான்.

எம.பி. என்பதால் அப்போது அவர் டில்லியில் இருந்தார். அந்த நேரம்தான் அமெரிக்க அதிபர் நிக்சன் இந்தியாவுக்கு வந்திருந்தார்.

புதுடில்லியில் தங்கியிருந்த நிக்சன் அப்போது பார்க்க விரும்பிய ஒரே தலைவர் காமராஜர்தான்.

இத்தனைக்கும் காமராஜருக்கு தனது சொந்த ஊரிலே தோற்கடிக்கப்பட்டு, நாகர்கோவில் தொகுதியில் நின்று எம்.பி. ஆகி அரசியல் அஞ்ஞாதவாசம் ஆரம்பமான நேரம்.

ஆனாலும் அமெரிக்க அதிபர் நிக்சனுக்கு அவர் மீதிருந்த மதிப்பு மாறவில்லை. அதனால்தான் காமராஜரைப் பார்க்க நேரம் கேட்டு ஆள் அனுப்பினார்.

இந்தியாவின் வலுமிக்க எளிய தூண் காமராஜர் என்பது அமெரிக்க அதிபரின் எண்ணம். அதுவும் இந்தியா வந்தபின் கட்டடங்களைப் பார்த்துவிட்டு காமராஜரைப் பார்க்காமல் மோனால் அது அழகல்ல என அதிபர் நிக்சன் நினைத்தார் போலும்!

அமெரிக்கா போகும் எத்தனையோ பேர் ஆசைப்பட்டும் பார்க்கமறுக்கும் அதிபர், காமராஜரைத் தானே காண விரும்புகிறார் என்றால், அது நம் தலைவரின் தகுதியை தரப்படுத்துகிறது என்றே பொருள்.

காமராஜரிடம் தகவல் சொல்லப்படுகிறது. அதுவும் மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள். ஐயாவை பார்க்க அமெரிக்க அதிபர் நிக்சன் ஆசைப்படுகிறாராம்….

காமராஜரோ நிதானமாக ”முடியாது என்று கூறு” என்றார். தலைவரின் அந்தரங்கச் செயலர் ‘ஐயா! அமெரிக்க அதிபர் நிக்சன் இப்போது இங்கே டில்லியில் இருக்கிறார். உங்களைப் பார்க்க விரும்புகிறாராம்” என்று காமராஜரிடம், புரியவில்லையே, என எண்ணிப் பேச புரியுதுண்ணேன்! இப்ப பார்க்க முடியாதுண்ணு சொல்லுண்ணேன்” என்று சுறுக்கெனச் சொல்லிவிட்டார்.

அந்தரங்கச் செயலருக்கோ அதிர்ச்சி. வல்லரசே வலிய வந்து காணத் துடிக்கும் வாய்ப்பு வந்த போதும் உறுதியாக மறுக்கிறாரே என்ற வருத்தம்.

நிக்சன் போனதற்குப் பிறகு ஒரு நாள் காமராஜரின் அந்தரங்கச் செயலாளர் தலைவரிடம் சென்று, ‘ஐயா உலகே பெருமைப்படும் அமெரிக்க அதிபர் வந்து உங்களைப் பார்க்க விரும்பிய பின்பும் நீங்கள் மறுக்கலாமா?” என்றார்.

கடுகடுவெனப் பொறிந்தார் காமராஜர். ; அவர் பெரிய ஆளா இருக்கலாம்ண்ணேன்… யார் இல்லணது… நம்ம ஊர் அண்ணாதுரை அமெரிக்கா போனபோது இதே நிக்சனை அவர் பார்க்க விரும்பினார். அப்போது அவரைப் பார்க்க மறுத்தவர்தானே இந்த நிக்சன்… நம்ம ஊர்க்காரரைப் பார்க்காதவர நாம ஏன் பார்க்கணும்ண்ணேன்” என்று கோபத்தோடு பேசிய பின்தான் காமராஜரின் உள்ளம், உயர்ந்த மனம் உலகுக்கே தெரிந்தது.

இது இவருக்கு, மாற்றான் மீதும் மதிப்புடையவர் காமராஜர் என்னும் மறுவற்றப் புகழைத் தந்தது.

எனவே ஒரு கட்சியினர் எதிரணியினர் – எதிர்க் கட்சியினர் மீது மதிப்புக் காட்டவேண்டும் என எண்ணினால், படிக்காத மேதையிடம் படித்துப் பயனடைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *