உயர்ந்த உள்ளம்

posted in: admire, lessons | 2

உயர்ந்த உள்ளம் இருப்பவரிடம் மட்டுமே உயர்ந்த செயல்கள் வெளிப்படும். அவர்களால் மட்டுமே உயர்ந்தோரை உருவாக்கவும் முடியும். காமராஜர் ஓர் உயர்ந்த மனிதர். உருவத்தால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர்.

ஜனநாயகத்தின் மீது அளப்பரிய பற்றுடையவர். அதனால்தான் அவரை ஜனயாயக சோசலிச சிற்பி என்று அகிலமே பாராட்டியது.

ஜனநாயகப் பற்றும், சுதந்திர வேகமும் பொதுவாகவே எல்லா காந்தியவாதிகளிடமும் இயல்பாகவே இருந்தது. ஆனால் பெருந்தலைவர் ஜனநாயகத்தை தமது இலட்சியமாகவே கொண்டு வாழ்ந்தார்.

காந்தியிடம் கற்ற சத்தியம், அஹிம்சை, வாய்மை, ஆகிய மூன்றையும் தமது அரசியல் தர்மத்திலும் கையாண்டார் காமராஜர். எனவேதான் அவரது எண்ணத்தில் தூய்மையும் செயலில் நேர்மையும் இருந்தது.

நாட்டுப் பணிக்குத் தன்னை அர்ப்பணிப்பவர்கற் தங்கள் தன்னலத்தை மறக்க வேண்டும். பொழுதெல்லாம் பொதுநலத்துக்காக உழைக்க வேண்டும்.

இன்று இதன் இலக்கணத்தில் வினாக் குறிகள் விழலாம்.

ஆனால் தன்னலமற்று அவர் அன்று வாழ்ந்ததால்தான் இன்று பலரும் படிக்கின்ற பாடமாகத் திகழ்கின்றனர்.

பொதுவாகவே அன்று காந்தியவாதிகள் சிக்கனத்துடன் அதே வேளை நாட்டுச் சிந்தனையுடன் சேவை செய்து வந்தனர்.

மக்களுக்காகத்தான் தாங்களே தவிர தங்களுக்காக மக்கள் இல்லை என்பதில் மாறாத சிந்தனையுடன் இருந்தனர். அதனால்தான் பொதுப்பணத்தைக் கையாளும்போது கவனமாக இருந்தனர். அதுபோல சிக்கனமாகவும் இருந்தனர்.

முழுக்க முழுக்க காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை காங்கிரஸ்கார்ரகள் என்பதைவிட, காந்தியவாதிகள் என்பதே பொருந்தும்.

ஏனெனில் பெருந்தலைவர் காமராஜர் போல் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்களை காங்கிரஸ்காரர்களுள் காந்தியவாதிகள் என்பதே சிறப்பாகும்.

காசுமேல் ஆசை வைக்காததால்தான் அவரை கறைபடாத கரம் என்கிறோம். ஒரு பொதுநல ஊழியன் கற்றுக்கொள்ள வேண்டியவை காமராஜரிடமும் காந்தியவாதிகளிடமும் ஏராளம். அப்படி ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார்கள்.

திரு. லால்பகதூர் சாஸ்திரி அப்போது காங்கிரஸ் காரியக் கமிட்டியின் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.காங்கிரஸ் கமிட்டியோ வாழ்க்கைக்குப் போதுமான பணத்தை மட்டுமே சம்பளமாக் கொடுத்துவந்தது.

அவரது மாதச் சம்பளம் நாற்பது ரூபாய். ஒரு குடும்ப வாழ்க்கைக்கு அது போதுமா? என்றால் போதாதுதான். ஆனால் எளிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அது போதும்.

பொதுநல ஊழியர்கள் தேவை ஏற்பட்டால் தனது அன்றாட வாழ்க்கைக்குரிய குறைந்த அளவு பணத்தையே சம்பளமாகப் பெற்றுவந்தனர்.

லால் பகதூர் சாஸ்திரியின் மனைவி வருவாய் அறிந்து வாழ்க்கை நடத்தும் பெரும் குணம் உடையவர். அதனால்தான் அந்த பணத்துக்குள் சிக்கணமாக அவர்ளால் குடும்பத்தை நடத்த முடிந்தது.

ஒரு நாள் திடீரென நண்பர் ஒருவர் வந்தார். சாஸ்திரி வரவேற்று அமர வைத்தார். பேச்சுவாக்கில் சாஸ்திரியிடம், ” பணம் இருந்தால் ஐம்பது ரூபாய் கடனாகத் தாருங்கள்” என்றார்.

சாஸ்திரிக்குச் சிரிப்புதான் வந்தது. வந்தவர் ” ஏன் சிரிக்கிறீர்கள்?” என்றார். ” ஒரு பொதுநல ஊழியனிடம் பொன்னும் பொருளும் கொட்டியா கிடக்கும்? நீர் கடன் கேட்டதை நினைத்தேன். சிரிப்பு வந்துவிட்டது” என்றார்.

இந்த உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த அவரது மனைவி உள்ளேயிருந்து வந்தார். சாஸ்திரியிடம், ”இவர் நமக்கு வேண்டியவராயிற்றே… எப்போதும் கேட்டதே இல்லை. ஏதாவது உதவி செய்வோம்” என்றார்.

சாஸ்திரியும் ”நான் வேண்டாம் என்றா கூறுகிறேன். இருந்தால்தானே” என்று கூற, உடனே, அவரது மனைவி ”என்னிடமிருக்கிறது கொடுக்கவா?” என்றார். சாஸ்திரியும் ”ஓ தாராளமாக” என்று கூறிவிட்டார்.

வந்தவர் வாங்கிக்கொண்டு போனதும் சாஸ்திரி மெதுவாகத் தன் மனைவியிடம் கேட்டார். ”நமக்கு கிடைக்கும் மாத வருமானமோ நாற்பது ரூபாய். அதற்குள் குடும்பம் நடத்துவதே சிரமம் எப்படி உனக்கு ஐம்பது ரூபாய் மீதி வந்தது?” துணைவியார் ”சிக்கனமாகச் செலவு செய்து மாதா மாதம் பத்து பத்து ரூபாய் மீதபடுத்தி வைத்திருந்தேன்” என்றார்.

மறுநாள் காலை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்குப் போனதும் சாஸ்திரி செய்த முதல் வேலை இதுதான்.அலுவலரை அழைத்து எனது வாழ்க்கைச் செலவுக்காக நீங்கள் மாதா மாதாம் நாற்பது ரூபாய் தருகிறீர்கள். என் மனைவி சாமர்த்தியசாலி எனவே மாதச் செலவை முப்பதுக்குள் முடித்துவிடுகிறாள். ஆகவே அடுத்த மாதம் முதல் எனக்கு மாதச் சம்ளம் முப்பது ரூபாய் போதும்” என்றார்.

இப்படி எளிய வாழ்க்கையை நேர்மையுடன் நடத்தியவர்கள் காந்தியவாதிகள். எனவேதான் அவர்கள் நடத்திய அரசியலும் எளிமை இருந்தது. ஆடம்பரம் அறவே இருந்ததில்லை.

இந்தப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர் என்றால்தான் கர்மவீரர் காமராஜரால் ஒன்பது ஆண்டுகள் ஒரு பைசாவைக்கூட கையில் தொடாமல் ஆட்சி செய்ய முடிந்தது.

கர்ணனது உயிர் கொடையில் இருந்தது போலவே காமராஜரின் உயிர் இலட்சியத்தில் இருந்தது. ஜனநாயக சோசலிசமே காமராஜின் அரசியல் வாழ்வின் அசைக்க முடியாத இலட்சியம்.

எல்லாருக்கும் கல்வி. அதன் மூலம் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு. அதன் மூலம் எல்லோர்க்கும் உணவு. ரதன் மூலம் எல்லோருக்கும் சமத்துவம் காண வேண்டுமென்பதே காமராஜரின் இலட்சியம்.

இந்த இலட்சியத்துக்காகவே இறுதிவரை வாழ்ந்த உயர்ந்த மனிதர் அவர்.

கர்ணன் கொடுப்பதையே குறியாகக் கொண்டவன். அதுவே அவனது உயிராக இருந்தது. அதனால்தான் அம்புபட்டு தேர்ச் சக்கரத்தில் சாயந்தபோதும் உயிர் போகவில்லை. தர்மதேவதை தடுத்தாள்.

கண்ணன் உண்மை நிலைய உடனே உணர்ந்தான். இந்த சூழலில் கர்ணனின் உயிர் போகாது. அவனது உயிர் போகவேண்டுமானால் அவனிடம் எஞ்சியுள்ள தர்ம பலனையும் பெற்றுவிட வேண்டும்.

எனவே கண்ணன் ஓர் அந்தண வடிவம் கொண்டு உயிருக்கு போராடும் கர்ணனிடம் புண்ணியத்தை யாசகமாகப் பெற்றுக்கொண்டதும் அவன் இறந்தான்.

எனவே, இலட்சியத்தில் உயிரை வைத்திருப்பவர்கள் அந்த இலட்சியத்துக்கு இழுக்கு ஏற்படுமானால் உயிரை இழந்துவிடுவர்.

கர்ணனை போன்றவர்தான் காமராஜரும்.

உயிரும் இலட்சியமும் ஒன்றாக இருப்பவர்கள்தான் உயர்ந்தவர்கள். அவர்களின் உள்ளம்தான் இனைவனின் உறைவிடம்.

காமராஜர் எப்போதுமே ஒரு கடவுள் பக்தராக இருந்ததில்லை. ஆனால் அரசியல் பக்தர்கள் லட்சக்கணக்கில் அவரைஏ வணங்கினார்கள்.

என்ன காரணம்?

தொண்டராக வாழ்வை தொடங்கி அரசியலில் தலைவராக உயர்ந்த போதும் தொண்டராகவே வாழ்ந்து தொண்டராகவே மறைந்ததால் இனறவனே இத் தொண்டர் தம் உள்ளத்தில் ஒடுங்கிவிட்டார்.

ஏழைகளுக்காக இரங்கி, அவர்களின் துயர்நீக்க எல்லோருக்கும் கல்வியை இலவசமாக்கிய ஏழைப்பங்களான். உயர்ந்த உள்ளம் உடையவர் அவர்தான்.

எனவே,

உயர்ந்த உள்ளம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் வாழ்வில் உயரவும் புகழில் உயரவும் முடியும் என்பதை பெருந்தலைவரின் வாழ்க்கை உணர்த்துகிறது.

இது படிக்காத மேதையிடம் படிக்க வேண்டிய முதல் பாடமாகும்.

2 Responses

  1. Madhuri

    very interesting about my thalaivar he is my inspiration for my life it is useful for my oratorical competition Thank u so much

Leave a Reply to Kaylynn Cancel reply

Your email address will not be published. Required fields are marked *