காமராஜர் தனது இளமைப் பருவம் தொட்டே சோதனைகளைக் கண்டிருக்கிறார். ஆனால் அந்நச் சோதனைகளால் அவரது இலட்சியத்தை செய்து முடிக்க இருந்த மாபெரும் சாதனைகளைத் தடுத்து நிறுத்தி விட முடியவில்லை.
ஆனால் தனது வாழ்நாளில் கடைசிக் காலத்தில்தான் காமராஜர் எதிர்பாராத சோதனைகக் கண்டார் என்றே சொல்லலாம்.
அப்படியென்ன சோதனைகளை அவர் கண்டார்? முன்னமேயே இந்த நூலில் அவைகள் முறையாகத் தொகுத்துது தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளன என்றாலும் கூட இங்கே அவைகளை மீண்டும் நினைவு படுத்துவது நிச்சயமாக அவரை மதிப்பிடுவதற்கும் அவருக்கு மரியாதை கொடுப்பதற்கம் வாய்ப்பாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே மீண்டும் அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
”தந்தையொடு கல்விபோம் – பெற்ற
தாயோடு அறுசுவை உண்டிபோம்”
– என்பார்கள். இவைகள் இரண்டுமே காமராஜருக்கு இளமைக் காலத்திலேயே நிகழ்ந்து இருக்கின்றன.
காமராஜர் ஆரம்பப் பள்ளியிலே படித்துக் கொண்டு இருந்த காலத்திலேயே, அவரது தந்தை குமாரசாமி நாடார் அகால மரணம் அடைந்தார். அதனால் காமராஜரின் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தாயாருடன் பிறந்த சகோதரர்கள் தாய் மாமன்கள் கடைகளில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.
விருது நகரிலேயே தாய் மாமனது ஜவுளிக் கடையில் வேலை பார்த்தார். அதன் பின்னர் மற்றொரு மாமனது மரக்கடையில் திருவனந்தபுரத்தில் வேலை பார்த்தார். காமராஜரது நடவடிக்கைகளால் தனக்கும் தனது வியாபாரத்துக்கும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று நினைத்த அவர், காமராஜரை விருதுநகருக்கே திருப்பி அனுப்பி விட்டார்.
தாயார் சிவகாமி அம்மாள் தனது ஒரே மகனான காமராஜருக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் காமராஜர் கடைசிவரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்திருந்தார்.
தாயாரின் சமையல் சாப்பாட்டை அவர் சிறிது காலமே சாப்பிட்டவராவார். விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றதினால், காமராஜர், வீட்டுச் சாப்பாட்டை விடச் சிறைச்சாலைச் சாப்பாடுகளையே அதிகமாகச் சாப்பிட்டிருப்பார்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை முற்றிலும் இணைத்துக் கொண்டு தொண்டராக ஆன காமராஜர், படிப்படியாக உயர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார். 12 ஆண்டு காலம் அவர் அந்தப் பதவியை வகித்ததார். 9 ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக இருந்தார். 2 1\2 ஆண்டு காலம் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தார். கே. பிளான் தந்தார். கிங்மேக்கராக இந்தியாவின் பிரதமர்களைத் தான் நினைத்தப்படி, நினைத்தவர்களை உருவாக்கி அமர்த்தினார்.
காந்திஜி தனது பத்திரிகையில் இராஜாஜியின் பேச்சைக்க கேட்டு, தன்னப் பற்றித் தவறாக எழுதியிருந்த போது காமராஜர் வேதனைப்பட்டார். தனது அரசியல் குருவான சத்தியமூர்த்தி மறைந்த போது மனம் வருந்தினார்.
வறுமையினால் கிராமத்துக் குழந்தைகள் கல்வி இயலாமல் இருந்தது கண்டு இரக்கப்பட்டார். அதற்கு ஒரு வழியும் கண்டார். எல்லோரும் இலவசக் கல்வி பெறச் செய்தார்.
1948 – ஆம் ஆண்டு, சென்னை, தியாகராயநகர், திருமலைப்பிள்ளை சாலை, எட்டாம் எண்ணுடைய வீட்டிற்கு குடியேறியவர் இறுதிவரை அந்த வீட்டிலேயே வசித்திருந்தார்.
காந்திஜி, பண்டித நேரு மறைந்த போது வேதனைப் பட்டார். லால்பகதூர் சாஸ்திரி இறந்த போது வேதனைப்பட்டார். அப்போது நடந்த சோதனைகளையல்லாம் தனது ராஜதந்திரத்தினால் வென்று உயர்ந்து நின்றார்.
இப்படிப்பட்ட பெருந்தலைவர் காமராஜருக்கு இப்போது என்ன சோதனைக்காலம்? யாரால் வந்தது? என்னதான் நடந்தது? என்று தானே கேட்கிறீர்கள்.
அதுதான் ” வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தது” என்பார்களே, அது போன்று காமராஜருக்கும் நிகழ்ந்துவிட்டது. யார் மீது முழு நம்பிக்கை வைத்து, எதிரிகளைச் சமாளித்துப் பிரதமராக்கி வைத்தாரோ, அந்த இந்திராகாந்தியால் தான் பிரச்சினைகள்.
1969 ஆம் ஆண்டிலேயே சோதனை ஆரம்பமானது. குடியரசுத் தலைவருக்குக் காமராஜர் நீலம் சஞ்சீவி ரெட்டியை நிறுத்த எண்ணினார். இதற்கான செயற்குழுக் கூட்டம் பெங்களூரில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு, பிரதமர் இந்திரா காந்தியும் வந்திருந்தார். அனைவரின் விருப்பமும், காமராஜரின் விருப்பம்போல் இருந்ததால் எந்தவிதமான எதிர்ப்பையும் இந்திரா காந்தி தெரிவிக்கவில்லை.
ஆனால் பெங்களூரிலிருந்து டெல்லி சென்றதும் இந்திராகாந்தி வேறு விதமாகச் செயல்பட்டுக் காமராஜருக்கு எதிர்ப்பாளர் ஆனார். மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள் என்று கூறித் தான் விரும்பிய வி.வி. கிரியைக் குடியரசுத்தலைவருக்குப் போட்டிட வைத்து அவருக்கு வெற்றியையும் தேடித்தந்தார்.
காங்கிரஸ் இரண்டாகப் பிளந்தது.இந்திரா காந்தியின் எதிர்ப்புக் கோஷ்டியிலேயே, அதாவது சிண்டிகேட் என்று கூறப்பட்ட பழைய காங்கிரஸிலேயே காமராஜர் இருந்துவிட்டார்.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை போல இந்திரா காந்தியின் போக்குத் தனக்கு எதிராக இருந்தாலும், அவர் இந்திரா காந்தியை தாழ்த்தவோ, குறை கூறவோ, குற்றம் சுமத்தவோ விரும்பியதே இல்லை. இதுபோலவே இந்திரா காந்திக்கும் பெருந்தலைவர் காமராஜரின் மேல் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனாலும் இந்திரா காந்தி தன்னுடைய கொள்கைப் படி காமராஜரின் கருத்துக்கு மாறுபட்டே இருந்தார்.
இந்திரா காந்தியை எதிர்த்துத் தேர்தலிலே போட்டியிட்ட ராஜ் நாராயணன், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்திரா காந்தி தேர்ந்து எடுக்கப் பட்டதைச் செல்லாது என்று அறிவிக்குமாறும் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
பிரதமர் இந்திராகாந்தியின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ‘முழுப்புரட்சி’ என்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். அந்தப் போராட்டத்துக்கு வடமாநிலங்களில் பெரும் ஆதரவு கிடைத்தது.
மாணவர்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் போகாமல் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அரசாங்க ஊழியர்கள் இராணுவத்தினர் யாவரும் தங்கள் பணிகளைச் செய்யாதீர்கள் என்று ஜெய்பிரகாஷ் நாராயணன் வேண்டுகோள் விடுத்தார்.
பல இடங்களில் வன்முறை தலை தூக்கியது. தடியடி,துப்பாக்கிப் பிரயோகம் நடந்தன. போராட்டம் வலுத்தது. துப்பாக்கிச் சூடுகளும் பெருகின. ஜெயப்பிரகாஷ் நாராயணனையும் மற்றும் பல தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
பிரதமர் இந்திரா காந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்த பழைய காங்கிரஸ் அங்கத்தினர்கள் பலரையும் கூடக் கைது செய்து, விசாரசணை இன்றிக் காவலில் வைத்தார்கள். இயக்கம் மேலும் வலுவடைந்தது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது.
இந்த நிகழ்ச்சிகள் காமராஜரின் மனதைப் பாதித்தது. மிகவும் மனம் வருந்தினார். சுதந்திரப் போராட்ட வீரரும், தியாகசீலருமான ஜெயப்பிரகாஷ் நாராயணனையும், அவரைப் போன்ற மற்ற தலைவர்களையும் இந்திரா காந்தி ஈவு இரக்கமின்றிச் சிறையிலடைத்து கொடுமைப்படுத்தியது காமராஜருக்கு வேதனை அளித்தது.
தனது கருத்துக்கள், ஆலோசனைகள் எடுபடவில்லையே, தனக்கு இது ஒரு சோதனைகாலமே என்ற் நினைத்திருந்த காமராஜர் நடப்பதையெல்லாம் பார்த்து நமக்கு மட்டுமல்ல, இது இந்திய நாட்டிற்கே சோதனைகாலம் என்று எண்ணிக்கொடண்டார்.
ஏற்றி வைத்த இந்திராகாந்தியை இறக்கி வைக்க காமராஜருக்கு வெகு நேரமாகாது. எதிர்ப்புத் தெரிவித்துப் போராட அவருக்கு அனுபவமும், ஆற்றலுமாயில்லை? இருந்தது தான். என்றாலும் என்ன செய்வது என்ற அறியாது காமராஜர் தவித்துக் கொண்டிருந்தார்.
1975 – இல் இந்திரா காந்தியின் தேர்வு செல்லாது என்று தீர்ப்பானது. தீர்ப்பை எதிர்த்து இந்திரா காந்தி மேல் முறையீடு செய்தார். இதற்கு இடையில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். எமர்ஜன்சி வந்தது. எமர்ஜென்சியால் இந்திராகாந்தி எல்லா எதிரிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தார். ஆனால் அவர் காமராஜரை மட்டும் வெளியே விட்டு வைத்திருந்தார்.
அப்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. முதலமைச்சர் கருணாநிதியைத் தவிர மற்ற அமைச்சர்களையும், தி.மு.க. தலைவர்கள், தொண்டர்களையும், இந்திராகாந்தி சிறையில் அடைத்தார்.
இந்தச் சோதனைக்காலம் எப்போது முடியும் என்று வேதனைப்பட்டுக்கொண்டே மௌனமாக இருந்தார் பெருந்தலைவர் காமராஜர். தனது நண்பர்களோடு உரையாடுவது, அன்றாட அலுவல்களைக் கவனிப்பது, செய்தித் தாள்களைப் படித்து நாட்டு நிலவரத்தைத் தெரிந்து கொள்வது என்ற அளவிலேயே காமராஜர் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.
”பூனைக்கு யார் மணி கட்டுவது?” என்று எலிகள் பேசிக்கொண்டதைப் போல, ”இந்த இந்திராகாந்திக்கு யார் புத்தி சொல்வது?” என்று எல்லாக் கட்சித் தலைவர்களும் சொல்லிக் கொண்டு சும்மாவே இருந்தார்கள்.
பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. வருமான வரிச் சோதனைகள் இந்தியநாடு முழுவதிலும் நடந்தன. எட்டு மணி நேர வேலைகள். ஒரு நிமிடம் கூட வீணாகாமல் நடந்தன. ”தான் இட்டது தான் சட்டம் – எடுத்ததுதான் முடிவு” என்று பிரதமர் இந்திராகாந்தி செயற்பட்டு வந்தார். நாட்டின் போக்கைக் கண்டு இது நல்லதற்கல்ல என்று காமராஜர் நினைத்துக் கொண்டார்.
பாரதி பாடிய போலிச் சுதேசியாக்க் காமராஜர் இருக்க விரும்பவில்லை.
”சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே – அவர்
செய்வதறியாரடி” – என்றான் பாரதி.
காமராஜர் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தச் சகோதரர்கள் காரணமேது மின்றிக் கைது செய்யப்படுவதையும், சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்யப்படுவதையும் கண்டு சிந்தை மிக இறங்கினார்.
ஆனால் செய்வது என்ன என்று தெரியாமல் தான் தவித்தார் தத்தளித்தார். இந்திராகாந்தியின் எதேச்சதிகாரப் போக்கால், திடீர் அதிரடி நடவடிக்கைகளால், நாடே கதிகலங்கிப் போயிருந்தது.
சிறையில் அன்று அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் நோய்வாய்ப்பட்டார். சிறுநீரக்க் கோளாறுகளால் பாதிக்கபட்டார். டெல்லி மருத்துவ மனையிலே சேர்த்து அரசாங்கச் செலவிலேயே ஒரு கைதிக்குச் செய்வது போல் மருத்துவ சிகிச்சை செய்தார்கள். மருத்துவம் பலனளிக்காமல அவர் சிறையிலேயே மரணம் அடைந்தார்.
இதைக் கேட்டுக் காமராஜர் கண் கலங்கினார். ஒரு தியாக தீபம் அணைந்து விட்டதே என்று பெரிதும் கவலைப்பட்டார்.
பதவி இல்லையே என்று காமராஜருக்கு என்றைக்குமே கவலை இருந்தது கிடையாது. பதவிக்கு அவர் ஆசைப்பட்டதும் இல்லை. பதவிக்காகத் தனது கொள்கைகளை அவர் விட்டுக் கொடுத்ததும் இல்லை.
காமராஜர் நினைத்திருந்தால் பிரதமர்களை உருவாக்கிய அவரே பித்தமராக்க்க கூட இருந்திருக்கலாம். அவரும் காங்கிரஸ் நாடிளுமன்ற உறுப்பினர் தானே . பலபேர்கள் அவரிடம் வந்து, ”ஏன் நீங்களே இந்தியப் பிரதமராக இருக்கக்கூடாது. நாங்கள் எல்லாம் ஆதரிக்கிறோம்.” என்று கூடச் சொல்லிப் பார்த்தார்கள். அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை.
சில பேர்கள் காமராஜரைக் குடியரசுத் தலைவராக இருக்க வேண்டும் என்றார்கள். அதற்கும் காமராஜர் இணங்கவில்லை. ஆரம்பகாலத்தில் காங்கிரஸில் ஒரு தொண்டனாகவே அவர் இருந்தார். அந்தத் தொண்டு மனப்பான்மையே இன்னும் அவர் உள்ளத்தில் தலை தூக்கி நின்றது. பட்டம், பதவிகட்கு என்றும் ஆசைப்பட்டவர் காமராஜர் இல்லை.
பட்டமும், பதவியும் தான் காமராஜரைத் தேடி வந்ததே அல்லாது அவர் அவைகளை என்றுமே தேடிப் போனது கிடையாது.
பல்கலைக்கழகம் ஒன்று காமராஜருக்கு, ”டாக்டர் பட்டம் கொடுக்க முன் வந்தது. இந்தப் பட்டத்தை வேறி யாராவது, படித்தவர்களுக்கே சிறந்த சேவைகளைத் தேசத்திற்குச் செய்தவர்களுக்குக் கொடுங்களே” என்று சொல்லி டாக்டர் பட்டம் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.
இவைகளுக்குப் பின்னர் பாண்டிச்சேரியில் ஒரு இடைத்தேர்தல் வந்தது. பழைய காங்கிரசையும், இந்திரா காங்கிரசையும் ஒன்றாக்க வேண்டும் என்று சிலர் ஆசைப்பட்டார்கள். இதுபற்றிக் காமராஜரிடம் கூட வந்து சிலர் ஆலோசனைக் கேட்டார்கள்.
காமராஜர் எந்தவிதமான பதிலும் அவர்களுக்கு கூறாமல் மௌனமாக இருந்தார். அவருக்குத் தெரியும் எல்லா நன்மை தீமைகளும் இரண்டும் ஒன்றாகி ஒன்றுமே இல்லாமற் போய்விட்டால் என்ன செய்வது? இப்படி நினைத்து காமராஜரது உள்ளம். பெரிய மீன் சின்ன மீனைத் தின்று ஜீரணித்து விட்ட கதையாகிவிட்டால், எப்படி ஒழிந்த, மறைந்த ஒன்றை அடையாளம் காண்பது. எறிவது எரியும் வரை எரிந்து ஓயட்டும். பழையது வீரியமிழந்தாலும் இருக்கிறேன் என்றாவது அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கட்டும். காமராஜரின் எண்ணம் இப்படித்தான் இருந்தது.
கூரை வீடு தீப்பற்றித் திடீரென எரிகிறது. தீப்பிழம்புகள் உயர எழுந்து வான் முட்ட புகையையும் கக்குகிறது. பக்கத்து வீடுகளிலும் தீ பரவாமல் தடுக்க வேண்டும். எல்லாரும் ஒன்று கூடிப் பேசினார்கள். அருகிலிருக்கும் ஒரு குட்டையிலிருந்து ஆளுக்கு ஒரு குடம் தண்ணீர் எடுத்து வந்து எரியும் தீயில் ஊற்றினால் அணைந்து விடும் என்று சிலர் ஆலோசனை கூறினார்கள். இவர்கள் கூடிப் பேசி ஒரு முடிவு எடுப்பதற்குள் ஒரு கூரை வீட்டில் பற்றி எரிந்த தீ எங்கும் பரவியது.
தீச்சுடர்கள் பக்கத்து வீடு, அடுத்த வீடு என்று விழுந்தன. இப்போது ஒரு வீடு மட்டுமல்ல, அங்கு இருந்த எல்லா வீடுகளுமே தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தன.
கூட்டம் கூடிப் பேசிக் கொண்டிருந்தவர் இதைப் பார்த்தார்கள்.
”ஐயோ! என் வீடு எரிகிறதே. அதே போல் உன் வீடும் எரிகிறது” – என்று ஒருவருக்கொருவர் பதறிக் கூச்சல் போட்டார்கள். குடிசைகளுக்கு வெளியிலிருந்த மட்குடம், பிளாஸ்டிக் குடங்களை எல்லாம் ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.
குட்டையில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது. அது கோடைக்காலம். எனவே குட்டை வற்றிப் போய் இருந்தது.
”இது என்ன கலங்கிப் போய் இருக்கிறதே தண்ணீர்” – என்றார் ஒருவன்.
”குடிக்கவா எடுக்க வந்தே – குடத்தைக் குட்டையிலே முக்கித் தண்ணீரை எடுத்துக்கிட்டு ஓடுவியா? உன் குடிசையுந்தானே எரியுது” என்றான் மற்றொருவன்.
அந்தக் குக்கிராமே அல்லோல கல்லோலப் பட்டது. எலக கூரை விடுகளிலும் தீப்பற்றி எரிந்ததால், தீயின் ஜூவாலா இப்போது உயரப்பறந்தது. ஒளி வெள்ளத்தில் தண்ணீர் குடத்தோடு ஓடி வந்து நெருப்பில் கொட்டிவிட்டுப் போவது எல்லாம் அந்தப் பெருந்தீயின் வெளிச்சத்தில் பளிரெனத் தெரிகிறது.
எல்லோரும் மும்முரமாகத் தண்ணீர் கொண்டு வந்து எரியும் தீயிற் குடம் குடமாக்க் கொட்டினார்கள். தொடர்ந்து இது நடந்து கொண்டிருந்தது. குட்டையில் நீர் குறைந்து கொண்டு இருந்தது.
இரவில் பிடித்த தீ, குடிசைவாசிகளின் முழு ஒத்துழைப்பால், தண்ணீர் கொண்டு வந்து குடம் குடமாய் கொட்டியதால் கொஞ்சம் கொஞ்சமாகத் குறைந்தது.
கிழக்கு வெளுத்தது. கீழ்வானம் சிவந்தது. காலைப் பொழுது புலர்ந்தது. முற்றிலுமாகச் சுற்றி எரிந்த தீ அணைந்து விட்டது. குட்டையிலே தண்ணீர் இப்போது ஒரு சொட்டுக் கூடக் கிடையாது.
யார் வீடு எது என்று தெரியவில்லை. எல்லாம் எரிந்து போய் இப்போது சாம்பல்கள் தான் தரையை மூடிக் கிடந்தன.
எச்சரிக்கையில்லாமல் எதேச்சையாகச் செயல்பட்டதால், கூரை வீடுகளுகம் இல்லை. குட்டையில் சொட்டுத் தண்ணீரும் இல்லை.
நீரும் நெருப்பும் சேர்ந்ததால் இப்போது நீருமில்லை, நெருப்பும் இல்லை.
இது போலத் தான் இந்திரா காங்கிரசோடு பழைய காங்கிரஸ் இணைந்தால், ஒன்றோடு ஒன்று சேர்ந்து காங்கிரசே இல்லாமற் போய் விடுமோ என்று காமராஊர் அஞ்சினார்.
பாண்டிச்சேரி இடைத்தேர்தலுக்குத் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுக் கேட்பதற்காகப் பிரதமர் இந்திராகாந்தி வந்தார்.
சென்னை வந்த அவர் காமராஜரைச் சந்தித்தார். கூடியிருந்தவர்கள் இரண்டு காங்கிரசும் ஒன்றாக இணைய வேண்டும் என்று கோஷம் போட்டார்கள்.
வழக்கம் போலக் காமராஜர்,
”ஆகட்டும் – பார்க்கலாமின்னேன்” – என்று கூறிவிட்டார்.
தன்னைப் பிரதமாராக்கிய தலைவர். தனது தந்தை பண்டித நேருவின் நம்பிக்கைக்கு உரிய தொண்டன், நண்பன் – என்றெல்லாம் எண்ணிப் பார்த்தார் இந்திரா காந்தி.
தன்னோடு பாண்டிச்சேரித் தேர்தல் பிரசாரத்துக்கு வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
இது ஆடு நனைகிறதே என்று ஓனாய் வருத்தப்பட்ட கதையா? இல்லை உண்மை எண்ணமா? இல்லை வேறு உள் நோக்கமா என்று தெரியாமல் தத்தளித்தார் காமராஜர்.
இந்திராகாந்தி விடுவதாகயில்லை. இருவரும் பாண்டிச்சேரி சென்றார்கள். ஒரே ஹெலிகாப்டரில், ஒரே மேடையில், எலியும் பூனையும் போல் என்று எண்ணியிருந்தவர்கள் முன் வந்தார்கள். பேசினார்கள். ஓட்டுக் கேட்டார்கள்.
பாண்டிச்சேரி மக்கள் இரண்டு காங்கிரசும் இணைந்தது என்றே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்கள். ஆனால் பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் சொன்னார்கள்.
இந்திராகாந்தி முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. காமராஜர் முகத்தில் கலக்கமும், கவலையுமே சூழ்ந்திருந்தன் என்று.
சிலர் இது ஒரு முன்னோட்டம். பின்னர் இரண்டு காங்கிரசும் இணையப் போகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றார்கள்.
எது எப்படியோ? இந்திராகாந்தியும், காமராஜரும், ஒன்றாக வந்ததையும், ஒன்றாக மேடையில் உட்கார்ந்து இருந்ததையும். ஒன்றாகப் பிரச்சாரம் செய்த்தையும் கண்டு எல்லோரும் இரண்டு காங்கிரசும் இணைந்து விட்டதாகவே எண்ணி விட்டார்கள்.
பழைய காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் நிஜலிங்கப்பா. இந்திரா காங்கிரஸிற்குத் தலைவர் ஜெகஜீவன்ராம். இவர்களுக்கும் கூட இரண்டு காங்கிரசும் இணைந்து விட்டது என்று கூறினால் ஆச்சர்யபட மாட்டார்களா?
இரண்டு காங்கிரசும் இணைவதற்கு முன், செயற்குழு அல்லது பொதுக்குழுவினைக் கூட்டி அனைவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து ஒவ்வொரு கட்சியிலும் எல்லோரும் முழு மனதுடன் ஒப்புதல் அளித்து, தீர்மானம் நிறைவேற்றியபின் ஒரு நல்ல நாளில் இணைப்பு விழா நடத்தப்பட வேண்டும். அப்படி ஏதும் நடந்ததா? இல்லையே.
இது காமராஜருக்குத் தெரியும். அவரை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி சென்ற அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்திக்கும் தெரியும். இது ஒரு கண் துடைப்பு வேலை. வாக்காளர்களை ஏமாற்றும் தற்காலிக இணைப்பு வேலை.
பின்னர் நடந்தது என்ன? இந்திராகாந்தி டெல்லி சென்று விட்டார். காமராஜர் சென்னைக்கு வந்துவிட்டார். ஏதோ ஒரு கனவு போல் இந்தக் காட்சி மக்கள் மத்தியிலே அரங்கேறி முடிந்து விட்டது. அவ்வளவுதான். இணைவதற்கான ஏற்பாடுகள் ஏதும் பின்னாளில் நடந்ததாக எந்தவித நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தகவல்களே கிடையாது.
தன்னைப் பிரதமராக்கிய தலைவரைக் காண வந்த இந்திராகாந்தி தான், பாண்டிச்சேரி தேர்தலில் மக்களிடம் தமது வேட்பாளருக்கு ஓட்டுக்கள் வாங்குவதற்காக இந்த நாடகத்தை நடத்திச் சென்றார்.
சென்னை திரும்பிய பெருந்தலைவர் காமராஜர், நாடு போகும் போக்கை எண்ணிக் கவலைப்பட்டார்.
காமராஜருக்குப் பின்னர், தமிழ்நாடு காங்கரஸார், ஆட்சியைக் கைப்பற்றியதே கிடையாது இன்று வரை. இது தான் சரித்திரம் காட்டும், கற்பிக்கும் பாட்ம நமக்கு.
மத்தியிலும் இந்திரா காந்திக்குப் பின்னால் இரண்டொருவர் பிரதமரானார்கள். காங்கிரஸ் அங்கேயும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மையாகும்.