தங்கமே! தண் பொதிகைச்
சாரலே! தண்ணிலவே!
சிங்கமே! என்றழைத்துச்
சீராட்டுந்தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள்
தோட்ட்கள் ஏதுமில்லை!
ஆண்டிகையல் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே!
கவியரசர் கண்ணதாசன்
காமராசர் தாலாட்டு.
மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் காமராஜர். காமராஜரின் வாழ்க்கையென்பது ஒரு சாதாரண மனிதரின் வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்ன என்பதன் விளக்கம் தந்த வாழ்க்கை என்ன தனி மனித வாழ்விலும், பொது வாழ்விலும் அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறைகள் காந்தியடிகளின் ‘சத்ய சோதனை’ போன்றதாகும். அதனால் தான் காமராஜரையும், காந்தியடிகளோடு ஒப்புமைப்படுத்தி ‘தென்னாட்டுக் காந்தி’ என்று போற்றிப் புகழுகின்றோம்.
ஜூலை 15. காமராஜரின் பிறந்தநாள். எப்போதும் போல் வருகின்ற பிறந்த நாளல்ல. இந்த பிறந்த நாள் நூற்றாண்டின் நினைவுகளைத் தரும் இனிய நாள்.
அவர் படித்த வகுப்பு ஆறு. இப்பொழுது கடக்கிறது அவருக்கு வயது நூறு. அவருடைய சாதனைச் சரித்திரம் நூறு ஆண்டுகள் அல்ல. நூறு நூறு ஆண்டுகள் இன்னும் தொடரும்.
இனிய நூற்றாண்டில் மலரும் நினைவுகளாய் சில நினைவுகள். அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் சில பக்கங்களை உங்கள் பார்வைக்கு இங்கே பந்திவைக்கிறேன்.