1954 – ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப் ஏற்ற காமராஜர், தனது திட்டங்களாலும், மக்கட் தொண்டாலும், திட்டங்களைச் செம்மையாக அமுல்படுத்தியதாலும், தமிழகத்தில் பொற்கால ஆட்சியை உண்டாக்கினார்.
1959 – ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் காமராஜர் தலைமையில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. 151 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்தார்கள். காமராஜ் அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார்.
இந்தக்கால கட்டங்களில் தான் தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருகியது. உணவுப்பொருள் பற்றாக்குறைகள் நீங்கியது. பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை வட்டக்கணக்கில் உயர்ந்தது. கல்வி கற்கும் ஆர்வமும் பெருகியது.
மிகவும் அமைதியான சூழ்நிலையில் தமிழ்நாடு எல்லாத்துறைகயிலும் வளர்ச்சியடைந்தது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் பொதுத் தேர்தல் வந்தது. 1962 – இல் நடந்த இந்தத் தேர்தலில் காமராஜர்சாத்தூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். 1957 – இல் நடந்த தேர்தலில் 151 இடங்ககைப் பெற்ற காங்கிரஸ் 1962 – இல் நடந்த தேர்தலில் 139 இடங்களையே கைப்பற்றியது.
மூன்றாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் காமராஜர் பதவி ஏற்றார். காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், காமராஜர், உழைப்பும், உற்சாகமும் குறைந்துவிடவில்லை. மனம் தளர்ந்தும் அவர் போய்விடவில்லை.
ஆனால் காங்கிரஸின் பலம் குறைந்ததற்கான காரணங்களைக் காமராஜர் ஆராயத்தொடங்கினார். மக்களிடம் ஆதரவு குறைந்ததற்கு உண்டான காரணங்களை ஆராய்ந்து கொண்டே, கடமை உணர்ச்சியுடன் தமிழக மக்களின் நல்வாழ்விற்காகப் பல திட்டங்களை வகுத்து அவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் காங்கிரஸின் பலம் குறைந்திருந்ததால், அதற்கான காரணம் தெள்ளத் தெளிவாக்க் காமராஜருக்குப் புலப்பட்டது.
தலைவர்கள், பதவிகளில் இருக்கும் போது மக்களுடன் நேரிடையாகத் தொடர்பு கொள்ளவில்லை. திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பனவற்றை யாரும் கண்டறிவதில்லை.
ஆனாலும் தமிழகத்திலும், மத்திய ஆட்சியிலும் இருந்து மக்கள் காங்கிரஸை அகற்றிவிடவில்லை. குறைகளைத் தெரிவிப்பதற்காகவே குறைந்த அளவு வெற்றியைக் காங்கிரஸுக்கு அளித்திருக்கிறார்கள். அப்படியானால் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது எப்படி?
மக்களின் குறைகள் தீர்க்கப்படாவிட்டால் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் கவிழ்ந்து விடுமோ என்று காமராஜர் கவலைப்பட்டார். காங்கிரஸ்கார்ர்களிடையே, ஒவ்வொரு மாநிலத்திலும் கோஷ்டிப்பூசல்கள். நான் பெரியவன், நீ பெரியவன் – என்ற மோதல்கள் – பதவிச் சண்டைகள்.. இவைகள் இயக்கத்தில் மலிந்து இருந்தன.
மத்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்திக்கொண்டு இருந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு, பிரதமராக இருந்து, இந்திய நாட்டை ஒரு வலுவான நாடாக மாற்றிக்கொண்டு இருந்தார்.
ஊசி முதல் விமானம் வரை இறக்குமதிகள் செய்யப்பட்டுக் கொண்டு இருந்த நாட்டில், எல்லாமே சுதேசிக் கண்ணோட்டத்தோடு இந்தியாவிலேயே உற்பத்திகள் செய்யப்பட்டன.
பெங்களூரில் விமானத் தொழிற்சாலை, ஆவடியில் டாங்க் தொழிற்சாலை, பெரம்பூரில் இரயில் பெட்டித் தொழிற்சாலை, விசாக்ப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தொழிற்சாலை, இரும்புத்தொழிற்சாலை, உருக்குத் தொழிற்சாலை, நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம், சேலத்தில் ஸ்டீல் தொழிற்சாலை. திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை. இப்படி இந்தியா வலுவடைந்து கொண்டிருந்தது. இருந்தும் காங்கிரஸ் ஆட்சி மீது, மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டு வருவது ஏன்?
காமராஜர் இளம் வயதிலேயே தன்னைத் காங்கிரஸில் இணைத்துக்கொண்டவர். தொண்டராக உள் நுழைந்து, உழைப்பால், தியாகத்தால் கொஞ்சம் கொஞ்சமாக உயர்வினை அடைந்தவர், சத்திமூர்த்தியைக் குருவாகப் பெற்றவர். குருவே, மாறுபட்டால், கட்சிக்காக அவரையே எதிர்த்தவர்.
ஒருமுறை காந்திஜியின் கருத்துக்கே எதிர்ப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதி, அவர் பத்திரிகையில் எழுதியவற்றை வாபஸ் பெறச் செய்தவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 12 ஆண்டுகாலம் பதவி வகித்து முதலமைச்சராக ஆனபோதுதான் அந்தப் பதவியை ராஜினாமா செய்தவர். விடுதலைப் போராட்ட வீரர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுப் பலமுறை சிறை சென்றவர். தன்னை முற்றிலும் மக்கள் தொண்டிலேயே ஆட்படுத்திக் கொண்டவர்.
இப்படிப் பட்ட தலைவருக்குத் தன்காலத்திலேயே, தன் கண் தன் முன்னாலாயே, கண்ணை இமைபோல் கட்டிக் காத்து வளர்ந்த காங்கிரஸ் பேரியக்கம் சரிந்து கொண்டே போவதைத் தாங்கிக் கொள்ளவா முடியும். முதலமைச்சர் பதிவியிலே இருந்தாலும், காமராஜர் அகில இந்திய அளவில் காங்கிரஸ் பேரியக்கத்தை வலுப்படுத்தவே, மக்களிடம் செல்வாக்கு உள்ள இயக்கமாக மீண்டும் மாற்றவே ஆர்வம் கொண்டார்.