பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பொழுது கல்வி நிலை எவ்வாறு இருந்தது என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.
எங்கும் கல்விக் கூடங்கள். எல்லோர்க்கும் கல்வி. இலவசக் கல்வி. இலவச மதிய உணவு என்றெல்லாமா இருந்தன? இல்லவே இல்லை. வசதியுள்ளவர்களுக்கே கல்வி கற்கும் வாய்ப்புக்கள் இருந்தன. ஏழை, எளியவர்களுக்குக் கல்வி கற்பது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.
தனியார் பள்ளிகளில் மட்டுமின்றி, அரசினர் பள்ளிகளும் அன்று கல்விகற்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. ஐந்தாம் வகுப்புவரைதான் கட்டணம் இல்லை. ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்புவரை படிக்கும் ஏழை மாணவர்கள், தாங்கள் ஏழைகள்தான் என்பதற்கான வருமான அத்தாட்சியைத் தாசில்தார்களிடமிருந்து வாங்கிக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால்தான் இலவசக்கல்வி- இல்லையேல் கட்டணம் கட்டவேண்டும்.
ஒன்பதாம் வகுப்பிலிருந்து எல்லா வகுப்புக்களுக்கும், எல்லோரும் கட்டாயமாகச் சம்பளம் கட்டியே தீரவேண்டும். பள்ளி இறுதிப் படிப்பாக இருந்தாலும் சரி, அல்லது பட்டப்படிப்பாக இருந்தாலும் சரி. எல்லாவற்றிற்கும் படிக்கப் பணம் கட்டவேண்டிய நிலைதான் தமிழ்நாட்டில் நீடித்து இருந்து வந்தது.
பள்ளிக்கூடங்களில் பற்றாக்குறை ஒரு புறம். ஒரு ஊரிலிருந்து மறுஊருக்குப் பாதயாத்திரையாகவோ, பஸ் அல்லது சைக்கிள்கள் மூலமாகவோ சென்றுதான் ஆறாம் வகுப்புக்குமேல் படிக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆரம்பப்பள்ளிகள் இருந்தன. அதுகூட இல்லாத கிராமங்களின் எண்ணிக்கைகளோ கணக்கிலடங்காதவைகளாகும்.
”ஏதோ… நாலு எழுத்து எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் – கையெழுத்துப் போட பிள்ளைகள் கற்றுக்கொண்டால் போதும்” என்றே அந்தக் காலத்துப் பெற்றோர்கள் கருதினார்கள். பிள்ளைகள் தங்கள் தொழிலுக்குத் துணையாக இருந்து வேலைகள் செய்வதையே அவர்கள் விரும்பினார்கள்.
”ஏன் ஐந்தாம் வகுப்போடு பையன் படிப்பை நிறுத்திவிட்டீர்கள்?” என்று கேட்டால்.
”அதுபோதுங்க… அதுக்குமேலே படிச்சுப் பையன் என்ன கலெக்டர் ஆகப் போகிறானா? இல்லை தாசில்தார் ஆகப் போகிறானா?” என்று பதில் கூறுவார்கள். ஆண் பிள்ளைகளுக்கே கல்வி கற்பதில் இந்தப் பரிதாப நிலை.
தபால் போக்குவரத்துக்கள் கூடக் கிராமங்களுக்குச் சரிவர இல்லாத காலமாய் இருந்தது. ஏழெட்டுக் கிராமங்களுக்கு நடுவில் உள்ள ஒரு பேரூரிலே ஒரு தபால் ஆபீஸ் இருக்கும். மூன்று, நான்கு கிராமங்களுக்கு ஒரு தபால்காரர் என்று அவர்கள் சைக்கிள்களில்தான் சென்று, மணியார்டர், மற்றும் தபால்களைப் பட்டுவாடா செய்து வருவார்கள்.
ஒரு தபால்கார்ர ஒரு கிராமத்துக்குத் தபால் மற்றும் வந்த மணியார்டரை எடுத்துக் கொண்டு சென்றார். அது ஒரு குக்கிராமம். ஏறத்தாழ எல்லோரும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்தான் ஒன்றிரண்டு பிள்ளைகள் படித்தவர்களாக இருந்தாலும், தபால்காரர் செல்லும்போது அவர்கள் பள்ளிக்கூடம் சென்றிருப்பார்கள்.
மருதாயி என்ற பெண்ணுக்குப் பட்டாளத்தில் இருந்த அவளது கணவன் ஏழுமலை 500 ரூபாய் மணியார்டர் செய்து இருந்தார். ஒரு கடிதமும் போட்டிருந்தார்.
சைக்கிளில் அந்தக் கிராமத்துக்குச் சென்ற தபால்காரர் எப்படியோ வீட்டு விலாசத்தை விசாரித்துக்கொண்டு, மருதாயி வீட்டுக்குப் போனார். வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீடுகளில் விசாரித்தார். அந்தப் பெண் வயலில் கூலி வேலைக்குப் போயிருப்பதாகவும், சாயந்திரம் தான் வருவாள் என்றும் கூறினர். தபால்காரர் மணியார்டர் வந்திருக்கும் சமாச்சாரத்தைச் சொல்லி யாராவது சென்று அவளைக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.
ஒரு பெண்மணி வயல் பக்கம் ஓடினாள். தபால்காரர் சைக்கிளை வைத்துக்கொண்டு அந்தக் குடிசை வீட்டுக்கருகே வேப்பமரத்தடியில் காத்துக் கிடந்தார்.
அவர் காத்து இருந்ததற்கும் ஒரு காரணம் இருந்தது. மணியார்டரைப் பட்டுவாடா செய்துவிட்டால், ஐந்தோ பத்தோ பணம் தருவார்கள். அவருக்கு இது நிகர வருமானம்தானே.
வயல் பக்கம் போன பெண் அந்த மருதாயியைக் கையோடு கூட்டிக் கொண்டுவந்தாள்.
”சாமி! கும்புடுறேனுங்க” – என்றாள் மருதாயி.
”ஆமா ! உன் பேருதானே மருதாயி. உனக்குப் பட்டாளத்திலே இருந்து பணம் வந்திருக்கு ” என்றார் தபால்காரர்.
”அப்படிங்களாசாமீ! எம்புட்டுப் பணம் அனுப்பியிருக்காக?” என்றாள்.
”ஐநூறு ரூபாய்” என்றார் தபால்காரர்.
”ஐயோ! அவ்வளவு பணமா அனுப்பியிருக்காக” என்று அவள் ஆச்சர்யப்பட்டாள்.
”உன்னோட புருஷன் பேரு என்னம்மா?”
”அதெல்லாம் நாங்க சொல்லறது பழக்கமில்லேங்க.”
”பழைய பயித்தியமா இருக்கிறியே! புருஷன் பேரை எல்லாம் அந்தக் காலத்திலேயும் சரி, இந்தக் காலத்திலேயும் சரி யார்மா சொல்லாமே இருக்காங்க? கற்புக்கரசி கண்ணகிகூட அந்தக் காலத்திலே பாண்டிய மன்னன் கேட்டபோது,
”ஏசாச்சிரிப்பின் இசையிடம் பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனேயாகி
என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி
நின்பார் கொலைக்கலம்பட்ட
கோவலன் மனைவி
கண்ணகியென்ப தென் பெயரே” என்று, புருஷன் பேரு மட்டுமல்ல, மாமனார் பேரையும் சேர்த்தே சொல்லியிருக்கார்” என்று சொல்லித் தான் ஒரு படிப்பாளி என்பதைக் காட்டிக் கொண்டு நின்றார் தபால்காரர்.
”அவுங்க பேர்தானே வேணும்? சொல்லுகிறேன். ஒண்ணு ரெண்டு எண்ணுகிறேன். ஆறுக்கு அப்புறம் என்னங்க?”
”ஏழு… ஏன் அதற்கென்ன?”
”முருகன் ஏறி நிற்கிற எடம் எதுங்க?”
”ஓ… அதுவா? மலைதான்.”
” அந்த ஏழோட இதைச் சேர்த்துக்கங்க.”
”அடடே… ஏழுமலை. உன் புருஷன்பேரு ஏழுமலைதான். சரிதான்போ இந்தா இதிலே கையெழுத்துப் போடு.”
இடது கை கட்டைவிரலை நீட்டினால் மருதாயி. தபால்காரர் விரலைப் பிடித்து மை ஒட்டி மணியார்டர் பாரத்தில் அழுத்தி எடுத்துவிட்டு அவள் விரலை விட்டு விட்டார். பின்னர் பணத்தை எண்ணிக் கொடுத்தார்.கூட நின்ற பெண்களிடம் கொடுத்து மருதாயி எண்ணிப் பார்க்கச் சொன்னாள். எல்லாம் நூறு ரூபாய் நோட்டுக்கள். ஐந்துதானே. எண்ணிப் பார்த்துச் சரியா இருக்கிறதென்றாள்.
”சரிம்மா! இந்தா ஒம்புருஷன் போட்டிருக்கும் தபால்” என்று கடித்த்தையும் கொடுத்தார்.
” நான் வர்றேம்மா இன்னும் மூணு ஊர்களுக்கு போகணும்.” என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பலானார் தபால்காரர்.
”கொஞ்சம் இருங்க சாமி” என்று மருதாயி தன் குடிசை வீட்டின் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனாள். கூலிப் பணம் வாங்கிப் பானையில் போட்டுவைத்திருந்தாள். பத்து ரூபாய் பணம் எடுத்து வந்து தபால்காரனிடம் கொடுத்தார்.
”ரொம்ப நன்றிம்மா” என்று சொல்லிக்கொண்டே தபால்கார்ர் தன் சைக்கிளில் பறந்தார்.
கடுதாசியைப் படிச்சுக்காட்டாமப் போயிட்டாரே என்று மருதாயித் தவித்தாள். இவளைப் போலத்தான் கிரமத்துப் பெண்கள்.
கிராமங்களில் வாழ்ந்திருந்த பெண்பிள்ளைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெண்கல்வி புறக்கணிக்கப்பட்டிருந்த காலம் அது. ” அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்று பெற்றோர்களே வாதிட்டுக் கொண்டுருந்த காலமாக அன்றிருந்தது. கல்வி கற்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்த நிலை நீடித்ததால் பெண்கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.
பணம் கட்டிப் படிக்கும் நிலை. பள்ளிக் கூடங்களின் பற்றாக்குறைகள். கல்வி என்பது ஏழை, எளியோர்களுக்கு இல்லை- என்பன எல்லாம் தமிழ்நாட்டில் எப்படி நீக்குவது? கர்ம வீரர் காமராஜர், முதலமைச்சர் காமராஜர் சிந்தித்தார். திட்டங்கள் தீட்டினார்.அமுல் படுத்தினார்.
முதல் வகுப்பில் இருந்து பள்ளி இறுதி வகுப்புவரை எல்லா மாணவர்களுக்கும் கட்டணம் இல்லை என்று அறிவித்தார். கிராமத்துச் சிறுமியர்கள் கல்வி கற்கப் பல மீட்டர்கள் தூரம் நடந்து சென்றுவர வேண்டி இருந்தது. இந்த நிலையைப் போக்கி, கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் செய்தார்.
”கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகு எலும்பு” என்றார் மாகத்மாகாந்தி. கிராமங்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேற்றம் அடையமுடியாது என்று கருதினார் பண்டித நேரு. அவர்களது பாதையில் பயணம் துவங்கிய பணிகள் புரிய, அடி எடுத்து வைத்த காமராஜர் கிராமங்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன செய்யமுடியுமோ, அவைகளை எல்லாம் தான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் செம்மையாகச் செய்தார். செழிப்படையச் வைத்தார்.
காமராஜர் அவரகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போதே, தமிழகத்தில் உள்ள எல்லாப் பட்டி தொட்டிகளுக்கும், கட்சிப் பணிகளுக்காகச் சென்றிருக்கிறார். அவரது கால்கள் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் சுற்றுப் பயணங்கள் செய்திருக்கிறார்.
எந்தக் கிராமத்துக்கு என்னென்ன தேவைப் பள்ளிக் கூடமா? சாலை வசதியா? குடிநீரா? மின்சார வசதியா? எங்கெங்கே எவையெவை தேவை என்பதெல்லாம் கண்டறிந்து வைத்திருந்தார் காமராஜர். கட்சிப் பணிக்காக அவர் எடுத்த கணிப்பு (சர்வே) ஆட்சிப் பணியில் இருக்கும்போது அவருக்குப் பெரிதும் உதவியது. துரித நடவடிக்கைகள் எடுக்க அவரைத் தூண்டியது எனலாம்.
தமழக முதலவரான பின்னர், அவர் சுற்றுப் பயணம் போனார். அப்படிப் போகும்போது அவரது கார் கிராமத்துச் சாலைகள் வழியே போகிறது.
காலை நேரம். கிராமத்துச் சிறுவர் – சிறுமிகள், ஆடு – மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்க்கச் சென்று கொண்டுத இருக்கிறார்கள். இதைக் கண்ட காமராஜர், காரை நிறுத்தச் சொன்னார். ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று கொண்டிருந்த சிறுவர்களிடம் சென்றார்.
”என்னப்பா… தம்பிகளா! பள்ளிக்கூடம் போகாமல், படிக்காமல், இந்தக் காலைநேரத்தில் ஆடு மாடு மேய்க்க போகிறீர்களே. பள்ளிக்கூடம் போகலையா?” என்றார்.
”எங்க ஊரிலே பள்ளிக்கூடம் இல்லையே” என்றார்கள்.
”பள்ளிக்கூடம் இருந்தால் படிக்கப் போவீங்களா?” என்றார் காமராஜர்.
”பள்ளிக்கூடம் படிக்கப் போனா எங்களுக்கு மத்தியானச் சோறு யார் போடுவாங்க? இப்படி ஆடு மாடு மேச்சாலாவது கூழோ, கஞ்சியோ கிடைக்குது.” என்றார்கள். பின்னர் அந்தச் சிறுவர்கள் ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.
காமராஜர் சற்று நேரம் அந்தச் சிறுவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டே நின்றார். பின்னர் வந்து காரிலே ஏறி தனது பயணத்தை தொடர்ந்தார்.
காரிலே செல்லும்போதே, அவரது சிந்தனை பலமாக இருந்தது. எதைப் பற்றி? கிராமங்கள் தோறும் கல்விக்கூடங்கள் நிறுவப்படவேண்டும் என்பது ஒன்று. அப்படிப் பள்ளிக்கூடம் வைத்தாலும் மதிய உணவுகள் மாணவ – மாணவிகளுக்கு இலவசமாகப் போடவேண்டும். என்பது மற்றொன்று.
செய்தித்தாளில் ”ஒரு பள்ளிச்சிறுமி மதிய வேளையில் மயங்கி விழுந்து விட்டாள். காரணம் பசியே ஆனது.” – என்பதனைப் படித்து இருந்தார் காமராஜர்.
வயிற்றிலே பசியைவைத்துக்கொண்டு, கல்வியிலே எப்படிப் பிள்ளைகளால் கவனம் செலுத்தமுடியும் என்று யோசித்தார் காமராஜர்.
கிராமங்கள் தோறும் ஆரம்பப் பள்ளிகளாக ஓராசிரியர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இலவச மதிய உணவுகள் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன. உடுத்தும் உடைகளால் கூட, ஏழை, பணக்காரப் பிள்ளைகள் என்ற வேறுபாடுகள் இருந்தன. இந்த நிலையைப் போக்க எல்லாப் பிள்ளைகளுக்கும் சீர் உடைகள் கட்டாயமாக்கப்பட்டன. இவைகள் எப்படி ஏற்பட்டன.