பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் தொழில் துறைகளில் என்னென்ன அரும்பெரும் சாதனைகளைச் செய்தார் என்பனவற்றை இங்கே விரிவாகக் காண்போம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காமராஜர், கட்சிக்காரர்கள், நேருஜி போன்றவர்களின் கட்டாயத்துக்கேற்ப முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தார். காமராஜர் என்றும் பதவியைத் தேடி அலைந்தது இல்லை. பதவிகள் தான் அவரைத்தேடி வந்தன. அப்படி வந்த பதவிகளையும் அவர் வேண்டாம் என்றே தட்டிக்கழித்தார். முதலமைச்சர் பதிவியைக்கூட அவர் தட்டிக் கழிக்கத்தான் செய்தார். ஆனால் தலைவர்களின் நிர்பந்தத்தினால் அவர் ஏற்றுக்கொண்டார்.
ஏற்றுக் கொள்வதற்கு முன் அவர் கேட்டுக் கொண்டவை என்ன?
”கட்சிக்காரர்களோ, நண்பர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ எனது ஆட்சியிலே தலையிடக்கூடாது. பர்மிட், கோட்டா, வேலை வாய்ப்பு, கான்ட்ராக்ட் என்று எதற்கும் என்னிடம் வரக்கூடாது. இந்த நிபந்தனைக் கெல்லாம் நீங்கள் உடன்பட்டால் நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன். நான் அரசுக்கும் மக்களுக்குமே உழைப்பேன்” என்றார் காமராஜர்.
கூடியிருந்தவர்கள், காமராஜரின் இந்தப் பேச்சைக் கேட்டு அசந்து போனார்கள். காமராஜரின் நேர்மைக்கும், நியாயத்திற்கும், எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம்.
காமராஜர், விருதுப்பட்டியில் வசித்துவந்த தனது தாயாருக்கு மாதா மாதம் செலவுகளுக்காக ரூபாய் 120 அனுப்பிக் கொண்டிருந்தார். அவர் முதலமைச்சர் ஆன பின்பு சிவகாமி அம்மாள் காமராஜருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர்,
‘
”நீ முதலமைச்சராக ஆன பின்பு , என்னை வந்து ஏகப்பட்ட பேர்கள் பார்க்கிறார்கள். அவர்களுக்கு டீ, காபி, சோடா வாங்கிக் கொடுக்கக்கூட என்னால் முடியவில்லை. எனவே எனக்கு அனுப்பும் மாதாந்திரப் பணம் 120 ரூபாயை, 150 ரூபாயாக் கூட்டி அனுப்பி வைக்கவும்” என்று எழுதியிருந்தார்கள்.
காமராஜர் இந்தக் கடிதத்தைப் படித்த பின்னரும், தாயாருக்கு மாதா மாதம் வழக்கம் போல் அனுப்பும் 120 ரூபாயைத்தான் அனுப்பி வந்தார்.
ஏன் கூடப் பணம் அனுப்பவில்லை என்று கேட்ட நண்பர்களிடம் ”அப்படி நான் தாயாருக்கு அதிகமாகப் பணம் அனுப்பினால் அவுங்க வீட்டிலிருக்காமல் வெளியூருக்கும் போய்விடுவார்கள். வயதான காலத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே” என்றார்.
மற்றோர் முறை சிவகாமி அம்மையார் ஒரு நூறு ரூபாய் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அப்போது காமராஜரும், ஆர்.வி. சாமிநாதனும், சென்னை, தி.நகர், திருமலைப் பிள்ளை வீட்டில் நன்கொடையாக வந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
காமராஜிரின் உதவியாளர் வைரவன் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறினார். உடனே ஆர்.வி. சுவாமி நாதன் ரூபாய் நூறு தானே என்று தான் எண்ணிக்கொண்டிருந்த பணத்திலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.
காமராஜர் அந்த ரூபாய் நோட்டுகளை அவரிடமிருந்து பிடுங்கி நன்கொடைப் பணத்தோடு சேர்த்துவிட்டார்.
ஒரு முறை காமராஜரைப் பார்த்து நண்பர் கேட்டார்.
”நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.
”தாயாருக்கு அனுப்பி வைக்கிறேன். எனது செலவுகள் அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிப் போகிறேன். அதற்கெல்லாம் சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் அரசாங்கச் செலவு. கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருவேன்” என்று கூறினாராம். கட்சியோடு அரசையும், அரசோடு கட்சியையும் கலக்காதவர் காமராஜர்.
காமராஜரின் தங்கை மகன் ஒரு வேலை வாய்ப்புக்காகத் தனது தாய் மாமனான முதலமைச்சர் காமராஜரிடம் வந்தார். தான் ஒரு வேலைக்கு மனுப்போட்டிருப்பதாகவும், சிபாரிசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.
அதற்குக் காமராஜர்,
”நான் சிபாரிசு செய்யமாட்டேன். நீ அந்த வேலைக்கு தகுதியானவனாக இருந்தால், அவர்கள் தானாகவே உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். தப்பித் தவறி நீ என் பெயரை உன் வேலைக்காகச் சொல்லக்கூடாது. போய் வா” என்று அனுப்பிவிட்டார்.
பெற்ற தாயை விடக் காமராஜர் இந்தியத் தாயையே தன் தாயாக்க் கருதினார். தன் உற்றார் உறவினர்களைவிட இந்திய நாட்டு மக்களையே தனது உற்றார், உறவினர்களாக நினைத்தார்.
காமராஜருக்குத் திருமணம் செய்து வைக்கத் தாயார் சிவகாமி அம்மாள் எத்தனையோ முறை முயற்சித்தும் அவர் இந்தியா சுதந்திரம் அடையட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
சுதந்திரத்துக்குப் பின்னும் காமராஜர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. கடைசிவரை பிரம்மச்சாரியாகவே இருந்துவிட்டார். திருமணம், மனைவி, மக்கள், குடும்பம் என்று ஆகிவிட்டால், தன்னால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தொண்டு செய்ய முடியாது என்று அவர் நினைத்து விட்டதே இந்தப் பிரம்மச்சாரி வாழ்க்கை தொடர்ந்ததற்கும் காரணமாகும்.
தனது அமைச்சரவையில் தொழில் மந்திரியாக இருந்த ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பூர்ண ஒத்துழைப்போடு, முதலமைச்சர் காமராஜர் தனது திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றலானார்.
அரசின் தொழிற்பேட்டைகள், அங்கே தனியார்கள் தொழில் தொடங்க வசதி வாய்ப்புகள், செய்து கொடுத்தல், தொழிற்சாலைகளுக்கு இடவசதி, மின்சார வசதி மற்றும் ஏனைய சலுகைகளும் காமராஜர் செய்து கொடுத்தார். இதனால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகியது. புதிது புதிதாக அரசின் சொந்தத் தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டன.
குமரி மாவட்டத்தில் சிற்றாறில் ஒரு அணை கட்டினால் அதனால் பொது மக்களுக்கும் , விவசாயத்துக்கும் உபயோகமாக இருக்கும் என்று முதலமைச்சர் காமராஜர் கருதினார். அதற்காக அவர் திட்டம் போட்டார். ஆனால் சிலர், ”ஆயிரக்கணக்கான ஏக்கர் ரப்பர் தோட்டங்கள் அழிந்துவிடும். திட்டத்தைக் கைவிட்டு விடுங்கள்” – என்று சொன்னார்கள்.
”அரிசிக்குப் பதிலாக ரப்பரைத் தின்று உயிர் வாழ முடியுமா?” காமராஜர் கேட்டார். கேட்டவர்கள் மௌனமானார்கள். சிற்றாற்றில் அணை கட்டப்பட்டது. இதுபோல வைகை ஆற்றில் அணை கட்டப்பட்டது.
இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய நாட்டில் வாழும் பெரும்பகுதி மக்கள் விவசாயத் தொழிலிலேயே ஈடுபட்டு இருக்கிறார்கள். விவசாயத் தொழில் இருந்தால் தான் பஞ்சம் , பசி, வறுமை தீரும். அதனால் காமராஜர் விவசாய வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளித்தார்.
கிராமங்கள் தோறும் மின்சார இணைப்புக்கள் வழங்கச் செய்தார். விவசாயத் தொழில் மேம்பாட்டையப் பல அணைக்கட்டுக்களைக் கட்டினார்.
கிராமந்தோறும் மின்சாரம் வழங்கிய பெருமையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை இடம் வகித்தது. நில உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். கிராமங்களை நகரங்களில் இணைக்கச் சாலைகளாகப் போட்டுக் கொடுத்தார். பல தொழிற்சாலைகள் ஏற்பட வழி வகை செய்தார்.காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் தொழில்வளம் பெருகியது. நீர்வளம், நிலவளம், மின்சார வளம் என எல்லா வளமும் பெற்று, நாடும் நலமடைந்தது. மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தார்கள்.
மூன்று முறை காமராஜர் முதல் அமைச்சராக இருந்தார். மாநிலத்தில் மட்டுமின்றி மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியே நடந்து கொண்டு இருந்தது. பண்டித ஜவஹர் லால் நேருவே நிரந்திரப் பிரதமராக இருந்து கொண்டு இருந்தார்.
தமிழக முதல்வர் காமராஜரையும், அவரது தொண்டு, தியாகம், உழைப்பு, கட்சிப்பணி யாவையும் அவர் கண்டு வந்து இருக்கிறார். புதிய இந்தியாவை உருவாக்க ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு, அத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கித் தர மத்திய அரசிடம் பரிந்துரைத்து தமிழகத்திற்குப் பெற்றுக் கொண்டார் காமராஜர்.
திருச்சியில் மத்திய அரசின் பெல் (BELL) நிறுவனம் காமராஜர் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. இந்தூஸ் தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, டார்ஜிலிங்கிற்குப் போக இருந்தது. அது ஊட்டியில் தொடங்க ஏற்பாடு செய்ததே பெருந்தலைவர் காமராஜர்தான்.
தமிழக அரசின் தொழில்கள் தனியார்கள் தொடங்கிய பல்வேறு தொழில்கள், இவைகளோடு மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்பட்ட பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை திருச்சி நவில்பட்டு துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி டாங்க் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரித் தொழிற்கூடம், சேலம் ஸ்டீல் தொழிற்சாலை – இப்படித் தமிழகத்தில் ஏராளமான தொழில்கள் தொடங்கப்பட்டு, மக்களுக்கு வேலை வாய்ப்புக்களும் மக்கள் வாழ்வில் சிறிது பொருளாதார உயர்வும் ஏற்படலாயிற்று.
காமராஜர் 1948 ஆம் ஆண்டில் சென்னை, தியாகராய நகர், திருமலைப்பிள்ளை வீதியுள்ள எட்டாம் எண் வீட்டில் குடியேறினார்.1975 ஆம் ஆண்டு, அக்டோபர், 2 ம் தேதி, அவர் இயற்கை எய்திய காலம் வரை அந்த வீட்டிலேயே காமராஜர் வாழ்ந்து வந்தார். காமராஜர் 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து இருக்கிறார். 9 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தியிருக்கிறார்.
பின்னர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இரண்டரை ஆண்டுகாலம் இருந்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் இருக்கிறார்.
என்றாலும், திருமலைப்பிள்ளை வீதியுள்ள வாடகைவீட்டில்தான் காமராஜர் வாழ்ந்து இருக்கிறார். அவர் முதலமைச்சராக ஆனபோது, அரசு மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். ஆனால் அவர் அங்கே குடிபோக மறுத்துவிட்டார்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்து தொண்டராக இருந்த காலந்தொட்டுக் கடைசிக் காலம் வரை காமராஜர், கதர் நான்கு முழவேட்டி, அரைக்கை சட்டை- ஒரு துண்டு, இரண்டு தோல் செருப்புக்கள் இதுதான் அவரது சொத்துக்கள்.
இந்த எளிய கதர் உடையை உடுத்திக் கொண்டே காமராஜர், சோவியத் நாடு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணங்கள் செய்து விட்டுத் தமிழகம் திரும்பினார்.
அவர் அகில இந்தியாவிலும், எல்லா இடங்களுக்கும் சென்று, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகப் பிரச்சாரம் செய்து இருக்கிறார். எங்கும் அவர் காமராஜரை வடக்கே உள்ளவர்கள் ”காலாகாந்தி கருப்புக் காந்தி” என்றே கூறி மதித்துப் போற்றி வந்தார்கள்.
கிராமங்கள் நிறைந்த தமிழ்நாட்டில், விவசாயமே முக்கியத் தொழில். விவசாயம் விருத்தி அடைந்தால் தான், உணவுப் பொருட்கள் உற்பத்தி பெருகும். அப்படி ஆனால்தான் பஞ்சம், பசி மறையும். சும்மா கிடக்கும் நிலங்களை விவசாய நிலமாக்க வேண்டும். அதற்குத் தண்ணீர் வேண்டும். கிராமங்கள் தோறும் மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று சொல்லியாகிவிட்டது. சொன்னபடி செய்யவேண்டாமா?
தண்ணீர் தட்டுப்பாட்டையும், மின் தட்டுப்பாட்டையும் எப்படித் தீர்த்து வைப்பது? வழி வகை கண்டார். திட்டங்கள் தீட்டினார். செயலிற் காட்டினார் காமராஜர்.
அப்போதைய அரசின் வருமானமோ ரூபாய் 45 கோடி மட்டும். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தொகை மட்டும் ரூபாய் 95 கோடி.
பற்பல கோடி ரூபாய்கள் செலவு செய்து மின் திட்டங்களைக் காமராஜர் தொடங்கினார். அவைகள் இதோ;-
1. 26 கோடி ரூபாயில் குடிநீர்மின் திட்டம்.
2. 10 கோடி ரூபாயில் பெரியாறு மின்திட்டம்.
3. 8 கோடி ரூபாயில் கும்பார் – அமராவதி மின் திட்டம்.
4. 12 கோடி ரூபாய் செலவில், 75,000 கிலோ வாட் மின்சார்ம் உபரியாக்க் கிடைக்க வழி செய்த மேட்டூர் கீழ்நிலை நீர் செல்வழித் திட்டம்.
பாபநாசத்திலும், பைக்காராவிலும் மேலும் இரு சிறு மின்திட்டங்களைச் செயலற்படுத்தி 7500 கிலோ வாட் மின்சாரம், மோயார் திட்டத்திற்காகச்செலவு சில கோடி ரூபாய்கள்.
இவை அனைத்தும் காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில், திட்டம் போட்டுச் செய்த்தினால் தான் மின்சார உற்பத்தி அதிகமாயிற்று. சிறு விவசாயிகளுக்கும் பம்ப்செட் மூலம் தண்ணீர் இறைக்க இலவச மின்சாரம் கிடைத்தது.
1958-1959 முடிய தமிழ்நாட்டில் மின்சார இணைப்பில் மொத்தம் ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் 95 கோடியாகும். கிராமப்புற பகுதிகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்லும் திட்டத்தில் காமராஜர் ஆட்சி இந்தியாவிலேயே முதலிடம் வகித்தது. 13,300 கிராமங்கள் மின்சார வசதிகள் பெற்றன.
சென்னை மின்சார நிலையம் விஸ்தரிக்கப்பட்டது. அதற்காக செலவு 271 கோடி ரூபாயில். இதனால் ஒரு லட்சம் கிலோ வாட் மின்சக்தி உற்பத்தியானது.
இவ்வாறு காமராஜர் மின் உற்பத்தியைப் பெருக்கினார்.
விவசாயமும், உரம் உற்பத்தியும் பெருக, காமராஜர் பற்பல அணைகளைக் கட்டினார். கரிகாலன் கட்டியதுதான் கல்லணை என்றும், நாங்கள் பிற்காலத்தில் கட்டியதுதான் மேட்டூர் அணை என்றும் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தோம். இதோ கர்மவீர்ர் காமராஜர் கட்டிய அணைகளையும் பாரும் இந்த அணைக்கட்டுகளால் அதிகமாக எத்தனை ஏக்கர்களில் விவசாயம் நடந்தன என்பதையும் சற்று எண்ணிப்பாருங்கள். காமராஜரின் சாதனைகள் புரியும்.
காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் சிறிய மற்றும் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் திட்டமிட்டு உருவாக்கினார். இவைகளால் ஆயிரக்கண்க்கான ஏக்கர் நிலங்கள் தண்ணீர் வசதி பெற்று விவசாய நிலங்களாக மாறின.
கட்டிய அணைக்கட்டுக்களின் பட்டியல் பாரீர்.
1. கீழ்பவானி
2. மணிமுத்தாறு
3. காவிரி டெல்டா
4. ஆரணியாறு
5. வைகை நீர்த்தேக்கம்
6. அமராவதி (அணை)
7. சாத்தனூர் (டாம்)
8. கிருஷ்ணகிரி
9. புள்ளம்பாடி
10. வீடூர் அணைத்தேக்கம்
11. பரம்பிக்குளம்
12. நெய்யாறு – போன்றவைகளாகும்.
இவற்றில் கீழ்பவானி திட்டத்துக்கு ரூபாய் 10 கோடி செலவிடபட்டது. 27,000 ஏக்கரிலே புதிதாக விவசாயம் நடந்தது.
மணிமுத்தாறு அணைக்கட்டினால் 20,000 ஏக்கர் நிலங்கள் பயன் அடைந்தன. சேலம் மேட்டூர் கால்வாய் மூலம் 45,000 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதிகள் பெற்றன. பரம்பிக்குளம், ஆரணியாறு திட்டத்துக்கு ரூபாய் முப்பது கோடி ஒதுக்கப்பட்டது.
விவசாய உற்பத்தி பெருக விவசாயிகளுக்குக் கிணறுகள் வெட்ட, ஆயில் எஞ்சின்கள் வாங்க, எலெக்ட்ரிக் பம்பு செட்டுகள் போட அரசாங்கம் தவணை முறையில் கடன்கள் வழங்கியது. இலவச மின்சாரமும் கொடுத்தது.
உபரியாக ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் விளை நிலங்களாக்கப்பட்டன. உணவுப் பொருட்களின் உற்பத்திகள் அதிகரித்தன. விவசாயம் செய்யத் தண்ணீர் வேண்டுமே. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து பல்வேறு சிறிய, பெரிய மின்சார உற்பத்தி நிலையங்கள் உண்டாக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் தொழில்கள் முன்னேறக் காமராசர் செய்த சாதனைகள் என்னென்ன? இதோ நீண்டதொரு பட்டியல். இதில் மாநில மற்றும் மத்தியத் தொழிற்சாலைகளும் அடங்கும்.
1. 159 நூல் நூற்பு ஆலைகள்
2. 30 லட்சம் நூற்புக் கதர்கள்
3. 8000 துணி நூற்புப் பாவுகள்
4. கிண்டியில் மாபெரும் தொழிற்பேட்டை
5. சிமெண்ட் ஆலைகள்
6. உலைக்கூட உருளைச் செங்கல் ஆலைகள்
7. ரப்பர் தொழிற்சாலைகள்
8. காகித உற்பத்தி ஆலைகள்
9. கார் உற்பத்தித் தொழிற்சாலைகள்
10. கார்களின் உதிரிபாக உற்பத்தி அகங்கள்
11. சைக்கிள் தொழிற்சாலை மற்றும் தானியங்கி ஈருளிகள்
12. பாதை கனமாக்கும் என்ஞ்சின்கள்
13. தட்டச்சுப் பொறிகள்
14. களைக்குப் பொறிகள்
15. காஸ்டிக் சோடா – கந்தக அமிலம்
16. நெய்வேலி உரத்தொழிற்சாலை (உற்பத்தி 70000 டன்கள்)
17. டிரான்ஸ்பார்மர்கள்
18. ஸ்விட்ச் கியர்கள்
19. எலெக்ட்ரிக் கேபிள்கள்
20. மீட்டர் கருவிகள்
21. மின்தடைக்கருவிகள்
22. வானொலிப் பெட்டிகள்
23. சுழல்மின் விசிறிகள்
24. அலுமினிய உற்பத்தி உலைகள்
25. நெய்வேலி நிலக்கரிச்சுரங்கம்
26. ஒளிப் படச்சுருள்கள்
27. மருத்துவ அறுவைச்சிகிச்சைக் கருவிகள்
28. டெலிபிரிண்டர்கள்
29. ஐ.சி.எப். தொடர்வண்டிப் பெட்டிகள்
30. பாரவுந்து வாகனங்கள்
31. பெல் உயரழுத்த கொதிகலன்கள் (BHEL)
32. சிறு போர்முனைக் கருவிகள் (துப்பாக்கித் தொழிற்சாலை)
33. மாக்னசைட்
34. சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்
35. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை.
இவ்வாறு எண்ணிலடங்காத தொழிற்சாலைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டன. தொழில் வளம் பெருகிற்று. வேலையல்லாத திண்டாட்டங்கள் சற்று விலகிற்று.
தனியார் முதலீடுகள் செய்து தமிழகத்தில் தொழில்கள் தொடங்கவும் காமராஜர் ஆட்சியில், தொழிற்பேட்டைகளில் வாடகைக்குக் கூடங்கள் வழங்கப்பட்டன. நகரின் எல்லைகளில், தொழிற்சாலைகளுக்கு, உரிய நிலங்களும், மின்சார வசதி, தண்ணீர் வசதிகளும் செய்து தரப்பட்டன.
காமராஜர் செய்த கல்விச் சாதனைகளைக் கண்டு இந்தியாவிலே, ஏன் உலக நாடுகளே வியந்து பாராட்டின. எனவே அவரைத் தமிழ்நாட்டில் காமராஜரது ஆட்சிக் காலத்தில் கல்வி முன்னேறியது.
அடுத்துத் தொழில்களின் முன்னேற்றத்தைப் பார்த்தோம். அத்துடனே, விவசாயமும் ஒரு தொழில்தானே, விவசாய முன்னேற்றத்திற்குக் காமராஜர் செய்த சாதனைகள் என்னென்ன என்று கண்டோம். விவசாயத்திற்குத் தண்ணீரும் வேண்டும். மின்சாரமும் வேண்டும். தண்ணீருக்காக அணைகளைக் கட்டினார்.
மின்சாரத்திற்காக எத்தனையோ சிறிய, பெரிய மின் உற்பத்தி நிலையங்களை உண்டாக்கினார். விவசாயம் பெருககிற்று. மின்சாரம் கிராமங்களுக்கும் சென்றடைந்தது.
மூன்றாவதாக்க் காமராஜர் செய்த அரசியல் சாதனைகளைப் பார்த்தோம். அவர் செய்த அரசியல் முதல் சாதனையே கே. பிளான் (காமராஜர் திட்டம்) ஆகும். அது அவருக்கல்ல மற்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சிதரும் திட்டமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து காமராஜர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லி சென்றார்.
அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக ஆக்கப்பட்டார். சுமார் இரண்டரை ஆண்டுகாலம் அவர் அப்பதவியை வகித்தார். இந்தியக் காங்கிரஸிலேயே பலரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளானார். டெல்லியில் இருந்த வீடு தீயோர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
இந்திய அரசியலில் ‘காமராஜர் ஒரு கிங்மேக்கராக விளங்கினார். பிரதம மந்திரிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தினார்.
”நேருவுக்குப்பின் யார்?” என்றபோது, லால்பகதூர் சாஸ்திரியை முன் நிறுத்தினார். ”சாஸ்திரிக்கு பின் யார்?” என்ற போது, இந்திராகாந்தியை முன்னிறுத்தினார். ஆட்சியில் அமர்த்தினார். இவையாவும் காமராஜர் செய்த அரசியல் சாதனைகளேயாகும்.
காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து தான் பழைய காங்கிரஸில் இருந்தபோது, பாண்டிச்சேரி பொதுத் தேர்தலிலே, எதிர்முகாமின் தலைவி ஆகியிருந்த இந்திராகாந்தியோடு இணைந்து தேர்தல் பிரச்சாரத்துக்குப் போனார். காரைக்கால் – பாண்டிச்சேரிப் பொதுக்கூட்டங்களில் இந்திராவோடு சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இது அரசியலிலே நிரந்தரமான நண்பனும் இல்லை. நிரந்தரமான பகைவனும் இல்லை என்பதையே காட்டின ”பகைவனுக்கருள்வாய்” என்ற பாரதி பாட்டிற்கு இணங்கிப் பணியாற்றினார். காமராஜர்.