காமராஜர் பண்டித நேருவுடனும், மற்ற தலைவர்ளுடனும் காங்கிரசைப் பலப்படுத்தக் கலந்து ஆலோசித்தார். தானே ஒரு திட்டத்தை உருவாக்கினார். கடைசியாக அந்தத் திட்டத்தை அவர் வெளியிட்டார். மூத்த தலைவர்கள் பதவியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபடவேண்டும். இந்தியா முழுதும் காங்கிரஸ் இயக்கத்தை வலிமை உடையதாக ஆக்க வேண்டும் என்பதே காமராஜரின் திட்டம். இதைக் கே.பிளான் (காமராஜர் திட்டம்) என்றார்கள்.

காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பிரதமர் நேருஜியும், மற்றத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். முன் உதாரணமாக முதலமைச்சராக இருந்த காமராஜரே பதவியிலிருந்து விலகினார். தனது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பெரியவர். கே. பக்தவத்சலத்தைத் தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கினார்.

இந்தியாவெங்கும் காமராஜர் திட்டம் காரணமாகப் பல மூத்த தலைவர்கள் பதவியை விட்டு விலகிக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார்கள். பாரதப் பிரதமர் பண்டித நேருவே, தானும் காமராஜ் திட்டப்படி பதவி விலகி கட்சிப் பணியாற்ற முன் வந்து தனது விருப்பத்தைத் தெரிவித்தார். நேருஜியை விட்டால் இந்தியப் பிரதமராக இருந்து நல்லாட்சி புரிய வேறு தலைவர் இல்லை என்பது எல்லாத் தலைவர்களும் கூறி, நேருவைப் பிரதமராக நீடிக்கச் செய்தார்கள்.

1963 – இல் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அதில் காமராஜரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். ஏற்கனவே காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராகவும், பின்னர் அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியை ஏற்கும் வரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரா இருந்திருக்கிறார். தொடர்ந்து அவர் 12 ஆண்டு காலம் தலைவராக இருந்தார்.

அகிள இந்திய அளவில் எல்லாத் தலைவர்களுடனும் காமராஜர் நட்பும், தொடர்பும் கொண்டவர். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இப்போது அவர் பொறுப்பேற்று உயர்ந்தார். தலைவர் காமராஜர், பெருந்தலைவர் காமராஜர் ஆனார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காமராஜர் ஆட்சி பொற்காளமாகத் திகழ்ந்தது. அவருக்குப் பின் அந்தப் பொற்காலம் மறுபடியும் ஏற்படவேயில்லை.

அடுத்து நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக ஆனது. இது அரசியலில் சகஜம்தான். ஆனாலும், மத்தியிலே காங்கிரஸ்தான் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது. பலம் சற்று குறைந்திருந்தாலும் பாரதப் பிரதமர், பண்டித ஜவஹர்லாலை கீழே இறக்க இந்திய மக்கள் விரும்பவில்லை.
அகில இந்தியத் தலைவரான பின் காமராஜர் தனது இருப்பிடத்தை புதுடில்லிக்கு மாற்றிக்கொண்டார். அவருக்கு ஒரு வீடு ஒதுக்கித் தந்திருந்தார்கள். ஆனாலும் காமராஜர், தொடர்ந்து குடியிருந்து வந்த சென்னை, தி.நகர், திருமலைப்பிள்ளை வீட்டைக் காலி செய்யவில்லை.

டெல்லியில் இருந்து கொண்டு காமராஜர், அகில இந்திய அளவில், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், அவ்வப்போது எழும் பிரச்சினைகளைக் கவனித்துக் களைந்து எறியவும், இந்தியா முழுவதும் பயணம் செய்தார். பகலிரவு என்று பாராமல் அவர் பாடுபட்டு வந்தார்.

ஆட்சியில் இருந்து கொண்டு பண்டிதநேரு அவர்கள் இந்திய தேசத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துகச்சென்று கொண்டு இருந்தார். நாடு தான் முக்கியம். நாட்டு மக்களின் நலன்களே பிரதானம் என்ற அடிப்படையில் அவர் ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வந்தார். நேருஜி அவர்கள் நாட்டுப் பணியிலேயே தனது இறுதிக்காலம் வரை அக்கறை கொண்டு அயராது உழைத்தார்.

சுதந்திரம் அடைந்த பின்னர் சுமார் பதினேழு ஆண்டுகாலம் அவர் பாரதப் பிரதமராக இருந்து, தன்னிகரற்ற தலைவராக விளங்கினார். வயது முதிர்ந்த காரணத்தாலும், கடின உழைப்பாலும் அவர் அடிக்கடி களைப்படைந்தார். சில சமயங்களில் நோய்வாய்ப்பட்டார்.

இமயமலைக்கு மேரு போல், இந்திய நாட்டுக்கு நேரு விளங்கினார். ஒரு காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றார். உடல்நலம் பாதிக்கப்பட்டது திரும்பிவிட்டார் என்றாலும் நேருஜி தனது அன்றாட அலுவல்களை எப்போதும் போலக் கவனித்தார். வழக்கம் போல இரவு ஒரு மணி வரை கண் விழித்திருந்து வந்திருந்த கடிதங்களுக்கு எல்லாம் பதில் போடுவார்.

1964 – ஆம் ஆண்டு, மே மாதம், 27 ஆம் நாள் பண்டித ஜவஹர்லால் நேரு அமரரானார். இந்திய நாடே துயரக் கடலில் ஆழ்ந்தது. உலகமே சோகத்தில் மூழ்கியது. உலகத் தலைவர்கள் எல்லாம் ஒரு சேர வருந்தினார்கள். நேருஜியுடன், கூடவே இருந்து வந்த அவரது புதல்வி இந்திரா காந்தியோ அழுது புலம்பிக் கண்ணீர் வடித்தார்.

காமரஜரும் கதிகலங்கிப் போனார். காமராஜர்மீது நேருஜி மதிப்பும், மரியாதையும், பேரன்பும், கொண்டிருந்தார். அதேபோலக் காமராஜரும், பண்டித நேருவிடம் ஒப்பிலா மரியாதையும், உயர்வான கருத்தும் கொண்டிருந்தார்.

உலகத்தில உள்ள எந்த நாடும் பண்டித நேருவைத் தெரிந்து வைத்திருந்தது. உலகத் தலைவர்கள் நேருஜியைப் பெரிதும் மதித்தார்கள். மரியாதை செலுத்தினார்கள். அவர் ஆசிய ஜோதி மட்டுமல்ல, அகில உலகத்தின் சமாதானத் தூதுவராயிருந்தார்.

நேருஜி எதிர்பாராத விதமாக, அகால மரணம் அடைந்திருந்ததால் அடுத்து என்ன செய்வது? யாரைப் பிரதமராக்குவது என்ற கேள்வி எங்கும் எழுந்தது. குறிப்பாக அகல இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த, பெருந்தலைவர் காமராஜுக்கே இதற்கான முடிவினை எடுக்கும் உரிமையும் இருந்தது.

இந்திய அரசியல் சட்ட விதிகளின்படி பிரதமர் இடம் காலியாக இருக்க்க்கூடாது. அதனால் தற்கலிகப் பிரதமராக அதுவரை பண்டித நேருவின் அமைச்சரவையில், மூத்த அமைச்சராகப் பணிபுரிந்து வந்த குல்ஜாரிலால் ந்ந்தா அவர்களைத் தற்காலிகப் பிரதமராக ஆக்கினார்கள்.

பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களைக் கலந்தாலோசித்து, அவர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு ஒரு தலைவரைத் தேர்ந்து எடுக்க வேண்டும். அந்தத் தலைவரே பிரதமராகப் பொறுப்பு ஏற்பார்.

இந்தக் காரியங்களைச் செய்ய வேண்டியவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரே ஆவார். இப்போது அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க் காமராஜர் இருப்பதால், அவருக்கே நேருஜியின் மறைவுக்குப் பிறகு ஒரு நிரந்தரப் பிரதமரைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு பெருந்தலைவர் காமராஜருக்கு ஏற்பட்டது.

நேருவுக்கு பின்னர் யார் என்ற பிரச்சினை அவர் வாழ்ந்த காலத்திலேயே எழுந்தது. அப்போது எல்லாம் பண்டித நேருவிடம் கேட்டதற்கு அவர் சொன்னார்.

”இது ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக முறையிலே பிரதமர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும்.” என்று பதில் கூறினார் நேருஜி. இந்தியப் பிரதமர் பதவி, அந்தப் பதவி வகிப்பவரின் பொறுப்பு மகத்தானது. உலகிலுள்ள எல்லா நாடுகளும், ஏற்றுப் போற்றப்படக்கூடியவராக புகழப் படக்கூடியவராக அவர் இருக்க வேண்டும்.

போட்டியின்றித் தேர்ந்து எடுத்தால்தான் சிறப்பாக இருக்கும். ஆனால் போட்டி இப்போது இல்லாமல் இருக்காது. பதவி ஆசை உள்ளவர்கள் கட்டாயம் போட்டி போடத் தயாராக இருப்பார்கள். இவர்களை எல்லாம் சந்தித்து கலந்து பேசி, சமாதானப்படுத்தி, போட்டி போடாமல் இருக்கச் செய்து, ஏகமனதாக ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொற்ப்பு பெருந்தலைவர் காமராஜருக்கு இருந்தது.

ஒரு சிலர் தற்காலிகமாகப் பிரதமராக இருக்கும் குஜ்ஜாரிலால் ந்ந்தாவே தொடரந்து இருக்கலாம் என்றார்கள். வேறு சிலர் மொரார்ஜிதேசாயைப் பிரதமாராக்க ஆசைப்பட்டனர்.

நாடு இருக்கும் நிலைமையில், நாட்டைக் கட்டிக் காத்து, அதைப் பண்டிதஜவஹர்கலால் நேருவைப்போல முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லத் தகுந்த நபர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க காமராஜர் பெரிதும் விரும்பினார். பல ஆலோசனைக்குப் பின்னர் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.

பண்டித நேருவின் அமைச்சரவையில் இரயில்வே அமைச்சராக இருந்து, அரியலூர் இரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்தவர் லால்பகதூர் சாஸ்திரி. பின்னர் பண்டித நேருவின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மீண்டும் அமைச்சராகப் பதவி ஏற்றார்.

பெருந்தலைவர் காமராஜரின் பிளான்படி லால்பகதூர் சாஸ்திரி தனது அமைச்சர் பதவியை உதறித் தள்ளினார். கட்சிப் பணிக்காக வந்தார். கடைசியாக லால்பகதூர் சாஸ்திரி, பண்டித நேருவுக்கு வலக்கரம் போல அவரது அமைச்சரவையில், இலாக்கா இல்லாத மந்திரியாக இருந்தார்.

பழம்பெரும் தியாகியும், எளிமையான வாழ்க்கை மேற்கொண்டவருமான லால்பகதூர் சாஸ்திரியை பிரதமர் பதவிக்குக் காமராஜர் தேர்ந்து எடுக்கச் செய்தார்.

காமராஜரின் இந்தச் செயலை அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஆதரித்தனர். லால்பகதூர் சாஸ்திரியே தற்போது நாடு இருக்கும் நிலையில் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்பதை ஒப்புக்கொண்டு பெருந்தலைவர் காமராஜரைப் பாராட்டினார்கள்.

இந்தியாவின் இரண்டாவது பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி பதவி ஏற்றவுடன், பாகிஸ்தான் இந்தியா மீது படை எடுத்தது. நாட்டிலே உணவு தானியப் பற்றாக்குறை இருந்தது. போதாக்குறைக்கு இப்போது போரும் மூண்டுவிட்டது. இவை எல்லாம் லால்பகதூர் சாஸ்திரியின் மனதைக் கலக்கியது. பகைவர்களை எதிர்த்துப் போரிடவும் வேண்டும். அதேசமயம் நாட்டில் பற்றாக்குறையான் உணவு தானிய உற்பத்தியையும் பெருக்கியாக வேண்டும்.

இந்த இரண்டையும் சேர்த்து லால்பகதூர் சாஸ்திரி ஒரு புதிய கோஷத்தை உருவாக்கினார். அக் கோஷமே, ”ஜெய்கிசான், ஜெய்சவான்” என்பதாகும். இந்தக் கோஷம் இந்திய தேசம் முழுதும் எதிரொலித்தது. எதிரியை விரட்டப் படைவீர்ர்கள் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் போது விவசாயிகள் தானிய உற்பத்தியை பெருக்க அரும்பாடுபட்டனர்.

கடைசியாகப் படை எடுத்த பாகிஸ்தான் படை, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை தாங்காமல், சமாதானத்துக்கு வந்தது. சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ரஷ்யா சென்றார்.

1966 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 10 – ஆம் தேதி இரவு ரஷ்யத் தலைவர்கள் முன்னிலையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தாயிற்று.

பிரதமர லால்பகதூர் சாஸ்திரி மன நிம்மதியுடன் தனது தங்கும் இடத்துக்குச் சென்றார். அவரைத் தொடர்ந்து அங்கே காலனும் சென்றான் போலும். சாஸ்திரி இயற்கை எய்தினார். பிரதமராக ரஷ்யா சென்ற லால்பகதூர் சாஸ்திரியைப் பிணமாகத்தான் இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று.

முதலில் பிரதமர் நேரு மறைந்தார். அடுத்துப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மறைந்தார். இந்தியாவில் மீண்டும் இருள் சூழ்ந்தது. குல்ஜாரிலால் ந்ந்தாவைத் தற்காலிக பிரதமராக்கினார்கள். இம்முறை பிரதமரைத் தேர்ந்து எடுப்பது என்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. என்ன செய்யப் போகிறார் காமராஜர்?

இதற்கிடையில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகிய காமராஜருக்குப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது. தேர்ந்து எட்க்கப்படும் பிரதமர் மக்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவும், இந்திய நாட்டைக் கட்டிக்காத்து, முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்பவராகவும் இருக்கவேண்டும்.

யார் இதற்குத் தகுதியானவர் என்ற கேள்வி எழும்போதே, கட்சியிலும் பிரதமருக்கான் வரை முறைப்படி தேர்தல் மூலமே தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற பிடிவாதப் போக்கும் நிலவியது.

கட்சித் தலைவர்கள் விரும்பியபடியே பிரதமரைத் தேர்தல் மூலமு தேர்ந்து எடுக்கக் காமராஜர் தீர்மானித்தார். பண்டிதநேருவின் ஒரு மகளும் சாஸ்திரி மந்திரி சபையில் செய்தி ஒலிபரப்பு மந்திரியாகவும் இருந்தவருமான இந்திராகாந்தியை காமாராஜர் பிரதமர் தேர்தலுக்கு நிறுத்தினார்.

இந்திரா காந்தியை எதிர்த்துப் பழம்பெரும் தேசபக்தரும் , தியாகியுமான மொரார்ஜிதேசாய் போட்டி போட்டார்.

தேசாய் ஒரு சிறந்த தேசபக்தர். பம்பாய் மாநில முதல்வராகவும், பிறகு நேரஜியின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராகவும் பதவி வகித்தவர். சிறந்த நிர்வாகி. மிகவும் கண்டிப்புக்கார்ர். ஓரளவிற்கு மொரார்ஜி தேசாய்க்கு ஆதரவும் இருந்தது. அவரைப் பிரதமராக்க பல தலைவர்கள் விரும்பினார்கள்.

ஆனால் காமராஜரோ ‘கிங்மேக்கர்’ என்ற பெயர் பெற்றவர். அதாவது ‘பிரதமர்களைத் தேர்வு செய்பவர்’ என்று பெயர் எடுத்து இருந்தார். அவர் நினைத்து விரும்பியபடியே தான் லால்பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக்கினார்.

இப்போது காமராஜர் தியாக் குடும்பத்தில் பிறந்தவரும் பண்டித நேருவினால் அரசியலுக்கு தயாரிக்கப்பட்டவரும் அவரோடு கூடவே இருந்தவரும் மத்திய அமைச்சராக இருந்து முன் அனுபவம் பெற்றவருமான இந்திராகாந்தியைப் பிரதமராக்க விரும்பினார்.

இந்திராகாந்தி பிரதமரானால் இந்தியா சுபிட்சமடையும். ஏழை, எளிய மக்கள் வாழ்வு வளம் பெறும். முன்னேற்றமடையும் என்று காமராஜர் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை வீண்போக விடவில்லை.

தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரடனும் பேசி, காமராஜர், இந்திரா காந்திக்கு ஆதரவு திரட்டினார்.

காமராஜர்தான் ‘கிங்மேக்கர்’ ஆயிற்றே. அவரது விருப்பப்படியே கட்சித் தேர்தலில் இந்திரா வெற்றி பெற்றார். இந்தியாவின் மூன்றாவது பிரதமராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

தனது முயற்சி வெற்றி பெற்று, இந்திராகாந்தி பிரதமராக ஆனது கண்டு, காமராஜர் பெரிதும் மனம் மகிழ்ந்தார். இந்திய அரசியலில் தான் ஒரு கிங்மேக்கர்தான் என்பதைக் காமராஜர் நிரூபித்தும் காட்டிவிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக, அகில இந்தியக் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக, பின்னர் தமிழ்நாடு முதலமைச்சராக இறுதியாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க் காமராஜர் பிரதமர் நேரஜியுடன் நீண்ட நெடுங்காலத் தொடர்பு வைத்திருந்தார். தேசப்பிதா மகாத்மா காந்திக்குப் பின் காமராஜர், மதிப்பளித்ததும், நேசித்ததும் நேருஜி ஒருவரைத்தான். அந்த அரும்பெரும் தலைவர் நேருஜியின் மகள் இந்திராகாந்தியைப் பிரதமராக்கியதைக் காமராஜர், தனது நன்றிக்கடனாகவே கருதினார். ஆனால் தோற்றுப்போன மொரார்ஜி தேசாய், காமராஜரை அல்ல இந்திராகாந்தியைப் பழிவாங்கக் காலம் வரும் என்று காத்துக்கிடந்தார்.

‘வளர்த்தக் கடா மார்பில் பாய்ந்தது’ என்ற பழமொழிக்கு ஒப்பப்பிற்காலத்தில் காமராஜருக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க் காமராஜர் டெல்லியில் இரண்டரை வருடகாலம் இருந்நார். காங்கரஸ் கட்சியைப் பலப்படுத்த அவர் இந்தியாவில் இருந்த எல்லா மாநிலங்களுக்கும் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.

அவரது பிரச்சாரங்கள் தமிழ்மொழியிலேதான் இருந்தது. மொழி தெரியாவிட்டாலும். வடநாட்டு மக்கள் காமராஜர் பேச்சைக்கேட்டார்கள். அவரைக் ”காலாகாந்தி” (கருப்புக்காந்தி) என்றே அழைத்தார்கள். காமராஜரது எளிமையும், உழைப்பையும், நேர்மையையும் எல்லா மக்களும் மதித்து அவரைப் போற்றினார்கள் – புகழ்ந்தார்கள்.

வடமாநிலத்தில் ஒரு காங்கிரஸ் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு காமராஜர் பேசுவதற்குச் சென்றிருந்தார். அவர் கூடவே சி. சுப்பிரமணியமும் சென்றிருந்தார்.

இந்தி மொழி பேசும் மக்கள் கூட்டமே எதிரில் உட்கார்ந்து இருந்தார்கள். சி. சுப்பிரமணியம் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். இதைக் கேட்ட மக்கள் கூச்சல் போட்டு, அவரைப் பேசவிடாமல் தடுத்தார்கள். ஹிந்தியில் பேசுமாறு கூச்சல் போட்டார்கள். சி. சுப்பிரமணியம் தனது பேச்சை நிறுத்திக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பெருந்தலைவர் காமராஜர், சற்று திகைத்தார். ஏனெனில் அடுத்து அவர் அதே கூட்டத்தில் தமிழில் தானே பேசப் போகிறார்.

காமராஜர் ஒருவரை அழைத்துக் கூட்டத்தில் உள்ள ஒருவரிடம் சென்று காமராஜர் தமிழில் பேசப்போகிறார். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அபிப்ராயம் கேட்டுவர அனுப்பி வைத்தார்.
அவரும் காமராஜர் விருப்பப்படி கூட்டத்துக்குள் சென்று ஒருவரிடம் இதைச் சொல்லி விசாரித்தார்.

”காமராஜ்ஜீ – காலாகாந்தி. அவர் ஏழை பங்காளர். எளிமையானவர். எங்களில் ஒருவர். அவர் எந்த பேசினால் என்ன? எங்களைப்பற்றித் தானே பேசப்போகிறார். அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே நாங்கள் உட்கார்ந்து இருப்போம்” என்றார்களாம். கேட்டு வந்தவர் காமராஜிடம் சொன்னார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க் காமராஜர் டெல்லி வீட்டில் இருந்து வந்தார். 1966 – ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 7 – ஆம் தேதி, டெல்லியில் பசுவதைத் தடுப்புக் கிளர்ச்சி நடந்தது.

காமராஜர் டெல்லி வீட்டில்தான் இருந்தார். கிளர்ச்சியாளர்கள் காமராஜர் வீட்டைக் கற்காளால் வீசித் தாக்கினார்கள். காவலாளியை அடித்துத் தள்ளிவிட்டு உள்ளே நூழைந்தார்கள். வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. ஆனால் ஜன்னல்கள் திறந்து இருந்தது.

காமராஜர் மேல் வெறுப்பும், பொறாமையும் கொண்ட அந்தக் கும்பல் ஜன்னல் வழியே தீப்பந்தங்களை வீசினார்கள். வீடு தீப்பிடித்து எரிந்தது. மலை குலைந்தாலும் மனங்குலையாத காமராஜர் வீட்டிற்குள் தான் இருந்தார். படுக்கை மெத்தை தீப்பிடித்தும்கூட அவர் அஞ்சவில்லை. அலறவில்லை. பின்புறக்கதவைத் திறந்து கொண்டு காமராஜர் வெளியேறிவிட்டார்.

இந்தச்சம்பவம் டெல்லியில் காட்டுத்தீபோல் பரவியது. மறுநாள் பார்லிமெண்டிலும் இந்த நிகழ்ச்சி குறித்துக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலமெல்லாம் பற்பல எதிர்ப்புகளைச் சந்தித்துச் சகித்துக் கொண்டு மௌனமாக இருந்து வெற்றி கண்டவர் ஆயிற்றே காமராஜர். யாரோ வேண்டாதவர்கள் செய்த இந்த நிகழ்ச்சிக்காக அவர் வேதனைப்படவில்லை.

தமிழ்நாட்டில் காமராஜருக்குப் பின் பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்து திறம்பட நிர்வாகம் செய்தார். பல திட்டங்களை உருவாக்கி அவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் மத்திய அரசு தன் இந்திக் கொள்கையை மெல்ல பலதுறைகளில் புகுத்தத் தொடங்கியது. தமிழ்நாட்டில் இந்தி நுழைவதை எதிர்த்து வந்த திராவிட முன்னேற்றக்கழகம், இப்போது முழு மூச்சுடன் எதிர்க்கத் தொடங்கியது.

பல இடங்க்ளில் வன்முறை தலைதூக்கியது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸ் கடுமையாக நடவடிக்கை எடுத்தது. எதிர்ப்பாளர்களும் மூர்க்கத் தனமான எதிர்ப்பைக் காட்டினார்கள். பல உயிர்கள் பலியாயின. ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்தது. அரிசி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டார்கள். விலைவாசிகள் வேறு என்றுமில்லாத அளவிற்கு ஏறியிருந்தன. மக்கள் காங்கிரஸ் ஆட்சி மீது வெறுப்படைந்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இராஜாஜியும், அவரது சுதந்திராக் கடசியும் முஸ்லீம்லீக்கட்சியும் சேர்ந்துகொண்டன.

திராவிட முன்னேற்றக்கழகத்தினர் மேடைதோறும் ஏறி, ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியைத் தமிழ்நாட்டில் நுழையவிடமாட்டோம். விலைவாசிகளைக் குறைப்போம். ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவோம்” என்று பேசினார்கள்.

மக்கள் நம்பினார்கள். 1967 – ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் 133 இடங்களை பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது.

அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.இந்தத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராஜர் சட்டமன்றத்துக்கு போட்டியிட்டு, மாணவர் தலைவர் சீனிவாசன் என்பவரிடம் தோல்வியடைந்தார்.

ஆனால் எதிர்க்கட்சியினர்கள் கூட, காமராஜர் தோற்றிருக்கக்கூடாது” என்று பேசிக்கொண்டார்கள். குழந்தையை தொடையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டிய கதைபோல் அவர்களது பேச்சும், அனுதாபமும் இருந்தது. தோல்வி கண்டு காமராஜர் துவண்டுவிடவில்லை.

காமராஜர் தனது தோல்வியை மிகச் சாதாரண நிகழ்ச்சியாக கருதி ஒதுக்கிவிட்டார். வேறு யாராக இருந்தாலும், ”தமிழ்நாட்டு மக்கள் நன்றி கெட்டவர்கள், இந்த மக்களின் நல்வாழ்விற்காகத் தானே நான் நேற்று வரை பாடுபட்டேன்” என்று புலம்பியிருப்பார்கள். அரசியல் துறவறம் பூண்டிருப்பார்கள். அல்லது தன்னைத் தோற்கடித்த கட்சியின் மீது சதாசர்வகாலமும் ஏதாவது குற்றம், குறை கூறிக் கொண்டே காலத்தை ஓட்டியிருப்பார்கள். தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தார் காமராஜர். அதுவே அவரது பெருந்தன்மைக்கு சான்றானது.

காமராஜர் சிலநாட்களே ஓய்வு பெற்றிருந்தார். தீவிர அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவரால் ஒரேயடியாய் ஓய்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்து கிடக்கவா முடியும்?

நாகர்கோயில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வந்தது. காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகி டெல்லி சென்றார். தான் பிரதமராக்கிய பெண்புலி இந்திராகாந்திக்குப் பின்னால் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து அதன் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அங்கேகூட அவர் அதிகம் பேசியது கிடையாது.

1970 – ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருந்தது. இதற்கு யாரை நிறுத்துவது என்று கலந்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் செயற்குழு பெங்களூரில் கூடியது.
எல்லோரும் நீலம் சஞ்சீவ ரெட்டியை நிறுத்த எண்ணிணார்கள். பிரதமர் இந்திராகாந்தியும் இந்தக் கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டிருந்தார். சஞ்சீவ ரெட்டியை நிறுத்துவதற்கு இந்திராகாந்தி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

பெங்களூரிலிருந்து டெல்லி சென்றதுமே, இந்திரா காந்தி அவரது அமைச்சரவையில் துணைப் பிரதமாகவும் நிதியமைச்சராகவும் இருந்த மொரார்ஜி தேசாயிடமிருந்த நிதித்துறையைப் பறித்தார். அப்போது குடியரசுத் தனண்த் தலைவராக இருந்து விலகிய வி.வி. கிரியை ஆதரிக்கப் போவதாகவும் அறிவித்தார். எல்லோரும் அவர்களது மனச்சாட்சிப்படி ஓட்டளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்திராகாந்தி எண்ணப்படியே வி.வி. கிரி குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீலம் சஞ்சீவ ரெட்டி தோல்வியடைந்தார்.இந்நிகழ்ச்சியால் காங்கிரஸ் இரண்டாக பிளவுப்பட்டது. ஒன்று இந்திரா காங்கிரஸ் மற்றது பழைய காங்கிரஸ். நிஜலிங்கப்பா பழைய காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தன் பதவியில் தொடர்ந்தார்.

இந்திரா காங்கிரசுக்கு ஜக ஜீவன்ராம் தலைவரானார். பெருந்தலைவர் காமராஜர் இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே தனது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் சென்னைக்கே குடிவந்திருந்தார். தேர்தல்களில் போட்டியிட்டார். தற்போது நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்.

காமராஜர் பழைய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். தன்னால் பிரதமராக்கப்பட்ட இந்திரா காந்தியோடு அவராலை ஒத்துப்போக முடியவில்லை. ஆனால் பிரதமர் இந்திராகாந்திக்கு மட்டும் பெருந்தலைவர் காமராஜரின் மேல் மதிப்பும், மரியாதையும் எப்போதும் இருந்து வந்தது.

இந்திராகாந்தி த்ன்னையும் தனது பிரதமர் பதவியையும் நிலைநிறுத்திக்கொள்ள பல திட்டங்களைத் தீட்டினார். 20 அம்சத் திட்டங்களைக் கொண்டு வந்து ஏழை, எளிய மக்கள் பொருளாதார மேம்பாடு அடையச் செய்தார். வங்கிகளை எல்லாம் தேசிய மயமாக்கினார். மன்னர் மான்யங்களை ஒழித்தார். இந்தியாவோடு பாகிஸ்பான் போர் தொடுத்தது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து உதவி செய்தது. ஆனால் பிரதமர் இந்திராகாந்தியோ, இந்தியாவில் தயாரான போர்க்கருவிகளைக் கொண்டே போரிட்டு வெற்றிக் கண்டார்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பலமிழந்து, செல்வாக்கு இழந்து இருந்தது. இப்போது இரண்டு காங்கிரஸ் கட்சிகளாகித் தேர்தல்களில் போட்டியிட்டு மீண்டும் தொல்விகளையே கண்டது. மாறாக திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தது.

இந்திராகாந்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு வேண்டுமே என்பதற்காக திராவிட இயங்கங்களோடு கூட்டு வைத்துக் கொண்டார். அவர்களும், மாநில அரசுகள் செம்மையாக நடைபெற வேண்டும் என்றால் மத்தியிலே நிலையான ஆட்சி நடக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்பினார்கள்.

அதனால்தான்,

”நேருவின் மகளே வருக!
நிலையான ஆட்சி தருக!”

என்று இந்திராகாந்திக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

இந்திராகாந்தியால் மட்டுமே மத்தியிலே நிலையான ஆட்சியை நடத்த முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் காமராஜரோ மௌனமாக இருந்து நாட்டில் நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். அரசியலில் சாதனைகள் செய்தது போதுமென்று ஒதுங்கிவிட்டார் காமராஜர்.