கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாறிற்று. கல்வி கற்பது எளிதாக்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கும் கல்வி. இலவசக் கலவி என்றானது.
எங்கும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன. எல்லோருக்கும் இலவசக்கல்வி. மதிய உணவு – சீருடைகள் – என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தினார் முதலமைச்சர் காமராஜர். கல்வி நிலை உயர்ந்தது. எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை, எளியவர்களுக்கும் எட்டியது. இதனால் ”கல்விக் கண் திறந்தவர்” என்று காமராஜரைப் பல்லோரும் பாராட்டினார்கள்.
”ஏட்டையும் பெண்கள் படிப்பது தீதென்று
எண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்.
வீட்டிற்குள்ளே பெண்ணைப்
பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகுவிந்தார்”
— என்றார் மகாகவி பாரதி. அந்த நிலையை தமிழகத்திலே உண்டாக்கிக் காட்டியவர் பெருந்தலைவர் காமராஜரே ஆவார்.
பெண்கல்வி பெருகியது. கிராமங்களில் கூடப் பெண் பிள்ளைகள் கல்வி கற்க முற்பட்டார்கள். கையெழுத்துப் போடு என்று காட்டினால், இடது கைக் கட்டை விரலை நீட்டுகிறவர்கள் தான் அந்தக் காலத்தில் ஆண்களிலும், பெண்களிலும் அதிகமாக இருந்தார்கள். இந்த நிலை மாற இளைய தலைமுறையினர் காமராஜர் ஆட்சியால் கல்வி நலம் பெற்றார்கள்.
சீருடைத் திட்டத்தினால் பள்ளிகளில் ஏழை, பணக்காரன் பிள்ளைகள் என்கிற பாகுபாடுகள் நீங்கின. மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வுகள் மேலோங்கின.இந்த மாற்றம் சமுதாயத்தில் காமராஜர் நிகழ்த்திக்காட்டிய பெரிய மாற்றமல்லவா?
இதைப் போலவேதான் இலவச மதிய உணவுத் திட்டமும் – பள்ளிக்குப் படிக்கச் செல்லும் குழந்தைகள் கட்டுச்சோற்று மூட்டைகளையும், புத்தக மூட்டைகளோடு சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாறிற்று. இதனால் மிகவும் பின் தங்கிய சமுதாயத்தினர்களும், ஏழை, எளியவர்களும் கூடத் தங்களது பிள்ளைகளைப் பள்ளிகளுக்குத் தயங்காது அனுப்பி வைத்தார்கள். ”வீட்டில் இருந்தால்தான் பசி, பட்டினி – பிள்ளை பள்ளிக்கூடம் சென்றாலாவது நாலு எழுத்துக் கற்றுக்கொள்ளும் – மதியமும் வயிறாரச் சாப்பிட்டுக்கொள்ளும்” என்று நினைத்துத் தங்களது பிள்ளைகளைத் தயங்காது பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
எங்கும் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எல்லோருக்கும் இலவசக்கல்வி – இலவச்ச் சீருடைகள். இலவச மதிய உணவுகள் – தமிழ்நாட்டில் கல்வி நிலை உயர்ந்தது. காலங் காலமாக கல்வி கற்ற்றியாதவர்கள் எல்லாம் கல்வி கற்றார்கள். காமராஜரின் திட்டங்களினால் கல்வி பெருகியது நாட்டில்.
எல்லாக் கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் ஆயிரக்காணக்கான,இலட்சக்கணக்கான இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமே. அத்தனை பள்ளிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு எங்கே போவது? இந்தக் கேள்வி எழுந்தது.
இதற்கும் ஒரு வழியைக் காமராஜரே கண்டுபிடித்துச் சொன்னார். அது என்ன?
”நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல், ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம், ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து விடலாமே. ‘அ’ – ‘ஆ’ ன்னா ‘அம்மா, அப்பா – படம், பட்டம், மரம், மாடு’ ன்னு கற்றுத் தரப் பயிற்சி ஆசிரியர்தானா தேவை?” என்றார் காமராஜர்.
அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். எங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அவரகளுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த திட்டத்தினால், எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. அந்தக் கால ஆரம்பப்பள்ளிப் பாடத்திட்டத்தில்,
”அணில் – ஆடு, இலை, ஈக்கள், உரல், ஊஞ்சல், எலி, ஏணி, ஐவர், ஒட்டகம்,ஓணான், ஔவையார், எஃகு என்றுதான் தொடக்கக் கல்விப பாடங்கள் இருந்தன. ‘ப – ட – ம்’ படம் என்றும், ‘ம -ர – ம்’ மரம் என்றும் எழுத்துக் கூட்டிப் படிப்பதும் இருந்தன.
இவைகளை எல்லாம் ஓராசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஒழுங்காக பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
பிள்ளைகள் படிக்க வழிகண்டாயிற்று. பெரியவர்கள, முதியவர்கள் படிக்க வழிகள் ஏதும் இல்லையா? – என்று கேட்கலாம்.
எல்லாக் கிராமங்களிலும் இரவுப் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. முதியோர் கல்வி கற்கலானார்கள். எழுத்துக்கள் – எண்கள்- எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்கள். கல்வி நிலை உயர்வடைந்தது காமராஜர் ஆட்சியில். உண்மைதானே?
ஆரம்பப் பள்ளிப் படிப்போடு சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் மேலே படிக்க முடியாமற்போன, காமராஜர்தான் ‘தான் கற்றுத் தேராவிட்டாலும், தமிழ்நாட்டிலே இருந்த கோடானுகோடிப் பேர்கள் கல்வி கற்று வாழ்விலும் முன்னேற எல்லா வகையிலும் பாடுபட்டார். திட்டங்கள் தீட்டினார் – செயல்படுத்தினார்.
காமராஜரைப் படிக்காத மேதை என்பார்கள். உண்மையில் அவர் படிக்காத மேதை அல்ல. படித்த மேதை. தனது படிப்பு அறிவை அவர் காலப்போக்கில் வளர்த்துக் கொண்டார். ‘கற்றலிற் கேட்டலே நன்றே’ என்பார்கள். காமராஜருக்குக் கிடைத்த கேள்வி ஞானம் அளப்பற்கரியது. செய்தித்தாள்களைப் படிப்பதின் மூலம் நாட்டு நடப்புகளை, உலக நிலையை அன்றாடம் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
பாரதியார் பாடல்கள் மற்றும் பற்பல ஆங்கிலப் புத்தகங்களை எல்லாம் கூட அவர் அன்றாடம் படித்தார். நாளாக, நாளாக அவர் கற்ற்றிந்த மேதையர்களோடு, உடனிருந்து உரையாடும் ஆற்றலினையும் பெற்றார். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ – என்று ஆக்க அவரது ஆட்சியை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்றே கூறலாம்.
”கண்ணுடையோர் என்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர்” – என்று
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
காமராஜர் காலத்தில் தமிழகத்தில் கண்ணுடையோர்களைவிட, முகத்திரண்டு புண்ணுடையோர்களே பெரும்பாலானவர்களாக இருந்தார்கள். காரணம் பொதுமக்களுக்குக் கல்வியின் மேல் நாட்டம் இல்லாமை என்பது இல்லை.
நாட்டில் நிலவிய வறுமை, பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் தான் காரணம் என்பதைக் காமராஜர் உணர்ந்திருந்தார்.
அன்றைய இந்தியாவில் மேற்கு வங்காளமும், கேராளவும்தான் கல்வியில் மிகமிகப் பின் தங்கியே இருந்து வந்தது.
”கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பாடிய பாரதியின் வாக்கை மெய்ப்படுத்திக் காட்டியவர் பெருந்தலைவர் காமராஜரே ஆவார்.
காமராஜர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், கல்விக்காக அவர் என்னென்ன சாதனைகள் செய்தார் என்பதை இனிக் காண்போம்.
காமராஜர் ஆட்சிக்கால்த்தில்தான் எல்லாச் சிற்றூர்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. பேரூர்களுக்கு எல்லாம் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட கிராமங்களில் கூட உயர்நிலைப் பள்ளிகள் உருவாகின.
16 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் 16 லட்சம் குழந்தைகள் படிக்கலானார்கள். அதன் பின்னர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 48 லட்சம் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி கற்கலானார்கள்.
30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் மாணவ – மாணவிகள் பகல் உணவு உண்டார்கள் என்று அன்றைய பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த திரு. நெ.து. சுந்தர வடிவேலு கூறுகிறார்.
காமராஜர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது 3 இலட்சத்து 86 ஆயிரமாகயிருந்த உயர்நிலைப்பள்ளிகள், அவரது முயற்சிகளால் 13 லட்சமாக உயர்ந்தது. தொழிற் கல்விக் கூடங்களும் மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டன. தொழில்கள் பெருக வேண்டுமானால் தொழிற் கல்வியும் அத்தியாவசியமன்றோ.
இலவசக் கல்வி, மதிய உணவு, இலவசப் பாடப்புத்தகங்கள் என்றெல்லாம் அறிமுகப்படுத்திய காமராஜர், தனது ஆட்சிக் காலத்திலே தான் பள்ளிப் பிள்ளைகளிடையே சீருடையை அணிந்து எல்லாக் குழந்தைகளும் சமம் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
பள்ளிகளில் அந்தக் காலத்தில் பணக்கார்கள் வீட்டுப் பிள்ளைகள் ஆடம்பரமான உடைகளில் வந்தார்கள். ஏழை, எளிய பிள்ளைகள் கிழிசல் சட்டைகளைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் வந்தார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைப்பார்த்தால், யார் யார் பணக்காரர்கள் வீட்டுப்பிள்ளைகள், யார் யார் ஏழைகள் வீட்டுப் பிள்ளைகள் என்று எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வேறுபாட்டை, வித்தியாசத்தை பூண்டோடு களைந்து எறியவே காமராஜர் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுதும் அமுல் படுத்தினார். இந்தத் திட்டத்தினால் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளிடம் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்டன. அந்தச் சீருடைத்திட்டம் இன்னும் தமிழகத்தில் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கக் காணலாம்.
இன்று கூட எத்தனையோ, டாக்டர்கள், வழிக்கறிஞர்கள், என்ஜியர்கள், கலெக்டர்கள் மற்றும் காவல் துறைப் பெரிய அதிகாரிகள் எல்லாம், ”நாங்கள் பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த கல்வித் திட்டங்களால் படித்து, வேலைவாய்ப்புப் பெற்று உயர்ந்த நிலையில் இருக்கிறோம்” – என்று நன்றியுடன் சொல்லிக் கேட்கலாம்.
”கண்ணுடையோர் என்பார் கற்றோர் – முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர்”
– என்றார் திருவள்ளுவர். கல்வி பெற்றோரே கண்ணுடையவர்கள், மற்றவர்கள் முகத்திரண்டு புண்ணுடையவர்கள் என்பதே வள்ளுவர் கருத்து.
தமிழகத்தில், பட்டி தொட்டிகள், சிற்றூர்கள், பேரூர்கள், நகரங்கள், பட்டணங்களில் எல்லாம் எல்லோர்க்கும் கல்வியை அளித்த பெருந்தலைவர் காமராஜரைத் தமிழகத்தில், ”கல்விக் கண் திறந்து வைத்தவர்” – என்று சொல்வதிலே தவறேதுமில்லையல்லவா.
இந்தியாவில் அன்று மேற்கு வங்காளமும், கேரளாவும்தான் கலவியில் சிறந்து விளங்கியது. அந்த அளவிற்குத் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தில் கல்வியை எங்கும் பரப்பியவர் காமராஜரே என்றால் அது மிகையாகாது.
மதிய உணவுகள் மாணவ – மாணவியர்களுக்குப் போகும் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் அந்தந்த மாவட்டத்தில் இருந்த பணக்காரர்களிடம் நன்கொடைகள் வசூலித்தே போடப்பட்டது. பெரும்பாலோனோர்,
”மண்டினி ஞாலத்து மக்கட்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே”
– என்று உதவிடத்தான் செய்தார்கள். அதிலும் பள்ளியில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு உணவுகள் வழங்குவதில் அவர்கள் தர்ம சிந்தனையோடு தாராளமாக்க் கொடுத்தும் உதவி செய்தார்கள்.
தென்மாவட்டங்களில் சிலபல ஊர்களில், அறுவடை காலங்களில் இத்திட்டத்திற்காக ஒரு மரக்கால், இரண்டு மரக்கால் என்றும் அளந்து கொடுத்தார்கள். எட்டயபுரம் மகாராஜா கூட இத்திட்டத்திற்கு உதவி செய்தார்.
மழைக்காலம் அல்லது பஞ்ச காலம் என்று வந்துவிட்டால், கொடுத்தவர்கள் நிறுத்திக்கொண்டார்கள். இதனைக் கருத்தில் கொண்ட பெருந்தலைவர் காமராஜர், எக்காலத்திலும் மதிய உணவு கிடைக்க அரசாங்கமே வழிவகை செய்யும்படி உத்தரவிட்டார்.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளும் மதிய உணவு தங்கு தடையின்றி வழங்கப்பட்டது. கல்விக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகையில் இத்திட்டத்திற்காகவும் சேர்த்து அதிகப் பணம் ஒதுக்கிட அவர் ஏற்பாடு செய்தார்.
அந்தந்த திட்டத்தை அமுல்படுத்தும்போது அவைகளுக்குச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் காமராஜர் என்றும் கலந்து ஆலோசிக்கத் தவறியதே இல்லை. அவர்கள் அரசாங்க ஊழியர்களே என்றாலும் கூட அவர்களுக்குத் தக்க மரியாதைகளைக் கொடுத்தார்.
தன் கூடவே முதலமைச்சர் காரிலேயே அவர்களைப் பற்பல ஊர்களுக்கு உடன் அழைத்தும் சென்றார். அதிகாரிகளுக்கு இந்த நடவடிக்கை அதிசயமாக, ஆச்சர்யமாக, அதிர்ச்சியாகக்கூட இருந்தது எனலாம்.
காரிலே போகும்போது அவர்களை அந்தத் திட்டம் பற்றிய பல் வேறு பிரச்சினைகளையும், அவைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளையும் காமராஜர் சொல்லிக்கொண்டே போவார்.
இப்படித்தான் அன்று பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த திரு. நெ.து. சுந்தர வடிவேலுவைக் காமராஜர் பலமுறை தன்னோடு, தனது காரிலேயே அழைத்துச் சென்றிருக்கிறார்.
குற்றம், குறைகள் சற்றும் நிகழ்ந்து விடாதபடி கண்காணித்துக் கொள்வதிலே காமராஜர் கண்ணும் கருத்துமாய் இருந்தார். பொற்கால ஆட்சியினைத் தமிழ்நாட்டில் காமராஜர் புகுத்திப் புகழ் சேர்த்துக் கொண்டார். கல்விக்காகவும், தமிழகத்தில் கல்வி முன்னேற்றத்திற்காகவும் காமராஜர் கையாண்ட கொள்கைகள், நடைமுறைப்படுத்திய திட்டங்கள் எண்ணிலடங்காதவைகளாகும்.
1938-39 ஆம் ஆண்டுக்கு அப்போதிருந்த அரசு, தமிழகம் முழுவதிற்கும் கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகை ரூபாய் 2 கோடியே 62 லட்சம் ஆகும். ஐந்தாண்டுத் திட்டத் தொடக்கக் காலத்தில் அது ரூபாய் 10 கோடியே 57 லட்சமாகும்.
1960-61 ஆம் ஆண்டில் கல்விக்காக ரூபாய் 15 கோடியே 68 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது நடந்து காமராஜர் முதலமைச்சர் பொறுப்பேற்று ஆண்டிருந்த காலகட்டமேயாகும்.
15,303 ஆரம்பப்பள்ளிகள் இயங்கி வந்த தமிழகத்தில், 26,700 ஆரம்பப் பள்ளிகளாக் காமராஜர் ஆட்சியில் உயர்ந்தன. பள்ளிக் கூடமில்லாத கிராமங்களே தமிழக்த்தில் இருக்கக்கூடாது என்று பெருந்தலைவர் காமராஜர் கருதினார்.
தமிழ்நாட்டில் முன்னூறும் அதற்கும் மேலும் மக்கள் தொகையுள்ள எல்லாக் கிராமங்களிலும், ஒரு மைல் சுற்றளவிற்குள் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார் காமராஜர்.
18 லட்சத்து 50 ஆயிரம் சிறுவர் சிறுமிகள் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய தமிழகத்தில் அந்த நிலைமையை மாற்றி 34 லட்சம் பிள்ளைகள் படிக்கும் வாய்ப்பினைக் காமராஜர் உண்டாக்கினார். பள்ளி வேலை நாட்கள் எல்லாவற்றிலும் நண்பகல் உணவு படிக்கும் குழந்தைகளுக்குக் காமராஜர் வழங்கச் செய்தார்.
”கிழிந்து, நைந்து போன ஆடைகளோடு என் குழந்தையை எப்படிப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவேன்” – என்று ஏங்கி, ஏழைத் தாய்மார்கள் கண்ணீர் வடித்தார்கள். அவர்களது கண்ணீரைத் துடைத்துக் காமராஜர், எல்லாப் பிள்ளைகளுக்கும் இலவசச் சீருடைகள் வழங்கச் செய்தார்.
பள்ளிச் சீரமைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து காமராஜர் அதை அமுல்படுத்தினார். அவர் தொடங்கி வைத்த பள்ளிச் சீரமைப்புத் திட்டத்தின் பயனாகப் பள்ளிகளுக்குப் பொதுமக்கள் நன்கொடையாக அளித்த பொருள்களின் மதிப்பு ரூபாய் 7 கோடியாக வளர்ந்தது.
கல்வித் துறையில் காமராஜர் கையாண்ட திட்டங்களையும், செயற்பாடுகளை
யும் கண்டு, அன்றைய இந்திய பிரதமர், பண்டித ஜவர்கஹர்லால் நேருவே காமராஜரை வாயாரப் பாராட்டினார்.
பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் காமராஜரைப் ”பச்சைத் தமிழர்” – என்று பாராட்டினார. காமராஜரின் கல்விச் சாதனைகளை, சேர, சோழ, பாண்டிய மன்னர்களோ, அதன்பின்னர் தமிழகத்தை ஆட்சி செய்தவர்களோ, ஆங்கிலேயர்களோ எவருமே செய்தது இல்லை என்றார். ”இன்னும் பத்தாண்டுகள் காமராஜர் ஆட்சி நீடித்தால் தமிழகத்தில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலை நிச்சயமாக உருவாகும்.” என்றும் அவர் சொன்னார்.
காமராஜர் கல்விச்சாதனைகள் இன்னும் எவைஎவை என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. இதோ காமராஜர் செய்திட்ட ஏனைய கல்விச் சாதனைகளைப் பாருங்கள்.
471 உயர்நிலைப்பள்ளிகளே இருந்த தமிழ்நாட்டில் 1361 உயர்நிலைப் பள்ளிகளை உண்டாக்கினார் காமராஜர்.
கல்லூரிகளின் எண்ணிக்கையோ 28 ஆக இருந்தது. அவைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் 50க்கு மேலாக உயர்ந்தன. 6 பயிற்சிக் கல்லூரிகள் இருந்த தமழ்நாட்டில் 17 பயிற்சிக் கல்லூரிகளாக ஆக்கினார் காமராஜர். மேலும் 3 உடற்பயிற்சிக் கல்லூரிகளைத் தோற்றுவித்தவரும் காமராஜரே.
காமராஜரே முதன்முதலில் தமிழிலே பாடப்புத்தகங்கள் வெளியிட வழி செய்தவர். கோவை அரசினர் கலைக் கல்லூரியிலும் மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் அரசியல் பாடங்களைத் தமிழில் கற்றுத் தருவதற்கும் காமராஜரே வழிவகைகள் செய்தார்.
ஏழை, எளிய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்கினார். தொழில்நுட்பம், கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை, காலநடைத் துறை, அரிசன நலத்துறை ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கி, இத்துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கி நாட்டிற்கு அவர்களை வழங்கினார் காமராஜர்.
அறிவு வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன் முதலாகப் பொது நூலகச் சட்டத்தை ஏற்படுத்தி, 454 கிளை நூங்கங்களைக் காமராஜர் அமைத்தார். எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மத்திய நூலகங்கள் இவ்வாறு ஏற்பட்டன.
படிக்காத காமராஜர் எப்படித் தமிழ்நாட்டில் படித்தவர்களை அதிகமாக்கினார் என்பது இப்போது தெள்ளெனத் தெரிகிறதல்லவா. அவரைப் படிக்காத மேதை என்பார்கள். ஆனால் காம்ராஜர் உண்மையிலே ஒரு படித்த மேதை ஆவார்.
அவர் தனது கல்வி அறிவை நாள்தோறும் வளர்த்துக்கொண்டார். ஆரம்ப காலங்களில் செய்தித்தாள்களைப் படித்து அரசியல் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதிலேதான் காமராஜர் ஆர்வம் காட்டி வந்தார்.
மகாகவி பாரதியாரின் கவிதைகளை அவர் விரும்பிப் படித்தார். பிரயாணங்கள் செய்த போதெல்லாம் பாரதியின் கவிதைப் புத்தகத்தை உடனெடுத்துச் சென்றார். பின்னர் பல்வேறு தமிழ் நூல்களைப் படித்தார். ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். அன்றாடம் ஆங்கிலச் செய்திகளை வரவழைத்துப் படித்தார். ஆங்கலத்திலிருந்த நல்ல நூல்களையும் காமராஜர் வாங்கிப் படிக்கலானார். தனது கல்வியைத் தானே வளர்த்துக் கொண்ட தலைவர் காமராஜர்.