நான், சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரான முதலாண்டு, புது தில்லியில் நடந்த கூட்டமொன்றிற்குச்சென்றேன். திரும்புகையில், விமான நிலையத்தில் பெருந்தலைவர் காமராசரைக் கண்டேன். இல்லை, எதோ சிந்தனையில்மூழ்கியிருந்த என்னை அவர் பார்த்துவிட்டார். பெரியவர்கள் சூழ வந்த அவர், என் முன்னே வந்து நின்று
“எப்ப வந்தீங்க?” என்று கேட்டார்.
எழுந்து, வணங்கிவிட்டுப் பதில் கூறினேன். அவர் நகர்ந்தார்.
உரிய நேரத்தில்விமானம் புறப்பட்டது. முதல் வரிசையில் காமராசர் வீற்றிருந்தார். நான், பின்னால எங்கோ உட்கார்ந்திருந்தேன்.
அரை மணி நேரம் சென்றது. காமராசர் எழுந்து வந்தார். யாரையோ தேடுவதுபோல் தோன்றிற்று. கடைசியில் என் அருகில் வந்தார். எழுந்து நின்று வணங்கினேன்.
“உட்காருங்கள்” என்று சொல்லிக்கொண்டே, காலியாக இருந்த அடுத்த இடத்தில் அமர்ந்தார். அரைமணிக்குமேல், அளவளாவிப் பேசினார்.
காமராசர் என்னோடு எதைப்பற்றி நீண்ட நேரம் பேசினார்? கல்விப்பற்றியே. “உயர்கல்வியைக்கூட ஒடுக்கக்கூடாது. அது நாட்டுப்புற மக்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் எளிதாக்க் கிடைக்கும்படிச் செய்யவேண்டும். பெரிய நகரங்களோடு நிற்காமல், வெளியூர் கல்லூரிகளுக்கும் மேற்பட்டப்படிப்பைத் தாராளமாக அனுமதிக்கவேண்டும்.” இப்படி அறிவுரை கூறினார். பொறுமையாகக் கேட்டேன்.. பிறகு, “அய்யா, உங்களுக்கு செய்தி. இப்போது கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களுள் நூற்றுக்கு அறுபதுக்கும் மேற்பட்டவர்கள், ஒதுக்கப்ட்ட பின்தங்கிய பிரிவுகளைச் சார்ந்தவர்கள்” என்றேன்.
“அப்படியா? மகிழ்ச்சி” என்றார்.
“முதல் தலைமுறையாகப் படிக்கவரும் அவர்கள் அறிவில் ஒன்றும் குறைந்தவர்களில்லை. மற்றவர்களைவிடக் கூடுதல் கவனத்தோடு படித்தால், மணிமணியாகத் தேறிவிடுவார்கள். அரசியலில் மாணவர்கள் பெரும்பங்கு கொள்வதால், கவனச்சிதைவு ஏற்படுகிறது. அதை மட்டுப்படுத்திவிட்டால் எவ்வளவோ முன்னேறிவிடுவார்கள்.
“தாங்கள் முதலமைச்சராய் இருந்த போதுதான ஒரு நல்ல முடிவு எடுக்கப்ட்டது.
“ஆசிரியர்களையும் மாணவர்களையும் தீவிர அரசியல் ஈடுபாட்டிற்கு இழுப்பதில்லை என்ற முக்கிய உடன்படிக்கை ஏற்பட்டது. எதிர்க்கட்சித்தலைவர் அறிஞர் அண்ணா முன்மொழிகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல் அதை ஒரு மனதாக நிறைவேற்றி வைத்தீர்கள்.
“அப்படிப்ட்ட நிலைமையை மீண்டும் உருவாக்கினால் பெரும்பயன் விறையும்” என்றேன்.
“பார்க்கலாம்” என்று கூடச சொல்லவில்லை. புன்முறுவல் பூத்தார். பலன் இருந்தது.
நான் துணைவேந்தராய் இருக்கும்வரையில் எதற்காகவும் சென்னைப் பல்கலைக் கழகத்தை நோக்கி ஊர்வலம் போக வேண்டாமென்று தமது கட்சி மாணவத் தலைவர்களுக்கு ஆணையிட்டார், கல்வி வள்ளல் காமராசர்.
தமிழ்நாட்டு மாணவர்கள், காமராசர் இருந்தவரையில் வன்முறையை விட்டு நன்முறையில் இயங்கி வந்ததற்குப் பெருங்காரணம், காமராசருடைய நல்லுரையே. அவர் செய்த கல்வித் தொண்டு என்னே!
33 இமயம் சாய்ந்தது
2-10-1975 அன்று பிற்பகல், பெருந்தலைவர் காமராசர் படுக்கையில் கிடந்து தவிக்காமல், திடீரென உயிர் நீத்தார். அன்று, அண்ணல் காந்தியின் பிறந்த நாள்.
அடுத்த நாள் காலை, பெரியவருக்கு இறுதி வணக்கம் செலுத்த இராஜாஜி, மண்டபத்திற்கு நானும் என்மனைவியும் சென்றோம். அன்று மாலை இறுதிப்பயணத்தை ஜெமினி மேம்பாலத்திறகு அருகில் உள்ள மாடிக் கட்டடமொன்றின் மேல் இருந்து காண வாய்ப்பு கிடைத்தது.
அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டிய தூரம் மக்கள் கடல். வீடுகளின்மேல் மக்கள்; மரங்களின் மேல் மக்கள்; ஊர் சிறுத்ததோ, மக்கள் பெருத்தனரோ என்று தயங்கும் அளவு பெருங்கூட்டம். ‘பீரங்கி வண்டியில்’ தலைவரின் உடல் சென்றது. அப்போது நல்ல மழை; தெருவை அடைத்துக்கொண்டு நின்ற மக்களும்- ஆண்களும் பெண்களும்- குழந்தைகளும் முதியவர்களும் -கொட்டும் மழையில் நின்றுகொண்டே, கலையாது, கதறிக்கதறி அழுதார்கள்.
மணம் பரப்பும் மாலைகளுக்கு நடுவே, புகழ் மணம் பரப்பும் காமராசரின் திருமுகத்தைக்கண்டோம். நெஞ்சு சுக்கு நூறாக வெடித்துவிடும்போல் இருந்தது. அதற்கு அஞ்சி, குழுமியிருந்ந மக்கள் மேல் கவனத்தைத்திருப்பினேன். என் சொல்வேன்? கூறத்தகாதவன் கூறினான் என்ற சொல்லி ஒதுக்கவா!
இருவருடைய ஆங்கிலப் பேச்சு என் காதில் விழுந்தது. “இந்தப் பெரியவரைக் க்ண்டு வணக்கம் செய்ய எத்தனைக் கூட்டம்! அடைமழையிலும் முப்பது இலட்சம் மக்கள் கூடி கண்ணீர் வடிக்கிறார்களே!” என்றார் ஒருவர்.
“ஆம்! காமராசர் முதல் அமைச்சர் பதவியை விட்டுப் பன்னிரண்டு ஆண்டுகள் பறந்துவிட்டன. இருந்தும் முப்பது இலட்சம் மகள் வந்து வணக்கம் செலுத்துகிறார்களே! எதனால்? கோடி கோடியாகப் பணத்தை வழங்கியபோதும் காசு தம்மிடம் சேரவிடாத காமராசருடைய நாணயத்திற்குக் காணிக்கை இது” என்று நீண்ட உரையாற்றினார் அடுத்தவர்.
“இப்போது முப்பது இலட்சம் பேர் கூடி பெருமைப்படுத்துகிறார்கள். அன்று, சொந்த ஊரிலேயே, தமிழர் யாரும் அடையாத புகழின் சிகரத்தில் வீற்றிருக்கையில், ஆயிரத்து முந்நூறு வாக்குக் குறைவால் தோற்கடித்து அவமானப்படுத்திவிட்டார்களே! அதுதான் எனக்குப் புரியவில்லை,” என்றார் முதல் இளைஞர்.
“இதில் புரியாத புதிர் ஒன்றும் இல்லை. இதுவே அவர்கள் புத்தி. நாங்கள் நாலாஞ்சாதியாக இருக்கலாமா வென்று வேளைக்கு வேளை கத்துவார்கள். தப்பித்தவறி அவர்களுள் ஒருவர் பெரியவராகிவிட்டால், உடனே பாய்ந்து கடித்துக் குதறிவிட்டே மறுவேலை பார்ப்பார்கள். தமிழர்களைத் தவிர வேறு யாரும் காமராசரைப் போன்ற அப்பழுகில்லாத பெருந்தலைவரை அவமானப்படுத்த முன் வரமாட்டார்கள். ஒப்பாரி ஒன்றே அவர்களுக்குத் தெரியும். ஆதரிக்க வேண்டியர்களை, ஆதரிக்க வேண்டியவற்றைத்தக்க சமயத்தில் ஆதரிக்க மாட்டார்கள்” என்று இரண்டாவது இளைஞர் படம் பிடித்துக் காட்டினார்.
அரவம் கடித்து துடிக்கும் வேளை ஆயிரம் தேள்கள் ஒன்றாகக் கொட்டினாற்போல் இருந்தது. வெகுண்டு பயன்?
தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சியில் படர்ந்திருந்த பயங்கர இருளை, காமராசர் தம் ஒளி கொண்டு நீக்கி, ஒரு பொற்காலத்தையே படைத்தார்.
M.Mani
Even when he was defeated in the 1967 General Election he never got angry and he commented to his friends that this is real democracy.
P.Ramasamy
A perfect gendelman in the world.
UthangaraiP.Ramasamy
A honest man in the world
UthangaraiP.Ramasamy
A honest man in the world.
KATHIRVEL ARUPPUKOTTAI z
GOD HAD TO CREATE ANOTHER MAN LIKE PERUNTHALAIVAR
Mani
Real hero in life ….
A perfect simple man forever ….
Manju
Whoa, things just got a whole lot eaiesr.