ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர்

posted in: admire | 0

வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில் சாப்பிடும் காலம் இது. ஆனால் எளிமையாக வாழ்ந்த காமராஜர் உணவு பழக்க வழக்கத்திலும் எளிமையை கடைபிடித்தார்.

10428093_895988207087339_2948195232669360985_n

சாதம், ஒரு குழம்பு, கொஞ்சம் கீரை மசியல், ஒரு பொரியல் சிறிது மோர் என்ற அளவில் மிக எளிமையாக உணவு வகை இருந்தாலே காமராஜருக்குப் போதுமானது. அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்த பைரவனிடம் அவர், நாம் அனாவசியமாக செலவு செய்யக் கூடாது.

ரேசன் அரிசியைத்தான் வாங்கிச் சாப்பிட வேண்டும். சாதாரண மக்கள் எந்த உணவைச் சாப்பிட்டு வருகிறார்களோ, அதைத்தான் நாம் சாப்பிட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார்.ரேசன் அரிசி என்றால், இப்போது உள்ள உயர் ரக அரிசி அல்ல.

அந்தக் காலத்தில் கொட்டை கொட்டையாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மிக மோசமானதாகவும் ரேசன் அரிசி இருக்கும். அதை வாங்கித் தீட்டிக் கல் பொறுக்கிச் சுத்தப்படுத்தி தான் சமைக்க வேண்டும். அப்படிச் சமைத்தாலும் சாதம் நாற்றமெடுக்கும்.

இதனால் சாதாரண மக்களே ரேசன் அரிசியை வாங்குவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தனர். பரம ஏழைகளும் கூலித் தொழிலாளர்களும் தான் ரேசன் அரிசியைச் சமைத்து உண்பார்கள்.

இப்படிப்பட்ட நாற்றமெடுத்த ரேசன் அரிசியைக் கொண்டு சமைத்த சாதத்தைத்தான் காமராஜர் பல ஆண்டு காலம் முகம் சுளிக்காமல் சாப்பிட்டு வந்தார்.

ரேசன் அரிசி சாதத்தில் வரும் நாற்றத்தைச் சரிக்கட்ட சாப்பாட்டில் ஓரிரு சொட்டு நெய்யை விட்டாலே போதும் என்று யாரோ சொல்ல காமராஜர் ஐம்பது கிராம் நெய்யை வாங்கி வரச் செய்து, தினசரி இரண்டு சொட்டு நெய்யைச் சாப்பாட்டில் தெளித்துக் கொண்டு சாப்பிட்டு வந்தாராம்.

நெய் வாங்கும் போது ஐம்பது கிராமுக்கு மேல் வாங்கக் கூடாது ஒரு மாதத்திற்கு அந்த நெய்யைத்தான் செலவிட வேண்டும் என்று காமராஜர் கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார்.

சுமார் ஏழெட்டு ஆண்டுகள் வரை நாற்றமெடுத்த ரேசன் அரிசியையே சாப்பிட்டு வந்த காமராஜர், பின்னர் சக்தி அரிசி, எனப்படும் கைக்குத்தல் அரிசியை வாங்கி வந்து சமைக்கும்படி பைரவனுக்கு உத்தரவிட்டார்.
வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தான் அவர் சன்னரக அரிசி சாதம் சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *